உதட்டளவில் பழகுவதைவிட உடனிருந்து உதவுவதே சிறந்தது!

அன்னை ஜானகி எம்.ஜி.ஆரின் கொள்கை

தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் என்னும் சிறப்புக்குரிய அன்னை ஜானகி எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் (நவம்பர் – 30) விரைவில் கொண்டாடப்பட உள்ளது. நூற்றாண்டைத் தாண்டி நினைவுகூறப்படும் அன்னை ஜானகி எம்.ஜி.ஆரின் பிறந்தநாளையொட்டி ஒரு சிறப்புப் பதிவு: 

1. வைக்கம் நாராயணி ஜானகி என்கிற பெயரைத் தான் சுருக்கி வி.என். ஜானகி என்று பலரும் அழைத்தார்கள்.

2. அவர் பிறந்தது கேரளா மாநிலத்தில் உள்ள வைக்கம் என்கிற ஊரில். பொன்மனச் சேரி இல்லத்தில் ஜானகி அம்மாள் பிறந்தது 1923ஆம் ஆண்டு, நவம்பர் 30-ம் தேதி.

3. இவருடைய தந்தை ராஜகோபால் அய்யர். தாயார் வைக்கம் நாராயணி அம்மாள். இவருடைய தந்தை ராஜகோபாலின் பூர்வீகம் தமிழகத்தில் உள்ள கும்பகோணம்.

இவருடைய சகோதரர் பாபநாசம் சிவன் நாடறிந்த பிரபலமான பாடலாசிரியர். தமிழ்த் தியாகய்யர் என்று அழைக்கப்பட்டவர். ராஜகோபால் அய்யரும் பல திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதியிருக்கிறார்.

4. தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தில் பள்ளிப்படிபை முடித்தவர் ஜானகி. அத்துடன் பல மொழிகளைச் சொந்த விருப்பத்தின் பேரில் கற்றுக் கொண்டார். இவருக்கு தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராட்டியம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் புலமை உண்டு.

5. கேரளாவிலிருந்து ஜானகி தனது 12வது வயதில், 1936 ஆம் ஆண்டில், தன் தாயாருடன் தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்திற்கு இடம் பெயர்ந்தார்.

6. பரத நாட்டியம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம் உள்ளிட்ட தென்னிந்தியக் கலைகளில் பயிற்சி பெற்ற ஜானகி பிரபல திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளருமான கே.சுப்ரமணியம் நடத்தி வந்த ‘நிருத்யோதயா’ நாட்டியப் பள்ளியில் முறைப்படி நடனம் பயின்றவர்.

7.”பொழுது போகவில்லையே என்று சும்மா இருக்கும்போது தான் நமது மனம், தேவையில்லாத விஷயங்களைத் தேடிப் போகிறது. அதைத் தவிர்க்க இது நல்ல வழி கலைகளைக் கற்பது தான்” என்று பல்வேறு கலைகளையும் நேசிக்கச் சொன்னவர் ஜானகி.

8. பல மொழிகளைத் தெரிந்திருந்த ஜானகி தன்னைச் சந்திக்க வருபவர்களிடம் அந்தந்த மொழிகளில் பதில் அளித்திருக்கிறார்.

அவரைச் சந்திக்கச் சென்ற செய்தியாளர்கள் பலரும் இது குறித்து ஆச்சர்யப்பட்டிருக்கிறார்கள்.

9. துயரப்படும் நெஞ்சங்களுக்கும் கஷ்டப்படும் ஏழைகளுக்கும் கைகொடுத்து உதவியவர் ஜானகி. “உதட்டளவில் பழகுவதை விட உடனிருந்து உதவுவதே சிறந்தது” என்பது அவர் கடமை வாக்கியம்.

10. தங்களிடம் இருக்கிற பதில்களுக்கு ஏற்றபடி கேள்விகளை எதிர்பார்த்து எரிச்சல்படுகிற சிலரைப் போல அல்லாமல், எந்தக் கேள்விக்கும் துணிச்சலோடும் உறுதியோடும் பதில் சொல்வார் வி.என். ஜானகி.

11. ‘நாம் வசதியான குடும்பத்தில் பிறந்துள்ளோம் நாம் நினைத்தால் நமக்கு எல்லாமே நடக்கும் என்ற எண்ணம் நம்மிடம் இருக்கக்கூடாது’ என்று அவர் சொன்னது காலத்திற்கும் தேவையான, கருத்தான அறிவுரை!

12. ஜானகி அன்பாகப் பழகும் இயல்புடையவர். அவர் யாரிடமும் அதிர்ந்து உரக்கப் பேசியதில்லை. எளிமையான குணம் அவருக்கு உண்டு. மற்றவர்கள் நலனில் மிகுந்த அக்கறை உடையவர்.

13. எம்.ஜி.ஆர். முதல்வரான பிறகு எவ்வளவு எளிமையாக இருந்தாரோ அதே அளவு எளிமையாக ஜானகியும் இருந்தார்.

14. பல புதுமுகங்களை தன் படங்களில் அறிமுகம் செய்துகொண்டிருந்த இயக்குநர் கே.சுப்பிரமணியம் தனது ‘இன்பசாகரன்’ என்ற படத்தில் ஜானகிக்கு நாட்டியமாடும் வேடம் அளித்தார். அப்போது ஜானகிக்கு வயது 13.

15. ஜானகியுடன் இயக்குநர் கே.சுப்பிரமணியத்தின் மனைவியும், நடிகையுமான எஸ்.டி. சுப்புலட்சுமியும் சேர்ந்து இந்தியா முழுவதும் நாட்டிய நாடகங்களை நடத்தினார்கள் வள்ளி திருமணம் நாட்டிய நாடகத்தில் ஜானகி முருகனாகவும், சுப்புலட்சுமி வள்ளியாகவும் நடித்திருக்கிறார்கள்.

– ‘அன்னை ஜானகி எம்ஜிஆர்-100’  நூற்றாண்டு மலரிலிருந்து ஒரு பகுதி. 

**** 

தொடர்புக்கு:

மெரினா புக்ஸ்
தரணி காம்ப்ளெக்ஸ்,
1A, திருநாத முதலி நகர்,
திருப்பத்தூர்.
தமிழ்நாடு, இந்தியா – 635 601

பேச: 88834 88866

அன்னை ஜானகி எம்.ஜி.ஆர் நூற்றாண்டுச் சிறப்பு மலரைப் பெற கீழே உள்ள இணைப்பைத் தொடுக…

https://marinabooks.com/detailed?id=1499-0326-2509-9479

Comments (0)
Add Comment