Take a fresh look at your lifestyle.

சிவாஜியை கடவுளாக்கிய ‘திருவிளையாடல்’!

299

சிவராத்திரி, ஏகாதசி உள்ளிட்ட சில விழாக்களின்போது இரவெல்லாம் கண் விழிப்பது ஒருவகை வேண்டுதல்.

கோயில்களில் சில பக்தர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருக்க, தியேட்டர்களில் ‘கடவுளே’ என்று சரணாகதி அடைந்துவிடும் பக்தர்களுக்காகவே இரவு 10 மணிக்கு மேல் தொடர்ச்சியாக இரண்டு அல்லது மூன்று திரைப்படங்கள் திரையிடப்பட்டது வரலாறு.

டூரிங் டாக்கீஸ்கள் முடிவைச் சந்தித்தபோது, இவ்வழக்கமும் அருகிப்போனது. இப்போது, சில தொலைக்காட்சி சேனல்கள் இதே பாணியை கடைபிடிக்கின்றன.

இவ்வாறு திரையிடப்பட்ட திரைப்படங்களில் ’திருவிளையாடல்’, ‘கந்தன் கருணை’, ‘திருவருட்செல்வர்’ உள்ளிட்டவை முக்கிய இடம்பிடிக்கும். இவையனைத்தையும் இயக்கியவர் ஏ.பி.நாகராஜன்.

புராணப் பாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என்று தான் சார்ந்த கட்சியின் கொள்கை அடிப்படையில் எம்ஜிஆர் மறுப்பு தெரிவிக்க, அவ்வாறு நடிப்பதில் ஜெமினி கணேசன் ஆர்வம் காட்டாமல் இருக்க, தமிழ் திரையுலக மும்மூர்த்திகளில் ஒருவரான சிவாஜியைத் தேடி அத்தகைய வாய்ப்புகள் வந்தன.

அந்த வகையில், அவரைக் கடவுளாக்கிய பெருமையைப் பெறுகிறது ‘திருவிளையாடல்’ திரைப்படம்.

நான்கு திருவிளையாடல்கள்!

ஒரே படத்தில் மூன்று, நான்கு கதைகள் இடம்பெறும் வழக்கம் 1940களில் இருந்தே தொடர்கிறது. அந்த வரிசையில், சிவபெருமானைப் போற்றி பரஞ்சோதி முனிவர் இயற்றிய ‘திருவிளையாடல் புராணம்’ தழுவி இப்படத்தின் கதை அமைந்துள்ளது.

‘கொங்குதேர் வாழ்க்கை’ எனத் தொடங்கும் பாடலை மன்னன் செண்பக பாண்டியனிடம் தருமி கொடுக்க, ‘அதில் பொருட்குற்றம் உள்ளது’ என்று கூறும் நக்கீரரை சிவபெருமான் நெற்றிக்கண்ணால் சுட்டெரிப்பது முதல் கதை.

தட்சனின் மகள் தாட்சாயணியாகப் பிறக்கும் பார்வதி ‘சக்தி இல்லையேல் சிவம் இல்லை’ என்று சொல்ல, ‘சிவம் இல்லையேல் சக்தி இல்லை’ என்று ரவுத்திரமடையும் சிவன் தாண்டவமாடுவது இரண்டாவது கதை.

         

மீனவப் பெண் கயற்கண்ணியாக பிறப்பெடுக்கும் பார்வதியை, சுறாவை அடக்கி சிவன் மணம் முடிப்பது மூன்றாவது கதை.

இசையில் பெரும் பண்டிதரான ஹேமநாத பாகவதர் தனது வித்யாகர்வத்தினால், ‘எனது இசைக்கு பாண்டிய நாடே அடிமை’ என்று சாசனம் எழுதிக் கொடுக்குமாறு பாண்டிய மன்னன் வரகுண பாண்டியனைக் கேட்கிறார்.

கோயிலில் இசைபாடும் பாணபத்திரர் ஹேம்நாத பாகவதருக்கு எதிராக முன்னிறுத்தப்பட, அதற்கு முந்தைய நாளே பாணபத்திரரின் சீடன் என்று சொல்லிக்கொண்டு விறகுவெட்டி உருவில் சிவபெருமானே வந்து அவரது திமிரை அடக்குவது நான்காவது திருவிளையாடல்.

திருவிளையாடல் புராணத்தில் முதல் மூன்றும் அமைந்திருக்க, நான்காவது கதையை கற்பனையாக வடித்துள்ளார் இயக்குனர் ஏ.பி.நாகராஜன்.

கர்நாடக இசை மூவர்களில் ஒருவரான சியாமா சாஸ்திரிக்கும் பொப்பிலியைச் சேர்ந்த கேசவய்யா எனும் இசைக்கலைஞருக்கும் இடையே நடந்த போட்டி சம்பவத்தை தழுவி இப்பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

‘அம்மையப்பனே உலகம்’ என்று சொல்லி சிவனையும் பார்வதியையும் சுற்றிவந்து நாரதர் கொண்டு வரும் ஞானப்பழத்தை பிள்ளையார் பெற, அதனால் கோபமடைந்து தவக்கோலம் பூணும் சண்முகரிடம் ‘உன் தந்தை செய்த திருவிளையாடல்கள் உனக்கு தெரியாதா’ என்று பார்வதி கதை கதையாகச் சொல்வது போல இதன் திரைக்கதையை அமைத்துள்ளார் ஏ.பி.நாகராஜன்.

செவிவழிக் கதைகளுக்கு ஓருருவம்!

1950களுக்கு முன்பு வரை புராணங்களை மையமாகக் கொண்டு திரைப்படங்கள் உருவாக்கப்பட்டன.

இந்திய வரலாற்றையோ அல்லது அரச பரம்பரைகள் குறித்த மேற்கத்திய கற்பனைகளின் தாக்கத்தையோ இத்திரைப்படங்கள் கொண்டிருந்தன.

சமூகநீதிக் கதைகள் மற்றும் நிலச்சுவான்தார்களின் குடும்பப் பிரச்சனைகள் திரையுரு பெற்றபிறகு, பக்திப் படங்களின் வருகை குறைந்து போனது.

கிறித்தவத்தை மையப்படுத்தி ஓரிரு படங்கள் தமிழில் வந்த அளவுக்கு கூட, இஸ்லாமியத்தை திரையில் எவரும் சொல்லவில்லை.

’சம்பூர்ண ராமாயணம்’ போன்ற படங்களின் வரவுக்குப் பிறகு, தெலுங்கிலும் கன்னடத்திலும் தயாரான பக்திப் படங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. இவை பெரும்பாலும் ‘இந்துத்துவ’ படங்களாகவே இருந்தன.

அந்த வரிசையில், தமிழ் திரையுலகில் அப்படியொரு வகைமையை வெற்றிக்கான வழியாக முன்வைத்தது ‘திருவிளையாடல்’.

‘ஞானப்பழத்தை பிள்ளையார் எப்படி வாங்குனாரு தெரியுமா’ என்று கதைப்பது, உலகில் தமிழறிந்த அனைத்து பகுதிகளிலும் பரவலான ஒன்று.

அதேபோல பக்திப் பிரசங்கங்களிலும் நாடகங்களிலும் கூத்துகளிலும் அரங்கேற்றப்பட்ட கதைகளில் இருந்து தனக்குத் தேவையானவற்றைத் தேர்ந்தெடுத்தபோதே பாதி வெற்றியைப் பெற்றுவிட்டார் ஏ.பி.நாகராஜன்.

 

செவிவழிக் கதைகளாக இருந்தவற்றுக்கு திரையில் வடிவம் தந்ததே, பின்னாளில் பக்திப் படங்கள் வெற்றி பெறுவதற்கான ஒரு உத்தியாகவும் மாறியது.

நாகராஜனின் நக்கீரர் பற்று!

வடிவுக்கு வளைகாப்பு, குலமகள் ராதை, நவராத்திரி ஆகியன கருப்பு வெள்ளை படங்களாக அமைந்த நிலையில், ஏ.பி.நாகராஜன் இயக்கிய முதல் ஈஸ்ட்மென் வண்ணப்படம் எனும் பெருமையைப் பெற்றது ‘திருவிளையாடல்’.

சம்பூர்ண ராமாயணம் படத்துக்கு வசனம் எழுதிய நாகராஜன், அதன்பின்னர் இதில்தான் புராணத்தை மையப்படுத்திய கதையைத் தேர்ந்தெடுத்திருந்தார்.

‘நவராத்திரி’யில் சிவாஜியின் நடிப்பைச் சிகரம் தொட வைத்தவருக்கு, அவரைத் தான் வணங்கும் கடவுளராகக் காணும் ஆசை வந்ததில் ஆச்சர்யமில்லை.

‘திருவிளையாடல்’ திரைப்படமாக உருவாவதற்கு, நக்கீரர் மீது இயக்குனர் ஏ.பி.நாகராஜன் கொண்டிருந்த அதீத பற்று தான் காரணமாக இருந்திருக்க வேண்டும்.

ஏனென்றால், சோமு இயக்கத்தில் அவர் கதை வசனம் எழுதிய ‘நான் பெற்ற செல்வம்’ (1956) திரைப்படத்தில் ஒரு நாடகமாக இதனைப் பயன்படுத்தியிருப்பார்.

நக்கீரர் வேடத்தில் ஏ.பி.நாகராஜன் நடித்ததையும் இந்த கணக்கில் சேர்க்க வேண்டும்.

மீண்டும் கே.பி.எஸ்!

சிவாஜியையும் அவருக்கு ஈடான நடிப்புத்திறனைக் கொண்டிருந்த சாவித்திரியையும் சிவன் – பார்வதியாக நடிக்க வைத்ததே, ஒரு இயக்குனராக ஏ.பி.நாகராஜன் செய்த பெரும் சாதனை.

அது போதாதென்று, பக்திப் படம் என்ற முத்திரை அழுத்தமாக விழுவதற்காக மேற்கொண்டு ஒரு காரியமும் செய்தார். அவ்வையார் வேடத்தில் கே.பி.சுந்தராம்பாளை நடிக்க வைத்தார்.

வாசன் இயக்கிய ‘அவ்வையார்’ வெளியாகி பத்தாண்டுகள் கழித்து ‘பூம்புகார்’ திரைப்படத்தில் நடித்த கே.பி.எஸ், அதன்பின் இதிலும் தலைகாட்டினார்.

அதனால், திருவிளையாடல் திரைக்கதையின் தொடக்கத்திலும் இறுதியிலும் சுந்தராம்பாள் இடம்பிடித்தது, இயல்பாகவே பார்வையாளர்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.

அதற்கேற்றாற்போல தனது கணீர்க்குரலில் ‘பழம் நீயப்பா’, ‘ஒன்றானவன் உருவில் இரண்டானவன்’ பாடல்களைப் பரிசாகத் தந்தார் கே.பி.எஸ்.

முதுமையின் காரணமாக பாறைகளில் ஏறி இறங்கி சிரமப்படக் கூடாது என்பதால், அவரை நிற்க வைத்தே அக்காட்சிகளைப் படம்பிடித்திருப்பது நாகராஜனின் சாதுர்யத்திற்குச் சான்று.

மீண்டும் பக்திப் படங்கள்!

சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, திருவருட்செல்வர், திருமால் பெருமை, திருமலை தென்குமரி, அருட்பெருஞ்சோதி, அகத்தியர், ஸ்ரீகிருஷ்ணலீலா என்று தொடர்ச்சியாகப் பக்திப் படங்கள் தர, ஏ.பி.நாகராஜனுக்கு உந்துதலாக அமைந்தது ’திருவிளையாடல்’ தான்.

இயக்குனர்கள் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், கே.சங்கர், எம்.ஏ.திருமுகம் போன்றவர்களும், நாகராஜனின் பாணியைப் பின்பற்றி தொடர்ச்சியாக பக்தி திரைப்படங்களை இயக்கினர்.

90களுக்குப் பிறகு இவ்வகை திரைப்படங்களின் வருகை அருகியது. 1995ஆம் ஆண்டு கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் வெளியான ‘அம்மோரு’ தமிழில் ‘அம்மன்’ என்ற பெயரில் வெளியாகி, மீண்டும் பக்தி திரைப்படங்கள் வெளியாகக் காரணமானது.

தற்போது கார்த்திகை, மார்கழி மாதங்களில் சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களை குறிவைத்து இவ்வகைமை திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்படப் பல்வேறு மொழிகளில் ‘டப்பிங்’ செய்யப்படுகின்றன.

தன்னம்பிக்கை குறையும்போது சிலருக்குத் துணை நிற்பது அவர்கள் கொண்டிருக்கும் ஆன்மிகப் பற்று. ஆதலால், உலகம் முழுக்க கடவுளர்களை, அவர்களது அற்புதங்களைப் போற்றும் திரைப்படங்களுக்குத் தனி வரவேற்பு எப்போதும் இருந்து வருகிறது.

நாகேஷின் பெருந்திறமை!

வெவ்வேறு திரைக்கதையாசிரியர்கள், இயக்குனர்களுக்கேற்ப தருமி பாத்திரத்தை வெவ்வேறாகப் படைக்க இயலும். ஆனால் நாகேஷை போன்று எவராலும் அதனில் நகைச்சுவையை அடக்க முடியாது.

வறுமையைப் போக்கப் போராடும் ஒரு புலவர் தனது திறமையையே வளைக்கிறார் என்பதைக் கையிலெடுத்துக்கொண்டு, திருவிளையாடலில் உடலை நெளித்து வளைத்து தருமியாக நடித்திருப்பார் நாகேஷ்.

இதற்காக, அவர் ஏ.பி.நாகராஜனுக்குத் தந்தது வெறும் ஒன்றரை நாள் கால்ஷீட் என்பது ஆச்சர்யமான விஷயம்.

நாகேஷின் கேள்விகளுக்கு சிவாஜி பதில் சொல்வது ஒரே நீளமான ஷாட்டாக படம்பிடிக்கப்பட்டதும், அதற்கான வசனங்களை இருவருமே தாமாக விரிவுபடுத்திக் கொண்டதும் நாமறியாத விஷயங்கள்.

இதையெல்லாம்விட, அரசவையில் இருந்து விரட்டப்பட்ட தருமி மீனாட்சியம்மன் கோயில் மண்டபத்தில் புலம்புவது போன்ற காட்சியில் பெருந்திறமையைக் கொட்டியிருப்பார் நாகேஷ்.

இயக்குநர் சொன்னதற்கு அப்பாற்பட்டு அவர் தன் கற்பனையை எந்த அளவுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார் என்பது அக்காட்சியை ஒருமுறை பார்த்தாலே தெரிந்துவிடும்.

’அவன் வரமாட்டான்’ என்று புலம்பும்போது வேதனையையும் ஆத்திரத்தையும் ஒருசேர வெளிப்படுத்தியிருப்பதும், சிறு பிசிறு கூட இல்லாமல் டப்பிங்கில் அவரது குரல் பொருந்தியிருப்பதும் நிச்சயம் பேரதிசயம்தான்.

ஹேமநாத பாகவதர் வேடத்தில் டி.எஸ்.பாலையாவுக்கு பதிலாக, கர்நாடக இசைப்பாடகர் பாலமுரளிகிருஷ்ணாவை நடிக்க முயற்சிகள் நடந்திருக்கின்றன.

அவர் நடித்திருந்தால், ஒரு வித்வானை நடிக்க வைத்த பெருமை கட்டாயம் கிட்டியிருக்கும். ஆனால், அப்பாத்திரம் கடைக்கோடி ரசிகனையும் சென்றடைய வைத்ததில் பாலையாவின் பங்கு கணிசம்.

திறமையினால் விளைந்த திமிரையும், தன்னைவிட அற்புதமாக ஒருவன் பாடுகிறான் என்றுணரும்போது வெளிப்படும் பயத்தையும், ஆணவம் உடைந்து உள்ளத்தில் இருந்து வெளிப்படும் பவ்யத்தையும் அடுத்தடுத்த நிமிடங்களில் உணரவைப்பது சாதாரண விஷயமல்ல.

கே.வி.மகாதேவனின் மேதமை!

திரையிசையில் கர்நாடக இசையின் நுட்பங்களைப் புகுத்துவதில் ஒரு ஜித்தனாக கொண்டாடப்படுபவர் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன்.

தமிழ், தெலுங்கில் அவர் பெற்ற பெருவெற்றிகளுள் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது ‘திருவிளையாடல்’.

டி.ஆர்.மகாலிங்கத்தின் ‘இசைத்தமிழ் நீ செய்த’, பாலமுரளிகிருஷ்ணா பாடிய ‘ஒருநாள் போதுமா’, டி.எம்.எஸ்ஸின் ‘பார்த்தா பசுமரம்’, ‘பாட்டும் நானே’ போன்ற பாடல்களோடு பி.பி.ஸ்ரீனிவாஸ், எஸ்.ஜானகி பாடிய ‘பொதிகை மலை உச்சியிலே’ பாடலும் பெரும்வரவேற்பைப் பெற்றது.

இதற்கு அணி சேர்ப்பதுபோல கே.பி.எஸ்ஸின் ‘ஒன்றானவன்’, ‘வாசி வாசியென்று’, ‘பழம் நீயப்பா’ பாடல்கள் அமைந்தன.

இப்படத்தில் இடம்பெற்ற ‘பழம் நீயப்பா’ பாடலை இயற்றியவர் சங்கரதாஸ் சுவாமிகள். இதர அனைத்து பாடல்களையும் கண்ணதாசன் எழுதினார்.

திருவிளையாடலும் சர்ச்சைகளும்!

திரைப்படத்தை காட்சி ஊடகமாகக் கையாளும் முயற்சிகள் ‘அந்த நாள்’ திரைப்படத்துக்கு முன்பே தொடங்கி இயக்குநர் ஸ்ரீதர், பாரதிராஜா, மகேந்திரன், பாலு மகேந்திரா போன்றவர்களால் முன்னெடுக்கப்பட்டாலும், 90கள்வரை ஒரு திரைப்படத்தின் வசனங்களே பெரிதும் சிலாகிக்கப்பட்டது மறுக்க முடியாத உண்மை.

‘திருவிளையாடல்’ வசனங்கள் ஆடியோ ரெக்கார்டு, கேசட், வானொலி ஒலிபரப்பு வழியே ஒலிச்சித்திரமாகவும் பெரிய வெற்றியைப் பெற்றது.

இன்றும் கொண்டாடத்தக்கதாக, தனியொரு வணிக சந்தையை உருவாக்கிய பெருமை இருந்தாலும் கூட, காட்சிகளுக்குப் பதிலாக வசனங்கள் வழியே ஒரு படைப்பு அடையாளம் காணப்படுவதற்கான முன்னுதாரணமாகவும் ஆகிப்போனது வருத்தமான விஷயம்.

1964 ஆம் ஆண்டு ‘நவராத்திரி’ வெற்றிக்குப் பிறகு, திருச்சியைச் சேர்ந்த சென்ட்ரல் டாக்கி டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் உரிமையாளர் ஏ.எம்.ஷாகுல்ஹமீத் சாகிபு தயாரிப்பில் ‘சிவலீலா’ என்ற பெயரிலேயே இத்திரைப்படத்தை இயக்கத் தொடங்கினார் ஏ.பி.நாகராஜன்.

படம் முடிவடையும்போது ஷாகுல்ஹமீது இறந்துவிட, ‘திருவிளையாடல்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது.

படத்தின் முடிவில் ஷாகுல்ஹமீதுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டபோதிலும், அவரது பெயர் தயாரிப்பாளராகக் குறிப்பிடப்படவில்லை.

1975இல் ‘திருவிளையாடல்’ பட உரிமையை நாகராஜனுக்கு சொந்தமான விஜயலட்சுமி பிக்சர்ஸ் ‘மூவி பிலிம் சர்க்யூட்’ எனும் நிறுவனத்துக்குத் தர, அந்நிறுவனத்திடம் இருந்து உரிமையை வாங்கிய விஜயா பிக்சர்ஸ் ‘திருவிளையாடல்’ திரைப்படத்தின் டிஜிட்டல் பிரிண்டை வெளியிட முயற்சித்தது.

2012ஆம் ஆண்டு இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கின் முடிவில், பட உரிமையைத் திரும்பப் பெற்றார் ஏ.பி.நாகராஜனின் மகன் பரமசிவன்.

இதன் தொடர்ச்சியாக, ஜெமினி பிலிம் லேபரட்டரியில் இருந்த திருவிளையாடல் நெகட்டிவ் கண்டெடுக்கப்பட்டது. 2012 செப்டம்பரில் ‘திருவிளையாடல்’ டிஜிட்டல் பதிப்பு தியேட்டர்களில் வெளியானது.

‘கர்ணன்’ மறு வெளியீட்டில் வெற்றி பெற்றது போலவே, இத்திரைப்படமும் பெருவாரியான ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

மறக்க முடியாத படைப்பு!

எத்தனை புதுமைகள், புரட்சிகள் வந்தாலும் திரையுலகில் அவை நிலைக்குமா, இல்லையா என்பதை எவராலும் முடிவு செய்ய முடியாது. அந்த வகையில் தமிழில் பக்தி திரைப்படங்களுக்கு தனி சந்தையை உருவாக்கிய பெருமை ‘திருவிளையாடலு’க்கு உண்டு.

போலவே, நடிப்புக் கலைஞர்கள் குறைந்த நாட்களைப் படப்பிடிப்புக்கு ஒதுக்கினாலும் கூட வெவ்வேறு கதைகளில் அவர்களை நடிக்கவைத்து ஒரே படைப்பாக ஒருங்கிணைக்க முடியுமென்பதையும் நிகழ்த்தினார் ஏ.பி.நாகராஜன்.

இன்று ‘ஆந்தாலஜி’ கதைகளிலும், பல்வேறு மனிதர்களை ஒரேயொரு சம்பவம் ஒன்றாகத் தொடர்புபடுத்தும் திரைக்க்தைகளிலும் இவ்வுத்தியே ஆதாரமாக விளங்குகிறது.

இத்திரைப்படத்தில் இடம்பெற்ற தருமி புலம்பல், அவ்வையார் முருகன் உரையாடல், சிவ தாண்டவம் உட்படப் பல்வேறு அம்சங்கள் பின்னாட்களில் பல்வேறு படங்களில் பிரதியெடுக்கப்பட்டிருக்கின்றன; நகைச்சுவையாகக் கையாளப்பட்டிருக்கின்றன.

சிவன் மீனவ வேடத்தில் வருவது போன்ற காட்சியில் இடம்பெற்ற சிவாஜியின் நடையை, ‘காதலும் கடந்து போகும்’ படத்தில் நடிகர் சுந்தர் அபிநயித்து அக்காட்சிக்கு மரியாதை செலுத்தியிருப்பார்.

இதுபோல பல வகைகளில் ‘திருவிளையாடல்’ தொடர்ந்து தமிழ் திரையுலகில் நினைவுகூரப்பட்டு வருகிறது.

இப்படத்தின் தொடக்கத்தில் இடம்பெற்ற ‘ஓம் நமசிவாய’ பாடலின் வடிவமைப்பும், அது தொகுக்கப்பட்ட விதமும் படத்தொகுப்பாளர் ராஜன், டி.ஆர்.நடராஜனுக்கு என்றும் புகழைப் பெற்றுத் தரும்.

கலை இயக்குனர் கங்காவால் அமைக்கப்பட்ட கயிலாய செட், பின்னாட்களில் வெளிவந்த பல திரைப்படங்களில் இது போன்ற கலை வடிவமைப்புக்கு வழி வகுத்தது.

அதேபோல, நடிப்புக் கலைஞர்களின் பின்னால் நிரம்பியிருக்கும் புகைப்படலம் பின்னாட்களில் ஒரு பாணியாகவே பக்தி திரைப்படங்களில் பின்பற்றப்பட்டது.

புகழ்பெற்ற ஒன்று கிண்டலுக்கு உள்ளாவது வழக்கம் என்ற வகையில், இது கேலிகளுக்கு இலக்கானது.

கால ஓட்டத்தில் ரசிகர்கள் மறந்துபோன டி.ஆர்.மகாலிங்கம், கே.பி.சுந்தராம்பாள் போன்றவர்களும் இதில் இடம்பெற்றது, கலைஞர்களின் ‘ரீ-எண்ட்ரி’யை கொண்டாட வைத்தது.

ஒரு திரைப்படம் வெளியாகி 56 ஆண்டுகளுக்குப் பிறகும் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் விமர்சனங்கள் தொடர்வது, அது வரலாற்றில் இடம்பெற்றதையே உணர்த்துகிறது.

அந்த வகையில், ‘திருவிளையாடல்’ சம்பந்தப்பட்ட கலைஞர்களின் அர்ப்பணிப்புமிக்க உழைப்புக்காக மட்டுமல்லாமல், அதைக் கண்டு ரசித்து பெருவெற்றி பெறச் செய்த ஒரு தலைமுறைக்குமான மரியாதையாக விளங்குகிறது.

அதோடு, ஒரு துறையின் போக்கை மாற்றும் வல்லமை ஒரு திரைப்படத்துக்கு உண்டு என்பதற்கும் உதாரணமாகியிருக்கிறது.

**********

 

படத்தின் பெயர்: திருவிளையாடல் (1965), இசையமைப்பு: கே.வி.மகாதேவன், பாடல்கள்: கண்ணதாசன், சங்கரதாஸ் சுவாமிகள், கலை: கங்கா, உடை: பி.ராமகிருஷ்ணன், சி.கே.ராஜமாணிக்கம், ஒப்பனை: ரங்கசாமி, பீதாம்பரம், ராமசாமி, பெரியசாமி, மாணிக்கம், பத்மநாபன், தட்சிணாமூர்த்தி, சேதுபதி, ஒளிப்பதிவு இயக்குனர்: கே.எஸ்.பிரசாத், ஒளிப்பதிவு: வி.செல்வராஜ், ராஜன், ஒலிப்பதிவு இயக்குனர்: டி.எஸ்.ரங்கசாமி, ஒலிப்பதிவு: கே.துரைசாமி, படத்தொகுப்பு: ராஜன், டி.ஆர்.நடராஜன், ப்ராசஸிங்: ஜெமினி ஸ்டூடியோஸ் லேபரட்டரி, தயாரிப்பு: விஜயலட்சுமி பிக்சர்ஸ், ஸ்டூடியோ: சாரதா திரைக்கதை, வசனம், இயக்கம்: ஏ.பி.நாகராஜன்

நடிப்பு: சிவாஜி கணேசன், சாவித்திரி, கே.பி.சுந்தராம்பாள், டி.எஸ்.பாலையா, டி.ஆர்.மகாலிங்கம், கே.சாரங்கபாணி, முத்துராமன், நாகேஷ், ஓ.ஏ.கே.தேவர், தேவிகா, மனோரமா, ஜி.சகுந்தலா மற்றும் ஏ.பி.நாகராஜன்

– உதய் பாடகலிங்கம்