90 வயதில் பரதம் ஆடிய வைஜெயந்தி மாலா!

ஏவிஎம் நிறுவனம் தயாரித்த ‘வாழ்க்கை’ படம் மூலம் திரை உலகில் அறிமுகம் ஆனவர் வைஜெயந்தி மாலா. ‘இரும்புத்திரை’, ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’, ‘தேன் நிலவு’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அவர், இந்தியிலும் வெற்றிக்கொடி நாட்டினார்.

பரத நாட்டியத்திலும் புகழ் பெற்றவர். 13 வயதிலேயே இவரது நாட்டிய அரங்கேற்றம் நடந்தது. அரசியலிலும் கால் பதித்தவர்.

1984 மற்றும் 89 ஆகிய ஆண்டுகளில் தென்சென்னை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

மாநிலங்களவை உறுப்பினராகவும் ஒரு முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராஜீவ்காந்தி மறைவுக்கு பிறகு பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இவருக்கு வயது 90. இந்த வயதிலும் இவர் பரதநாட்டியம் ஆடி பாராட்டுக்களைப் பெற்றுள்ளார்.

அயோத்தியில் கடந்த ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோயில் திறக்கப்பட்டது. கோயிலில் பிரதிஷ்டை நிகழ்வுக்கு பின்னர் ஜனவரி 27 ஆம் தேதி முதல் 45 நாள்களுக்கு ‘ராக சேவா’ எனும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இதில் பல பிரபலங்கள் கலந்துகொண்டு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். அண்மையில் வைஜெயந்தி மாலாவின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

90 வயதிலும் சிறப்பாக பரதம் ஆடிய வைஜெயந்தி மாலாவின் நாட்டியத்தை அங்கிருந்தவர்கள் ரசித்துப் பார்த்தனர்.

அவர் நடனமாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment