தனுஷ் புதிய படத்தின் பெயர் ‘குபேரா’!

‘நடிப்பு அசுரன்‘ தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலை குவித்தது.

இதையடுத்து அவர் தனது 50-வது படமான ‘ராயன்’ படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இயக்குநர் செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், நடிகை துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ராயன்’ மே மாதம் வெளியாக உள்ளது.

தனுஷின் 51-வது படத்தை தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்குகிறார். இவர் தெலுங்கில் வெளியான ‘ஃபிடா’ ‘லவ் ஸ்டோரி’ உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலம் ஆனவர்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் ‘பான் இந்தியா’ படமாக இந்தப்படம் உருவாகி உள்ளது.

தனுஷ் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இந்தப் படத்தில் நாகார்ஜூனா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு படத்தின் முதல் தோற்றத்தையும், டைட்டிலையும் படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. படத்துக்கு ‘குபேரா’ என தலைப்பிடப்பட்டுள்ளது. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.

முதல் தோற்ற வீடியோவில், கிழிந்த சட்டை, அழுக்கான உடம்புடன் மீசையும், தாடியுமாக பிச்சைக்காரன் போல் தனுஷ் காட்சி அளிக்கிறார்.

அவருக்கு பின்புறம் சிவன், பார்வதியின் போட்டோக்கள் உள்ளன. ‘குபேரா’ என படத்துக்கு தலைப்பு வைத்துவிட்டு, தனுஷை அன்னக்காவடி போல் போஸ்டரில் காட்டி இருப்பது, படத்தின் மீதான ஆர்வத்தை ரசிகர்களுக்கு அதிகப்படுத்தியுள்ளது.

-பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment