1974 – ஆம் ஆண்டு, விமானப் படை வேலையை ராஜினாமா செய்துவிட்டு, முழுநேர நாடக நடிகராகனார் டெல்லி கணேஷ்.
டெல்லி கணேஷின் நாடகங்களை ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலச்சந்தர் ஒருமுறை பார்த்துள்ளார். டெல்லி கணேஷ், வசனம் பேசும் பாணியும், உடல்மொழியும் பிடித்துப்போய், அவரை தனது ‘பட்டின பிரவேசம்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் செய்தார், பாலசந்தர்.
கமல், ரஜினி, விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், கார்த்திக், முரளி, மோகன், அஜித், விஜய் என அனைத்து ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
தமிழில் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் டெல்லி கணேஷ் நடித்துள்ளார். அவர் நடித்த மொத்த படங்களின் எண்ணிக்கை 400-க்கும் அதிகம்.
வில்லன், காமெடி என பலதரப்பட்ட கேரக்டர்களில் நடித்துள்ள டெல்லி கணேஷுக்கு, கமல்ஹாசனின் படங்களில் ஏதேனும் ஒரு முக்கியமான கேரக்டர் நிச்சயம் உண்டு. ‘நாயகன்’ படத்தில், வேலு நாயக்கருடன் ஐயராகவே வாழ்ந்து காட்டினார்.
ஆனால், கமல்ஹாசனின் ‘அவ்வை சண்முகி’ படத்தில் நடிக்க மறுத்துள்ளார்.
இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டெல்லி கணேஷ், ‘அவ்வை சண்முகி’ படம் ஓரிரு நாட்கள் நடித்தேன். அதில் நிறைய காமெடி காட்சிகள் வந்தன.
இதனால் பயந்துபோன நான், எழுத்தாளர் கிரேஸி மோகனிடம் சென்று, “எனக்கு எத்தனை சீன் வருகிறது” என்று கேட்டேன்.
அதற்கு அவர், “படம் ஃபுல்லா நீ வரய்யா” என்று சொன்னார்.
உடனே நான் பயத்தோடு, “அப்படியா, இவ்வளவு பெரிய காமெடி என்னால் பண்ண முடியுமாயா? நீ பாட்டுக்கு எழுதிட்டுப் போற, இதுக்கு ஒரு நல்ல காமெடியனை வச்சிக்கோங்க” என்று சொன்னேன்.
இதை கேட்ட கிரேஸி மோகன், “இதை நீ கமல்ஹாசனிடம் போய்ச் சொல்” என்று சொல்ல, நான் கமல்ஹாசனிடம் சென்று, “சார் இவ்வளவு பெரிய காமெடி என்னால் பண்ண முடியுமா என்று தெரியவில்லை. நீங்கள் வேறு ஒரு நல்ல ஆர்டிஸ்டா செலக்ட் பண்ணுங்க” என்று சொன்னேன்.
உங்களுக்கு காமெடி பண்ண தெரியும் என்பது எனக்குத் தெரியும். பண்ணுங்க என்று என்னை ஊக்கப்படுத்தினார் கமல்ஹாசன். அவர் சொன்னதற்கு பிறகு ஒரு தைரியம் வந்து பண்ண ஆரம்பிச்சேன்.
கமலின் கணிப்பு வீண் போகவில்லை. எல்லோரும் ரசிக்கும் அளவிற்கு படம் நல்ல காமெடி படமாக அமைந்தது. என்னுடைய கேரக்டரை படம் முழுக்க மக்கள் ரசித்துப் பார்த்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது” என்று கூறியுள்ளார்.
– மணி அமுதன்