‘அல்டிமேட் ஸ்டார்’ அஜித்குமார், இப்போது இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
முதல் கட்டப் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்றது. ஷுட்டிங்கை முடித்துக்கொண்டு அண்மையில் சென்னை திரும்பினார் அஜித்.
வீட்டில் ஓய்வு எடுத்து வந்த அவர், சில தினங்களுக்கு முன், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
‘படப்பிடிப்புக்காக அவர் மீண்டும் வெளிநாடு செல்வதால், உடல் பரிசோதனை செய்து கொள்வதற்காக அப்போலோவில், அனுமதிக்கப்பட்டுள்ளார்’ என அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்தார்.
டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்தபோது, மூளையில் இருந்து காதுக்கு வரும் நரம்பில் வீக்கம் ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.
‘இந்த வீக்கத்தை எப்போது வேண்டுமானாலும் சரி செய்துகொள்ளலாம்’ என டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால் அஜித்குமார், ‘உடனடியாக சரி செய்துவிடலாம்’ என்று கூறினார்.
இதையடுத்து அவருக்கு சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமனையில் ஒரு நாள் தங்கி இருந்த அஜித், மறுநாளே வீடு திரும்பினார்.
இது தொடர்பாக அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா, “மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ள அஜித், நலமுடன் உள்ளார் – நடிகர் விஜய் தொலைபேசியில் தொடர்புகொண்டு அஜித்திடம் நலம் விசாரித்தார்” என்று தெரிவித்தார்.
இதனிடையே, சிகிச்சைக்கு பின்னர் அவர் பொது வெளியில் தோன்றிய வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.
அஜித் மகன் அத்வைக், கால்பந்து விளையாட்டில் ஆர்வம் உள்ளவர். தனது பள்ளியில் நடந்த கால்பந்து போட்டியில் அத்வைக் நேற்று (ஞாயிறு) கலந்து கொண்டார்.
போட்டியைப் பார்க்க அஜித், தனது மனைவி ஷாலினியுடன் அந்தப் பள்ளிக்கு நேரில் வந்திருந்தார். மகன் கால்பந்து விளையாடுவதை அஜித் கண்டு களித்தார்.
இது தொடர்பான போட்டோக்கள், வீடியோக்கள் இணைய தளங்களில் வெளியாகியுள்ளது.
அஜித் செய்திருப்பது, மைனர் ஆபரேஷன் என்பதால், விரைவிலேயே அவர் படப்பிடிப்புக்காக வெளிநாடு கிளம்பி செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
– பாப்பாங்குளம் பாரதி.