தயாரிப்பாளரானார் நடிகர் ரவி மோகன்!

நடிகர் ஜெயம் ரவிக்கும் அவரது மனைவி ஆர்த்திக்கும் இடையேயான குடும்பப் பிரச்சினை ஊடகங்களுக்குத் தினந்தோறும் தீனி போட்டது. 

பெயர் ராசி சரி இல்லாததால் சர்ச்சையில் சிக்குவதாக நினைத்து, தனது பெயரை ரவி மோகன் என மாற்றிக்கொண்டார்.  மோகன் என்பது ரவியின் தந்தை பெயர்.

ரவி – ஆர்த்தி விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

தலைக்கு மேல் பிரச்சினைகள் இருந்தாலும் அது குறித்து வெளிக்காட்டிக் கொள்ளாமல் தொழிலில் கர்ம சிரத்தையாக இருந்து வருகிறார் ரவி மோகன்.

ரவி மோகன் இப்போது ‘கராத்தே பாபு’, ‘ஜெனி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதுதவிர, ‘பராசக்தி’ படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

அரிதாரம் பூசி ஆக்ஷ்சன், ரொமான்ஸ் என சினிமாவில் தனது பங்களிப்பை இதுவரை செய்து வந்த ரவி, தயாரிப்பாளராக புது அவதாரம் எடுக்க முடிவு செய்துள்ளார்.    

அவர் தயாரிக்க இருக்கும் படம் இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் என்று சொல்லப்படுகிறது. அவர் ஒரு ஹீரோவாக நடிப்பது உறுதியாகி உள்ளது. இன்னொரு ஹீரோவாக எஸ்.ஜே. சூர்யா நடிக்க உள்ளதாக தகவல்.

ரவிமோகன் தயாரிக்கும் படத்தை கார்த்திக் யோகி இயக்க உள்ளார். இவர் சந்தானம் நடித்த ‘வடக்குப்பட்டி ராமசாமி’ மற்றும் ‘டிக்கிலோனா’ ஆகிய படங்களை இயக்கியவர்.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment