திரைத் தெறிப்புகள் – 38:
மிகச்சில பாடல்களைக் கேட்கும்போது, அவை நம்பிக்கையையும் மனசுக்குள் ஒரு வேகத்தையும் தொற்ற வைக்கின்றன.
மனிதன் தனக்காக மட்டுமல்லாமல் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்திற்காகவும் உழைக்க வேண்டும், போராட வேண்டும் என்கின்ற துடிப்பையும் ஏற்படுத்துகிற விதத்தில் அமைந்திருக்கிறது, 1965-ம் ஆண்டில் வெளிவந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல்.
இத்திரைப்படத்தில் கடல் அலைகளுக்கு நடுவே நகரும் கப்பலில், சக வீரர்களுடன் கோரஸாகவும், தனித்தும் பாடுவதாக இடம்பெற்றிருக்கும் இந்தப் பாடலுக்குத் தனது வளமான குரலால் வலிமை சேர்த்திருப்பார் டி.எம்.எஸ்.
“அதோ அந்த பறவை போல வாழவேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே, ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்…”
– என்று, கப்பலில் உயர்த்திய கைகளோடு பாடும் இந்தப் பாடலை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.
அருமையான இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர்கள் இசை இரட்டையர்களான எம்.எஸ்.விஸ்வநாதனும் டி.கே. ராமமூர்த்தியும்.
குறிப்பிட்ட இந்தப் பாடலை கவியரசர் தான் எழுத வேண்டும் என்பதில் உறுதியான முடிவோடு இருந்திருக்கிறார், இந்தப் படக் கதாநாயகனான எம்.ஜி.ஆர்.
“காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே.
கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டுவிட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே…”
– என்று, எல்லோரும் ஒருமித்த ஒற்றுமை உணர்வுடன் போராட்டக் குரலை எழுப்ப வேண்டும் என்பதை எவ்வளவு அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் கவியரசர்!
“தோன்றும் போது தாயில்லாமல் தோன்றவில்லையே.
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே.
வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே.
போகும்போது வேறு பாதை போகவில்லையே…”
இதற்கு முன்பு ‘மன்னாதி மன்னன்’ படத்தில் இடம்பெற்ற “அச்சம் என்பது மடமையடா” என்கிற பாடலைப் போலவே, இந்தப் பாடலும் எம்.ஜி.ஆருக்குப் பிடித்த பாடல் மட்டுமல்ல, போராட்ட உணர்வுக்கு வாழும் முன்னுதாரணமாகத் திகழ்ந்த மாவீரன் பிரபாகரனுக்கும் பிடித்த பாடலும் கூட.
“கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை.
கோயில் போலே நாடு காண வேண்டும் விடுதலை.
அச்சமின்றி ஆடிப் பாட வேண்டும் விடுதலை.
அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை…”
மேலே குறிப்பிட்ட பாடலைப் பின்னணிக் குரல்கள் கோரஸாக, அலைகளைப் போல ஒலிக்க, அதற்கிடையில் தீரத்துடன் வாள் உயர்த்தும் கையைப் போல, தன்னுடைய குரலை ஓங்கி ஒலித்திருப்பார் டி.எம். சௌந்தரராஜன்.
துள்ளலான அசைவுகளுடன் அந்தப் பாடல் காட்சிக்கு உரம் ஏற்றியிருப்பார் எம்.ஜி.ஆர்.
அபூர்வமாக, எப்போதாவது மலர்ந்து துளிர்க்கும் நறுமண மலரைப் போல, திரையிசைப் பரப்பில், கேட்கும் கணத்தை அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கிறது இந்தப் பாடல் இப்போதும்…!
– மணா