கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் வெளியான ‘இந்தியன்’ படம் பிரமாண்ட வெற்றியைப் பெற்றது. இதன் தொடர்ச்சியாக ‘இந்தியன்-2’ படத்தை இந்தக் கூட்டணி 2019 ஆம் ஆண்டு ஆரம்பித்தது.
‘லைகா’ நிறுவனத்தின் தயாரிப்பில் தொடங்கப்பட்ட இந்தப் படம், பல்வேறு காரணங்களால் அவ்வப்போது நிறுத்தப்பட்டது.
‘தாத்தா’ வேட ஒப்பனை கமலுக்கு பிடிக்காததால் கொஞ்ச நாட்கள் படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்தனர்.
அந்த பிரச்சினை சரி செய்யப்பட்டு மீண்டும் ஷுட்டிங் ஆரம்பமானது.
படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தது, பட்ஜெட் அதிகமானதால் ஷங்கருக்கும், லைகாவுக்கும் ஏற்பட்ட மோதல் போன்ற காரணங்களால் மீண்டும் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இந்த நேரத்தில் தெலுங்கில், தில் ராஜு தயாரிப்பில், ராம் சரணை, ஹீரோவாக வைத்து ‘கேம் சேஞ்சர்’ எனும் படத்தை ஷங்கர் தொடங்கினார். அந்தப் பட வேலைகள் நடந்து வந்த நிலையில், ‘இந்தியன் 2’ பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது.
உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம், லைகாவுடன் ‘இந்தியன்-2’ பட தயாரிப்பில் இணைந்தது.
அதன்பின் ‘இந்தியன் 2’ படவேலைகள் தீவிரமடைந்தன. கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரித்தி சிங், டெல்லி கணேஷ் ஆகியோருடன் விவேக்கும், நெடுமுடி வேணுவும் நடித்தனர்.
விவேக், நெடுமுடி வேணு இருவரும் இப்போது உயிருடன் இல்லை. ஏஐ தொழில்நுட்பத்தில் விவேக்கின் தோற்றத்தை உருவாக்கி, அவர் சம்பந்தப்பட்ட மீதமுள்ள காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. கமல், தனது போர்ஷனை ஏற்கனவே நடித்து கொடுத்து விட்டார்.
சித்தார்த் – பிரியா பவானி சங்கர் சம்மந்தப்பட்ட ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்பட வேண்டி இருந்தது. அந்தப் பாடல் காட்சி வடசென்னை குடியிருப்புகளில் இப்போது படமாக்கப்பட்டு வருகிறது.
இதற்காக அங்குள்ள சுவர்களில் இந்தியன் தாத்தா கமல்ஹாசனின் பிரமாண்ட படங்கள் வரையப்பட்டுள்ளன.
அதன் பின்னணியில் பாடல் காட்சியை படமாக்கி வருகிறார் ஷங்கர். இந்தப் பாடல் காட்சியுடன் முழு படப்பிடிப்பும் முடிந்து விடும்.
‘இந்தியன் – 2’ ஏப்ரல் மாதம் வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால் கமல் நடித்துள்ள ‘கல்கி 2898’ திரைப்படம் மே மாதம் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆவதால் ‘இந்தியன்-2’ வெளியீடு தள்ளிப்போகும்.
– பாப்பாங்குளம் பாரதி.