‘புன்னகை இளவரசி’ என அழைக்கப்படும் சினேகா, திருமணத்துக்கு பிறகு நடிப்பதைக் குறைத்துக் கொண்டார்.
விளம்பரப் படங்களில் நடித்து வந்த அவர், இப்போது குணச்சித்திர வேடங்களில் தலை காட்டி வருகிறார்.
அண்மையில் அவருக்கு ‘அவள் ஐகான் விருது’ வழங்கப்பட்டது. இயக்குநர் கரு.பழனியப்பன் விருதை அளித்தார்.
விழாவில் சினேகா சில விஷயயங்களை மனம் திறந்து பேசினார். அப்போது அவர் உணர்ச்சி வசப்பட்டார்.
அவர் சொன்னது :
“இந்த விருதை டைரக்டர் கரு.பழனியப்பன் கையால் வாங்கியது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.
சினிமாவுக்கு வந்த 3 மாதத்திலேயே நான் ஒரு விபத்தில் சிக்கினேன். கை. கால், முதுகு என பல இடங்களில் பலத்த அடி.
எழுந்து நடக்க சுமார் 10 மாதங்கள் ஆகும் என்றார்கள். துவண்டு போனேன். அந்த சமயத்தில் என்னைச் சந்தித்த கரு.பழனியப்பன், என்னிடம் ‘பார்த்திபன் கனவு’ படத்தின் கதையைச் சொன்னார்.
“நான் அடிபட்டு கிடக்கிறேன். இப்போதைக்கு நடிக்க வாய்ப்பு இல்லை. என்னிடம் ஏன் கதை சொல்கிறீர்கள்?” எனக் கேட்டேன்.
அவர் எனக்கு நம்பிக்கை அளித்தார். விரைவில் குணம் அடைவீர்கள் எனச் சொன்னார். அவர் சொன்ன மாதிரியே ஒன்றரை மாதத்தில் ஓரளவு குணம் பெற்று, ‘பார்த்திபன் கனவு’ படத்தில் நடித்துக் கொடுத்தேன்.
அந்தப் படத்தில் நடித்த எல்லோருக்கும் விருது கிடைத்தது. எனக்கு கிடைக்கவில்லை. இதனால் மனம் உடைந்து போனேன். விருது கிடைக்கவில்லையே என வருத்தப்பட்டேன்.
அதன் பிறகு நான் நடித்த ‘ஆட்டோகிராஃப்’, ‘பள்ளிக்கூடம்’ ஆகிய படங்களுக்கு எனக்கு விருது கிடைக்கும் என்றார்கள். கிடைக்கவில்லை.
ஆனால் வருத்தம் இல்லை. விருதைவிட மக்கள் மனதில் இடம் பிடிப்பதே முக்கியம். நான் மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டேன். அது போதும்” என்று நெகிழ்ந்தார் சினேகா.
– பாப்பாங்குளம் பாரதி.