சினிமாவை அழிப்பது சினிமாக்காரர்கள் தான்!

பாடலாசியர் பிரியன்

தமிழ்த் திரைக்கூடம் தயாரிப்பில், பிரபல பாடலாசிரியர் பிரியன் எழுதி இயக்கி, நாயகனாக நடித்து வெளியான திரைப்படம் ‘அரணம்’. மாறுபட்ட ஹாரர் திரில்லராக உருவாகியிருந்த இப்படம் மக்களின் பெரும் வரவேற்பில், 25 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு வருகிறது.

இப்படத்தில் கதாநாயகியாக வர்ஷா நடித்துள்ளார். லகுபரன், கீர்த்தனா உட்பட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

நித்தின் கே ராஜ், நௌசத் ஒளிப்பதிவு செய்துள்ளனர். பிகே படத்தொகுப்பு செய்துள்ளார். சாஜன் மாதவ் இசை அமைத்துள்ளார்.

இந்த நிலையில், ஊடக நண்பர்கள் முன்னிலையில் படக்குழுவினர் இந்த வெற்றியை கோலாகலமாக கொண்டாடினர்.

விழாவில் பேசிய பாடலாசியர் பிரியன், எத்துனை துயர் வரினும் அறம் வெல்லும். 2024 ஆம் ஆண்டின் முதல் 25 நாள் கொண்டாட்ட படம் அரணம். இதை எவராலும் மாற்ற முடியாது. பொங்கலுக்கு வந்த பெரிய படங்கள் அடுத்த வாரம் கொண்டாடும் போது இது காணாமல் போய் விடக்கூடாது.

இந்தப் படத்தின் வெற்றி, ஒரு சின்னப் படத்தை தயாரிக்கும் தைரியத்தைத் தரும். இந்தப்படத்தின் வெற்றி பலருக்கு நம்பிக்கை தரும்.

அரணம் படத்தின் பின்னால் பல பிரச்சனைகள் இருக்கிறது என்று முன்பே மேடையில் பேசினேன்.

அப்போது இரண்டு விதமான அழைப்புகள் வந்தது. அன்பான மிரட்டல் அழைப்புகள், இப்போது தான் வளர்ந்து வருகிறீர்கள் என்று பலர் எச்சரித்தார்கள்.

இன்னொருபுறம் பலர் திரையுலகிலிருந்து பலர் கூப்பிட்டுப் பாராட்டினார்கள்.

எங்கள் வலிகளைப் பேசியுள்ளீர்கள் என்று என்னை ஊக்கப்படுத்தினார்கள். நான் அன்று பேசியது மிகப்பெரிய பேசுபொருளானது.

ஆயிரம் குண்டுகள் ரத்தம் தான் சினிமா என்றாகிவிட்டது. இதை நான் பேசிய பிறகு எல்லா இடங்களிலும் பேசு பொருளாக மாறியிருப்பது மகிழ்ச்சி.

நான் அன்றே சொன்னது போல் அரணம் ஜெயித்து விட்டது. அதை எப்படிச் சாதித்தோம் என்பதை இங்கு சொல்லியாக வேண்டும்.

இப்போது படம் செய்ய ஹீரோ கால்ஷீட் இருந்தால் போதும் என்றாகிவிட்டது. ஆனால் கதை தான் முக்கியம். கதை தான் அரணத்தை ஜெயிக்க வைத்துள்ளது.

இந்த 25 நாளில் நிறைய கற்றுக்கொண்டேன், ஒரு படத்தை எடுத்துவிட்டு சும்மா நின்றிருந்தால் அவ்வளவு தான். நீங்கள் காலி, நான் தெருத்தெருவாக சென்றேன். ஒவ்வொரு நகரத்துக்கும் சென்றேன். ஒவ்வொரு திரையரங்காகச் சென்றேன் அப்போது தான் நமக்கானது நடக்கும்.

என் சொந்த நகரத்தில் காலைக்காட்சி 96 டிக்கெட் விற்றது. இது வெற்றி இல்லை என்றால் என்ன?, ஆனால் அடுத்த வாரம் உங்கள் படத்தை எடுத்து விடுவோம் என்றார்கள்.

ஏனென்று கேட்டால் புதுப்படம் வந்து விடும் என்கிறார்கள். நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் படத்தை எடுத்துவிட்டு டிக்கெட் புக்காகாத படத்தைக் கொண்டு வந்தால் எப்படி சினிமா அழியாமல் இருக்கும். சினிமாவை அழிப்பது சினிமாக்கரான் தான்.

4 கோடி இருந்தால் சினிமாவுக்கு வராதீர்கள் என்று விஷால் சொன்னார், எனக்கு அட்வான்ஸ் தந்த தயாரிப்பாளர்கள் 2 பேர் ஆபிஸை மூடிவிட்டுப்போய்விட்டார்கள். என்ன பைத்தியக்காரத்தனம் இது.

சின்னப்படம் எத்தனை ஜெயித்துக்கொண்டு இருக்கிறது, அரணம் படமே அதற்கு சாட்சி.

Comments (0)
Add Comment