தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களின் பங்களிப்பு!

தனுஷ் நடித்த 2019 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘அசுரன்’ படம் ஊடகங்கள் உள்ளிட்ட சகல தரப்பினராலும், தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடப்பட்டது.

அந்த வெற்றியில் எழுத்தாளர் பூமணிக்கும் கொஞ்சம் பங்கு உண்டு. அவர் எழுதிய ‘வெக்கை’ நாவல் தான் ‘அசுரன்’. இதன் வெற்றியால் இன்று நிறைய இயக்குநர்கள், நூலகங்களில் தமிழ் நாவல்களை மனப்பாடம் செய்து கொண்டிருப்பதாக ஒரு தகவல்.

அசுரன் வெற்றிக்கு முன்பே கல்கியின் ‘பொன்னியின் செல்வனை’ படமாக்கும் முயற்சியில் இறங்கி விட்டார் மணிரத்னம். இது ஒன்றும் புதிய முயற்சி அல்ல.

50 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்தாளர்களை தமிழ் சினிமா பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது.

ஜெயகாந்தனில் இருந்து ஆரம்பிக்கலாம். தனது ‘உன்னைப்போல் ஒருவன்’ ‘யாருக்காக அழுதான்’ ஆகிய இரு நாவல்களை அவரே இயக்கினார்.

ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ ஆகிய இரண்டு நாவல்களும் ஏ.பீம்சிங் கை வண்ணத்தில் திரைப்படமாகி கவனம் ஈர்த்தன.

சிவசங்கரியின், ‘ஒரு சிங்கம் முயலாகிறது’ நாவல் முக்தா சீனிவாசன் இயக்கத்தில் ‘அவன் அவள் அது’ என்ற பெயரில் படமானது.

கே.பாலசந்தர் இயக்கிய ‘47 நாட்கள்’ சிவசங்கரியின் கதைதான். ‘சிறை’ ‘ஒரு வீடு ஒரு வாசல்’ ஆகிய படங்களின் கதாசிரியர் அனுராதா ரமணன். மகேந்திரனின் முதல் படமே நாவல்தான்.

1966-ல் உமா சந்திரன் எழுதிய ‘முள்ளும் மலரும்’ நாவல்தான் மகேந்திரனின் முதல் படம். மகேந்திரனின் அழியா காவியமான ‘உதிரிப்பூக்கள்’ புதுமைப்பித்தனின் ‘சிற்றன்னை’ நாவல். பொன்னீலனின் ‘பூட்டாத பூட்டுக்கள்’ நாவலை அவர் திரைப்படம் ஆக்கினார்.

நாவல்களை படமாக்குவதில் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்துக்கு அலாதி பிரியம் உண்டு. சுஜாதாவின் ‘ப்ரியா’ கதையை அதே பெயரில் படமாக்கினார் பஞ்சு. ரஜினிகாந்த் நடித்த இந்த படம் 175 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

‘கழுகு’ பஞ்சு அருணாசலத்தின் தயாரிப்பில் உருவான படம். அதன் பெரும் பகுதி படப்பிடிப்பு குற்றாலத்தில் நடந்ததால் அங்கு ரொம்ப நாள் தங்கி இருந்தார் அவர். அப்போது எழுத்தாளர் தாமரை செந்தூர் பாண்டியைச் சந்திக்க நேர்ந்தது.

தாமரை செந்தூர்பாண்டி அளித்த ஒரு நாவலை படமாக்கினார் பஞ்சு. அது சிவகுமார்-ராதா நடித்த ‘ஆனந்தராகம்.’

இயக்குநர் ஷங்கர் நாவல் எதனையும் படமாக்கியதில்லை. ஆனால் முதல் படத்தில் இருந்தே அவர் எழுத்தாளர்களுடன் பயணித்து வருபவர்.

‘ஜென்டில்மேன்’ ‘காதலன்’ படங்களின் வசனகர்த்தா பாலகுமாரன். மூன்றாவது படமான ‘இந்தியன்’ படத்தில் இணைந்த ஷங்கர்-சுஜாதா கூட்டணி எந்திரன் வரை தொடர்ந்தது.

ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநர் அவதாரம் எடுத்த கே.வி.ஆனந்த் ஆரம்பகாலத்தில் இரட்டை எழுத்தாளர்கள் சுபாவுடன் பயணித்தவர்.

அதேபோல் இயக்குநர் ஏ.வெங்கடேஷும் தொடக்கத்தில் பட்டுக்கோட்டை பிரபாகரனுடன் கைகோர்த்து செயல்பட்டார்.

தமிழ் எழுத்தாளர்களில் எவரது நாவல்கள் அதிக அளவில் திரைப்படமாகி உள்ளது?
மகரிஷி.

அவர் எழுதிய முதல் நாவல் பனிமலை. அதனை கே.எஸ்.கோபால கிருஷ்ணன் ‘என்னதான் முடிவு?’ என்ற பெயரில் படமாக்கினார்.

‘புவனா ஒர் கேள்விக்குறி’, ‘பத்ரகாளி’, ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு’ ‘வட்டத்துக்குள் சதுரம்’ ஆகிய படங்கள் மகரிஷியின் படைப்புகள் அகிலனின் ‘பாவை விளக்கு’ சிவாஜி நடிப்பில் வெளிவந்தது.

தி.ஜானகிராமனின் மோகமுள் ஞானசேகரன் இயக்கத்தில் படமாகியிருக்கிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நடித்த கடைசி படமான ‘நதியை தேடி வந்த கடல்’ மகரிஷியின் நாவல்.

இந்த நாவலைப் படமாக்க மகரிஷிக்கு 22 ஆயிரம் ரூபாய் சன்மானமாக கொடுக்கப்பட்டதாம்.

மகரிஷிக்கு அடுத்த படியாக சுஜாதாவின் நாவல்கள் (ப்ரியா, காயத்ரி, விக்ரம், கரை எல்லாம் செண்பகப்பூ. ஆனந்த தாண்டவம்) அதிக அளவில் சினிமாவாக்கப்பட்டது.

வருத்தம் என்னவெனில் ஜெயகாந்தன், ஜெயபாரதி, பூமணி, பாலகுமாரன் ஆகியோர் சில முயற்சிகளைச் செய்தாலும், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்கள் திரையில் வசனம் எழுதினாலும் பெரிய அளவில் எழுத்தாளர்கள் யாரும் இயக்குநராக வெள்ளித்திரையில் வெற்றிக்கொடி நாட்டவில்லை.

-பி.எம்.எம்.

Comments (0)
Add Comment