ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தமிழில் தொடர் வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் அட்லீ.
கடந்த ஆண்டு வெளிவந்த ‘ஜவான்’ படத்தின் மூலம் இந்தி திரையுலகிலும் அவர் கால் பதித்தார்.
ஷாருக்கான் கதாநாயகனாக நடித்த இந்தப் படம், உலகளவில் 1,160 கோடி ரூபாய் வசூலித்தது. அட்லீயின் திரை உலக வாழ்க்கையில் பெரிய வெற்றிப்படமாகவும் அமைந்தது.
இந்த நிலையில் ஆங்கில இதழ் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அட்லீ, பல்வேறு விஷயங்கள் குறித்து மனம் திறந்தார்.
“என்னுடைய முதல் நாள் ஷூட்டிங் இன்னும் நினைவிருக்கிறது. இந்தியாவின் மிகப் பெரிய இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிக் கொண்டிருந்தேன்.
அது, ‘எந்திரன்’ படத்தின் ஷுட்டிங். படப்பிடிப்பு அரங்கத்துக்கு ’சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த் வந்திருந்தார். அவரைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தேன்.
என் வாழ்வில் எப்போதும் அற்புதங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும். மிகப் பெரிய இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்து, ரஜினியைப் பார்த்திருக்கிறேன். விஜய்யை வைத்து படம் இயக்கியிருக்கிறேன்.
இப்போது ஷாருக்கான். என் வாழ்வில் அற்புதங்கள் நிகழ்ந்துகொண்டேயிருக்கின்றன” என்று நெகிழ்ந்தார், அட்லீ.
தமிழ், இந்தி படங்களை இயக்கி அதில் அபார வெற்றியும் கண்டுள்ள அட்லீயின் அடுத்த இலக்கு ‘ஹாலிவுட்’.
இது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அட்லீ, ஆம்.. ஹாலிவுட் படத்தை இயக்கப் போகிறேன். தமிழில் இருந்து. பாலிவுட்டை அடைவதற்கு எனக்கு 8 வருடங்கள் தேவைப்பட்டன.
அடுத்த 3 வருடங்களில் ஹாலிவுட்டில் இருந்து மிகப்பெரிய ஒரு அறிவிப்பை நீங்கள் காண முடியும். நான் அதை செய்து கொண்டு இருக்கிறேன்” என்று பதில் அளித்தார்.
ஹாலிவுட்டிலும் தெறிக்க விடுங்க பாஸ்!
– பாப்பாங்குளம் பாரதி.