சென்னை மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை மீண்டும் எழுப்பப்பட்டபோது, கலைஞர் வடித்த காவிய வரிகள் இவை:
*******
இது உறுதி; தாயே!
கண்ணகி, உன்னை எங்கள்
கண்ணெதிர் நிலைநாட்டி விட்டோம் –
பொன்னொளி மேனியே; பூம்புகார் செல்வியே!
மின்மினிகள் ஆட்சியிலே வன்முறை ஏவியே;
என்னருந் தாயே உன்னை இருட்சிறை தள்ளிவிட்டார்;
பன்னருங் கலைஞானம் பண்பாட்டுத் தமிழரெல்லாம்
பதறித் தான் துடித்திட்டார்;
கதறித் தான் புலம்பிட்டார்;
பரம்பரை யுத்தம் என்று
கர்ச்சித்த பாராண்டக் கூட்டம்
சிதறித் தான் ஓடுதற்குச்
சிவப்புக் கறுப்புப் பட்டாளம்
செருக்களம் சேர்த்தமைத்து
சேர சோழ பாண்டியரின்
சின்னமாம் உன் சிலையை
மீண்டும் வண்ணமாய்
கன்னலாம் தமிழை வணங்கி அமைத்துவிட்டோம்
கடற்கரையில்!
கண்ணகித் தாயே உன்னைக் கைகூப்பித் தொழுகின்றோம்;
களங்கம் நமது பண்பாட்டுக்கு வரும் போதெல்லாம் –
களச்சாவு வரினும் அஞ்சாது நாங்கள்
இன்று போல் எழுகின்றோம்; இது உறுதி!
-நன்றி: முரசொலி.