தமிழ்த் திரையுலகில் பாடி நடிப்பவர்களுக்கு பதிலாக பின்னணிப் பாடகர்கள் அறிமுகமான கால கட்டத்தில் இசைக் கச்சேரி மேடைகளிலும் திரை இசை உலகிலும் புகழ்பெற்றவர் மதராஸ் லலி தாங்கி வசந்த குமாரி எனும் எம்.எல். வசந்தகுமாரி.
1948 ஆம் ஆண்டு முதல் சுமார் 20 வருடங்கள் தமிழ்த்திரை இசையில் தனது மென்மையான குரலினால் சாதனை படைத்தார். ஏனைய பாடகர்களுடன் ஒப்பிடுகையில் இவரது பாடல்கள் எண்ணிக்கையில் குறைவு என்றாலும் மனதை விட்டு நீங்காத பாடல்கள் பல உள்ளன.
இசைக் குடும்பத்தில் பிறந்த எம்.எல். வசந்தகுமாரி இரண்டு வயதாகும் போதே ஸ்வரங்களைச் சொல்ல ஆரம்பித்து விட்டாரம். இவருடைய தகப்பனான கூத்தனார் அய்யாசாமி அய்யர் கர்நாடக சங்கீதத்திலும் ஹிந்துஸ்தானி இசையிலும் புகழ் பெற்றவர்.
தாயார் லலிதாங்கி கோயம்புத்தூர் தாயி, ப்ளூட் சுப்பராவ், வீணை தனம் போன்றவர்களிடம் முறைப்படி கற்றுத் தேர்ச்சி பெற்றார். தமது மகளான எம்.எல்.வசந்த குமாரி தம்மைப்போல் பாடகியாக வருவதை பெற்றோர் விரும்பவில்லை.
அதேவேளை மகளின் சங்கீத ஆர்வத்துக்கும் தடை விதிக்கவில்லை. மகளை சிறந்ததொரு வைத்தியராக்க வேண்டும் என்றே பெற்றோர் விரும்பினார்கள்.
பெற்றோரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காக கொன்வென்டில் படித்த எம்.எல்.வசந்த குமாரி சங்கீதத்தையும் கைவிடவில்லை.
தாயாரான லலிதா தாங்கி கச்சேரி செய்யும் போது மகளான எம்.எல். வசந்தகுமாரி பின்பாட்டுப் பாடினார். எம்.எல். வசந்தகுமாரியின் பாடலைக் கேட்டு மகிழ்ந்த அன்றைய பிரபல பின்னணிப் பாடகரான ஜி.என்.பாலசுப்பிரமணியம் அவரைத் தனது மாணவியாக்கினார்.
13 ஆவது வயதில் எம்.எல்.வசந்தகுமாரி பாடிய முதலாவது இசைத்தட்டு வெளியான அதே சமயம் முதன் முதலாக தனிக் கச்சேரியையும் நடத்தினார்.
இரண்டாவது உலக மகா யுத்தத்தின் போது சென்னை மீது ஜப்பான் குண்டு போடப் போவதாக செய்தி பரவியதும் மக்கள் அனைவரும் நகரத்தை விட்டு வெளியேறினர்.
இதனால் அய்யாசாமி அய்யரின் வருமானம் வீழ்ச்சியடைந்தது. லலிதாங்கி நோயில் வீழ்ந்ததால் எம்.எல்.வசந்தகுமாரி 15ஆவது வயதில் வசந்தத்தை இழந்து குடும்பப் பாரத்தை சுமந்தார்.
லட்சுமி காந்தன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு விடுதலையாகி சிறையிலிருந்து வெளி வந்த ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜபாகவதர் ராஜமுத்தி என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்தார்.
ராஜமுக்தியில் எம்.கே. தியாகராஜபாகவதருக்கு இணை ஜோடியாக வி.என்.ஜானகி நடித்தார். வி.என். ஜானகிக்கு பின்னணிப் பாட தனக்கு இணையாக பாடக் கூடிய ஒருவரைத் தேடிய போது கச்சேரி மேடைகளிலும் இசைத்தட்டுகளிலும் ஒலித்த எம்.எல். வசந்தகுமாரியின் குரல் அவரைக் கவர்ந்தது.
ராஜமுக்தி படத்தில் எம்.கே. தியாகராஜபாகவதருடன் இணைந்து இரண்டு பாடல்களையும், இரண்டு தனிப் பாடல்களையும் அப்படத்தில் வில்லியாக நடித்த பானுமதியுடன் இணைந்து ஒரு பாடலையும் பாடினார். அதன் பின்னர் எம்.எல்.வசந்தகுமாரியின் வாழ்வில் வசந்தம் வீசியது.
நந்த கோபாலனோடு நான் ஆடுவேன்.
கண்ணன் மன நிலையே தங்கமே தங்கம், அய்யாசாமி ஆவோஜி சாமி, சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா, எல்லாம் இன்பமயம், கொஞ்சும்புறாவே, குயிலே உனக்கனந்தகோடி நமஸ்காரம், கூவாமல் கூவும் கோகுலம், தாயே யசோதா, ஆடல் காணீரோ அந்திமயங்குதடி, ஆடாத மனமும் உண்டோ, முன்னம் அவனுடைய நாமம் கேட்டான், மஞ்சள் வெயில் மாலையிலே போன்ற பாடல்கள் இன்றும் மனதை வருடுகின்றன.
இவரது கணவர் விகடம் கிருஷ்ணமூர்த்தி – 1951-ல் நடந்தது. கணவர் மதுரையைச் சேர்ந்தவர். விகடக் கச்சேரி செய்வார். அந்த நாளில் 3-4 படங்களில் கூட நடித்துள்ளார்.
எம்.எல். வசந்தகுமாரியின் மகள் ஸ்ரீவித்யா மிகச் சிறந்த நடிகை என்று பெயர் பெற்றவர். தாயைப்போல் பிரபல பாடகி இல்லை என்றாலும் ஓரளவு இசை ஞானம் உடையவர்.
– நன்றி: ரமணி மித்திரன்