கடந்த காலங்களில் இதே நாளில் வெளியான திரைப்படங்கள்! 

மார்ச் 1. இந்தத் தேதியில் எந்தெந்த ஆண்டுகளில் என்னென்ன படங்கள் வெளியாகின என்று பார்க்கலாமா?

90 எம்எல் – 2019ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை அனிதா உதீப் இயக்கியிருந்தார். இவர் ஏற்கனவே ‘குளிர் 100 டிகிரி’ படத்தை இயக்கியவர். மேலும், ‘விசில்’ படத்தை வரும் ‘அழகிய அசுரா’ பாடலைப் பாடியவர்.

90 எம்எல் படத்தில் ஓவியா, அன்சன் பால், மோனிஷா ராம், மாசூம் சங்கர், ஸ்ரீ கோபிகா, பொம்மு லட்சுமி உட்படப் பலர் நடித்திருந்தனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் ஓவியா பெற்ற வரவேற்பையடுத்து, இந்தப் படம் பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்படத்துக்கு இசையமைத்தவர் சிலம்பரசன். இவரது இசையில் ’மரண மட்ட’ என்ற பாடலையும் ஓவியா பாடியிருந்தார்.

அடடே – கமல் சரோமுனி இயக்கிய இந்தப் படத்தில் அரு பழனி, அலெக்சாண்டர் பாபு உட்படப் பலர் நடித்திருந்தனர். இது 2019ஆம் ஆண்டு வெளியானது.

தாதா 87 – ‘ஆண்டவருக்கே அண்ணண்டா’ என்ற வாசகங்களுடன் விளம்பரப்படுத்தப்பட்ட இந்தப் படத்தில் கமல்ஹாசனின் சகோதரர் சாரு ஹாசன் உடன் ஜனகராஜ் சேர்ந்து நடித்திருந்தார்.

அந்த வகையில், இது ரசிகர்களிடம் கவனிப்பைப் பெற்றது. விஜய் ஸ்ரீ இதனை இயக்கியிருந்தார். இது 2019ஆம் ஆண்டு வெளியானது.

பிரிவதில்லை – சீதாபதி ராம் இயக்கிய இந்தப் படத்தில் விவின், நந்தினி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இது 2019ஆம் ஆண்டு வெளியானது.

திருமணம் – ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்திற்குப் பிறகு சிறிது இடைவெளி விட்டு சேரன் இயக்கி நடித்த படம் இது. இதில் நாயகன் நாயகியாக உமாபதி ராமையாவும் காவ்யா சுரேஷும் நடித்திருந்தனர்.

சமகாலத் தலைமுறையினர் திருமணத்தை எவ்வாறு அணுகுகின்றனர், அவர்களுக்கு முந்தைய தலைமுறை அதனை எப்படி நோக்குகிறது என்ற கோணத்தில் இக்கதை அமைக்கப்பட்டிருந்தது.

இதன் பாடல்களுக்கு சித்தார்த் விபின் இசையமைத்திருந்தார். பின்னணி இசையை சபேஷ் – முரளி தந்திருந்தனர். இது 2019ஆம் ஆண்டு வெளியானது.

விளம்பரம் – ஐஸ்வர்யா ராஜேஷ் ஆரம்பக் காலத்தில் நடித்த படங்களில் இதுவும் ஒன்று. இதில் ‘ராமானுஜன்’ அபிநய், தம்பி ராமையா, சுமன் ஷெட்டி, சிசர் மனோகர் உட்படப் பலர் நடித்திருந்தனர். கே.ஏ.சூரியநிதி இதனை இயக்கியிருந்தார். இது 2019ஆம் ஆண்டு வெளியானது.

தடம் – மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘சைலண்டாக’ வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இது 2019ஆம் ஆண்டு வெளியானது. பின்னர் தெலுங்கிலும் இந்தியிலும் ‘ரீமேக்’ செய்யப்பட்டது.

ஒரே தோற்றத்தைக் கொண்ட இரட்டையர்களில் யார் குற்றவாளி என்று கண்டறிவதில் திணறும் காவல் துறை, பின்னர் அவர்களிருவரையுமே விடுவிப்பதாக இப்படத்தின் முடிவு அமையும். இதில் சவால்மிக்க அந்த இரட்டையர் பாத்திரங்களில் அருண் விஜய் கலக்கியிருந்தார்.

இதில் தான்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட், வித்யா பிரதீப், சோனியா அகர்வால், சத்யஜித், ‘பெப்சி’ விஜயன், யோகிபாபு, ஜார்ஜ் உட்படப் பலர் நடித்திருந்தனர். அருண் ராஜ் இதற்கு இசையமைத்திருந்தார்.

ஆண்டவ பெருமாள் – இது 2013ஆம் ஆண்டு வெளியானது. சிவன், ஈடன் குரியகோஸ், சசி, லொள்ளுசபா ஜீவா உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்தை பிரியன் இயக்கியிருந்தார்.

சுடச்சுட – இதயன் இப்படத்தை இயக்கி நாயகனாக நடித்திருந்தார். இதில் ஸ்ரீ இரா, லிமா உட்படப் பலர் நடித்திருந்தனர். இது 2013ஆம் ஆண்டு வெளியானது.

சந்தமாமா – 2013ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், ஸ்வேதா பிரசாத் உடன் கருணாஸ், இளவரசு, சுஜாதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஆர். ராதாகிருஷ்ணன் இயக்கிய இந்தப் படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார்.

லொள்ளு தாதா பராக் பராக் – மன்சூர் அலிகான், ஷில்பா நடித்த இப்படத்தை கே.வியாசன் இயக்கியிருந்தார். இது 2013ஆம் ஆண்டு வெளியானது.

வெள்ளச்சி – வேலு விஸ்வநாத் இயக்கிய இப்படத்தில் நடிகர் பாண்டுவின் மகன் பிண்டு நாயகனாக நடித்திருந்தார். சுசித்ரா உன்னி அவர் ஜோடியாக நடித்தார். மறைந்த பவதாரிணி இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். இது 2013ஆம் ஆண்டு வெளியானது.

நான்காம் பிறை – வினயன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான ‘ட்ராகுலா’ தமிழில் ‘டப்’ செய்யப்பட்டு வெளியானது. இதில் சுதீர், மோனல் கஜ்ஜார் உட்படப் பலர் நடித்திருந்தனர். இது 2013ஆம் ஆண்டு வெளியானது.

நான் அடிமை இல்லை – இது 1986ஆம் ஆண்டு வெளியானது. மறைந்த இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் தந்த ‘ஒரு ஜீவன் தான்’ பாடல் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீதேவி இந்தியில் பிஸியான காலகட்டத்தில், அவரை மீண்டும் தமிழுக்கு அழைத்துவந்த படம் இது.

இதில் அவர் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்திருந்தார். கிரிஷ் கர்னாட், வி.கே.ராமசாமி, மனோரமா, எஸ்.என்.பார்வதி, புஷ்பலதா, கே.விஜயா, ஒய்.ஜி.மகேந்திரன் உட்படப் பலர் இதில் நடித்திருந்தனர்.

துவாரகிஷ் இயக்கிய இப்படம் அந்த காலகட்டத்தில் ரஜினியின் இதர படங்கள் பெற்ற வெற்றியைச் சுவைக்கவில்லை.

அறிவாளி – 1963ஆம் ஆண்டு இப்படம் வெளியானது. சிவாஜி கணேசன், பானுமதி நடித்த இப்படத்தில் கே.ஏ.தங்கவேலுவும் எம்.சரோஜாவும் இன்னொரு ஜோடியாக இடம்பெற்றிருந்தனர்.

தங்கவேலுவிடம் சரோஜா சொல்லும் ‘அதான் எனக்கு தெரியுமே’ நகைச்சுவைக் காட்சி இன்றும் இப்படத்தின் அடையாளமாக விளங்குகிறது. ஏ.டி.கிருஷ்ணசாமி இயக்கிய இப்படத்திற்கு எஸ்.வி.வெங்கட்ராமன் இசையமைத்திருந்தார்.

கலியுகம் – 1952ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் எஸ்.எம்.குமரேசன், எம்.எம்.மாரியப்பா, கே.ஏ.தங்கவேலு, பி.எஸ்.சரோஜா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

பம்பாயில் உள்ள ஸ்ரீகாந்த் ஸ்டூடியோவில் தயாரிக்கப்பட்ட இப்படத்திற்கான கதையை எழுதித் தயாரித்தவர் கோர்டன் பாய் மெர்ச்சண்ட். வி.எஸ்.துருபட் இதனை இயக்கினார்.

லைலா மஜ்னு – அரபிக் பகுதியில் வாய்மொழிக் கதையாகப் பகிரப்பட்ட லைலா, மஜ்னூன் இருவரது காதல் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது இப்படம். 1950ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை எஃப்.நாகூர் இயக்கியிருந்தார்.

எஸ்.வி.வெங்கட்ராமன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இதில் டி.ஆர்.மகாலிங்கம் மற்றும் எம்.வி.ராஜம்மா நாயகன் நாயகியாக நடித்திருந்தனர். இதில் பெரும்பாலான பாடல்களை டி.ஆர்.மகாலிங்கம் பாடியிருந்தார்.

பொன்னருவி – இப்படம் 1947ஆம் ஆண்டு வெளியானது. சி.வி.ராமன் இதனை இயக்கியிருந்தார். ஜி.ராமநாதன் இதற்கு இசையமைத்திருந்தார்.

வி.ஏ.செல்லப்பா, கொத்தமங்கலம் சீனு, கே.டி.ருக்மணி, டி.எஸ்.ஜெயா, டி.எஸ்.துரைராஜ் ஆர்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர்.

மேற்சொன்ன படங்களில் தடம், நான் அடிமை இல்லை, அறிவாளி ஆகியன ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற படங்களாக அமைந்தன.

இதே தேதியில் வெளியாகி, மேற்கண்ட பட்டியலில் விடுபட்ட படங்களின் விவரங்களை எங்களுக்கு மின்னஞ்சலில் பகிரலாம்.

– உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment