Take a fresh look at your lifestyle.

தமிழ் சினிமாவின் முதல் சகலகலா வல்லி பி.டி. ராஜலட்சுமி!

65

நடிப்பு, கதை, வசனம், பாடல், இயக்கம், பின்னணி பாடுவது, தயாரிப்பு என்று சகலகலா வல்லியாக திகழ்ந்த இவர்தான் தமிழின் முதல் பேசும் படமான காளிதாஸின் கதாநாயகி.

தஞ்சை மாவட்டம் திருவையாறில் பிறந்த இவரது அப்பா பஞ்சபகேச அய்யர். அம்மா மீனாட்சி அம்மாள். வறுமையான குடும்பம்.

ஆனால் வறுமையான சூழலில் வளர்ந்தாலும் ராஜலட்சுமிக்கு இறைவன் அபார சங்கீத ஞானமும் நல்ல குரல் வளமும் கொடுத்திருந்தார்.

அந்தக் கால வழக்கப்படி அவரது எட்டாவது வயதிலேயே திருமணம் நடந்தது. அதற்கு முன் அவர் மூன்றாம் வகுப்பு வரை படித்திருந்தார். திருமணத்திற்குப் பிறகு கணவன் வீடு சென்றார். கணவர் வீட்டில் கேட்ட வரதட்சிணையைக் கொடுக்க முடியாததால் அவர் பிறந்த வீட்டுக்கு திருப்பி அனுப்பப் பட்டார்.

இந்த துக்கம் தாளாமல் அவரது தந்தை இறந்து போக, குடும்பம் நிலை குலைந்தது. மகளை அழைத்துக் கொண்டு திருச்சிக்குப் போனார் அவரது அம்மா. அங்கே சி.எஸ். சாமண்ணா என்பவரின் நாடகக் கம்பெனி பிரமாதமாக ஓடிக் கொண்டிருந்தது.

ராஜலட்சுமியின் குரலைக் கேட்டதும் அந்த கம்பெனியில் மாதச் சம்பளத்திற்கு சேர்த்துக் கொண்டார்கள். அப்போது அவருக்கு வயது 11. ராஜலட்சுமியின் குரல் வளம் அவரை நாடகத் தொழிலில் முன்னேற்றியது.

பின்னர் அந்தக் காலத்தில் பெரிய நாடக கம்பெனியாக இருந்த கண்ணையா நாடகக்குழுவில் போய் சேர்ந்தார் ராஜலட்சுமி. அதன் பிறகு கேபி மொய்தின் சாய்பு நாடக கம்பெனிக்குப் போனார்.

அந்தக் காலகட்டத்தில் வேலூர் நடராஜ முதலியார், ஆந்திரா வெங்கைய நாராயணன் ஆகியோர் தமிழ்நாட்டில் ஊமைப் படங்களை எடுக்கத் தொடங்கினார்கள். இவர்களில் நாராயணன், ராஜலட்சுமியை கோவலன் படத்தில் (1929) மாதவியாக நடிக்க வைத்தார்.

இது ஒரு ஊமைப் படம். தொடர்ந்து உஷா சுந்தரி என்ற படத்தில் ராஜலட்சுமி நடித்தார். பல படங்களில் நடித்ததால், அந்த காலத்தில் அவரை ‘சினிமா ராணி’ என்ற பட்டப் பெயரிட்டு அழைத்தனர்.

1931-ல் எச்.எம். ரெட்டி எடுத்த முதல் தமிழ் பேசும் படமான காளிதாசில் நடித்தார் ராஜலட்சுமி. அடுத்து ‘வள்ளி திருமணம், சாவித்திரி, வஸ்திர பரிணயம், குலேபகாவலி போன்ற பேசும் படங்களில் நடித்து பேரும் புகழும் செல்வாக்கும் பெற்றார்.

1936-ல். ராஜலட்சுமி தயாரிப்பாளரானார். மிஸ் கமலா என்ற படத்தை தயாரித்ததோடு அவரே கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கினார். அத்துடன் அதில் முக்கிய வேடத்திலும் நடித்தார்.

1939-ல் மதுரை வீரன் படத்தை தயாரித்து வெளியிட்டார். தமிழ் திரை உலகின் சகலகலா வல்லியான ராஜலட்சுமி நடித்த காளிதாஸ், ராமாயணம், கோவலன் வள்ளி திருமணம். குலேபகாவலி, வீர அபிமன்யூ உள்ளிட்ட 14 படங்களில் அவர் நடித்திருக்கிறார்.

“இப்போதெல்லாம் பாடுவதற்கு ஒரு ஆள், பேசுவதற்கு ஒரு ஆள். ஒத்திகைக்கு ஒரு ஆள் என்று வைத்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் நாங்களே பாட வேண்டும். நடிக்க வேண்டும். நாங்களே மேக்கப் செய்து கொள்ள வேண்டும்” என்று 1956-ல் ஒரு சினிமா வார பத்திரிகையின் தீபாவளி மலர் கட்டுரையில் ராஜலட்சுமி குறிப்பிட்டுள்ளார்.

– நன்றி வாவ் தமிழா 

#tprajalakshmi #பிடிராஜலட்சுமி #காளிதாஸ் #ramayanam #ராமாயணம் #kovalan #கோவலன் #vallithirumanam #வள்ளிதிருமணம் #gulepakavali #குலேபகாவலி #veeraabimanyu #வீரஅபிமன்யூ #kalidoss