வைஜெயந்திமாலா: காலத்தால் அழிக்கமுடியாத அழகு ஓவியம்!

“என் சலங்கைக்கு பதில் சொல்லடி” என பத்மினிக்கே சவால்விட்ட கால்கள் தள்ளாடுகின்றன‌. பரத நாட்டியத்தின் மொத்த அபிநயங்களையும் ஒத்தையாக காட்டிய அந்த கைகள் நடுங்குகின்றன‌.

விரல் அசைவிலே கோடான கோடி மக்களின் விழிகளையும் மனதையும் ஆட்டிவைத்தவரின் கரங்கள் உயரவே உதவி தேவைப்படுகின்றது.

பார்ப்போரையெல்லாம் வசீகரித்த அந்த அழகு முகத்தின் வனப்பினை காணவில்லை, எல்லா அம்சங்களும் பொருந்திய பெண் என வண்டாக மக்களை ஆர்ப்பரிக்க செய்த முகத்தின் சௌந்தர்யம் அகன்றுவிட்டது.

காலம் என்னென்ன மாயங்களை செய்யும் என்பதும், இரக்கமே இல்லாத கொடிய அரக்கன் அது என்பதும், எல்லோரையும் உயரத்தில் வைப்பதும் ஓய்வில் வைப்பதும் காலமே என்பதை உணர்ந்து காலத்தின் சக்தியின் முன் மண்டியிடத் தோன்றுகின்றது.

எந்த நடிகைக்கும் இல்லா ஒரு சிறப்பு வையெந்திமாலாவுக்கு உண்டு, அது அந்தக் கண்களின் ஒற்றுமை. எந்த நடிகருக்கும் ஈடுகொடுக்கும் கண்கள் அவை.

ஜெமினிகணேசனுடன் அவர் நிற்கும் போது அந்தக் கண்களின் ஒற்றுமை அழகாகத் தெரியும், தேனிலவு படத்தில் அழகான காஷ்மீரை விட அக்காட்சிதான் அழகு.

ஜெமினிகணேசனின் குறும்பு கண்களுக்கு அசானயமாக பதில் சொல்லி மின்னிய கண்கள் அவை.

அந்தக் கண்கள் மட்டும் அவரை இப்போது அடையாளம் காட்டுகின்றது, வேறு எல்லா பொலிவினையும் காலம் எடுத்து கொண்டது.

ஆனாலும் ஒன்று நிஜம்.

அழகு அழியக்கூடியதுதான், ஆனால் அழகான நினைவுகள் ஒருகாலமும் அழிவதில்லை.

நன்றி: முகநூல் பதிவு.

 

Comments (0)
Add Comment