மருத்துவமனையில் அஜித் அனுமதி: என்னதான் ஆச்சு?

‘துணிவு’ படத்துக்கு பிறகு ‘அல்டிமேட் ஸ்டார்’ அஜித் நடித்து வரும் படம், ‘விடாமுயற்சி’.

மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தில் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

அஜர்பைஜான் நாட்டில் சில மாதங்கள் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், படக்குழு கடந்த மாதம் சென்னை திரும்பியது. ஓய்வு நாட்களை நடிகர் அஜித் தனது குடும்பத்துடன் செலவிட்டார்.

அஜித் மகன் ஆத்விக்கின் 9-வது பிறந்தநாள் கடந்த 2ம் தேதி நடைபெற்றது. பிறந்தநாளை ‘கேக்’ வெட்டி குடும்பத்துடன் கொண்டாடினார் ‘தல’.

இது தொடர்பான புகைப்படங்களை அஜித் மனைவி ஷாலினி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில், அஜித்குமார் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வழக்கமான உடல் பரிசோதனைக்காகவே, அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

‘விடா முயற்சி’ படத்தின் 90 சதவீத ஷுட்டிங் முடிந்து விட்டது. இன்னும் 10 சதவீத படப்பிடிப்பு பாக்கி உள்ளது. அதற்காக படக்குழு வேறு சில வெளிநாடுகளுக்கு செல்கிறது.

வெளிநாட்டுக்கு செல்வோர், மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது கட்டாயம். அதனால் அஜித், உடல் பரிசோதனை செய்வதற்காக அப்பல்லோ சென்றதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவரது ரசிகர்கள் பதற்றமடைந்துள்ளனர். அவர்கள், அஜித் சீக்கிரம் வீடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இதனிடையே ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர்கள், அஜித்தை செல்போனில் தொடர்புகொண்டு உடல்நலம் விசாரித்துள்ளனர்.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment