Take a fresh look at your lifestyle.

ஐஸ்வர்யா ராயின் ‘இயல்பான’ இன்னொரு முகம்!

46

வானில் பல நட்சத்திரங்கள் மின்னுவது போல, திரை வானிலும் பல நட்சத்திரங்கள் நம் மனதை கொள்ளை கொண்டுள்ளன. அந்த வகையில் எல்லோர் நெஞ்சங்களிலும் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய்.

ஒரு விளம்பர மாடலாக, தன் பயணத்தைத் துவக்கிய இவர், தன்னுடைய அழகாலும் ஆற்றலாலும் உலக அழகிப் பட்டத்தை வென்று, பின்னர் திரைத் துறையிலும் தனக்கென்று தனி இடம் பிடித்தார்.

உலக அரங்கில் உற்று கேட்கப்படும் குரலாக இவர் விளங்குகிறார். சமூக அக்கறை கொண்டுள்ள இவர், மகளிர் நலன் குறித்த பல்வேறு சர்வதேச கருத்தரங்குகளில் பங்கு பெற்று, இந்தியாவின் கருத்தைப் பதிவு செய்த பெருமைக்குரியவராகவும் திகழ்கிறார்.

சென்ற வருடம் துபாயில் நடைபெற்ற உலக மகளிர் கருத்தரங்கில் பேசிய இவர், பலதரப்பட்ட பின்னணிகளில் இருந்து பல குரல்கள் ஒன்றாக ஒலிப்பது, உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு மாற்றத்தை உண்டாக்குவதற்கும் சமத்துவத்தை வளர்ப்பதற்கும், வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கும் ஆகும்.

இத்தகைய நல்ல வாய்ப்பை வழங்கும் ஒரு அமைப்பாக இந்த கருத்தரங்கம் செயல்பட்டு வருவதாகவும், பல தனிநபர்கள் ஒன்றாக செயல்படுவதால் ஏற்படும் வலிமைக்கு சான்று என்றும் தெரிவித்தார்.

வாழ்க்கை ஒரு வரம். அது பகிரப்படும் பொழுதே அர்த்தமுள்ளதாக மாறுகிறது என்று கூறியவர், தன்னுடைய பயணம் இந்த தத்துவத்தை ஒட்டியே அமைந்திருக்கிறது என்றும், சமூகத்திற்கு தான் அளிக்கக்கூடிய மிகச்சிறந்த பங்களிப்பை இது உணர்த்தியதாகவும் தெரிவித்தார்.

கண் வங்கி சங்கத்துடன் தான் இணைந்து பணியாற்றுவது இதற்கு சான்றாகும் என்றார்.

இதனைப் போன்றே அண்மையில் இவர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் நிகழ்த்திய உரை, அனைவரின் கவனத்தையும் கவர்வதாக அமைந்துள்ளது.

சமீபத்தில் ஆந்திர மாநிலம் புட்ட பர்த்தியில் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்று பேசினார் ஐஸ்வர்யா ராய்.

தன்னுடைய பணிவான வணக்கத்தை இந்த புனிதமான தினத்தில் தெரிவிப்பதாக, தன் உரையை தொடங்கியவர், தன்னுடைய இதயம் பக்தியாலும் நன்றி உணர்வாலும் நிரம்பி இருப்பதாகவும்,

ஸ்ரீ சத்ய சாய்பாபா பிறந்து 100 ஆண்டுகள் கடந்து போன பின்பும், அவரின் கொள்கைகள், பாடங்கள், வழிகாட்டுதல்கள், இரக்க குணம் ஆகியவை, உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் எதிரொலிக்கின்றன என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதற்கு பெருமை சேர்த்ததற்காக, பிரதமர் மோடிக்கு இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும்,

அவரின் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதும் மற்றும் ஊக்கம் அளிக்க வல்லதுமான பேச்சை கேட்க ஆவல் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

உண்மையான தலைமைத்துவம் என்பது சேவையே ஆகும். மனிதனுக்கு ஆற்றும் சேவை கடவுளுக்கு ஆற்றும் சேவை என்ற சுவாமி கூற்றை நினைவு கூறும்படி உள்ளது பிரதமரின் வருகை என்றார்.

ஸ்ரீ சத்திய சாய்பாபா அவர்கள், பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் ஆகியவற்றை, எளியோரும் கற்க ஏதுவாக, இலவசமாக தொடங்கியதாகவும்,

பல்நோக்கு மருத்துவமனைகளை, புட்டபர்த்தி உள்ளிட்ட நாட்டின் பல நகரங்களில் நிறுவி, மருத்துவ வசதிகளை இலவசமாக ஏழை மக்களுக்கு வழங்கியதாகவும் தெரிவித்தார்.

நல்லொழுக்கம், அர்ப்பணிப்பு, இறை வழிபாடு, தீர்மானித்தல், சரியானவற்றை கண்டறிதல் ஆகிய ஐந்து குணங்களும் அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு வழி வகுக்கும் என்று, பாபா எப்பொழுதும் குறிப்பிடுவார் என்றார்.

பிரார்த்தனை செய்யும் உதடுகளைவிட, பணிவிடை செய்யும் கைகளே புனிதமானவை என்று பாபா கூறியதை மேற்கோள் காட்டிய அவர்,

நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இந்த தருணத்தில், அவரின் போதனையான, அனைவரையும் நேசி அனைவருக்கும் உதவி செய் என்றதையும்,

ஒரே ஒரு ஜாதி தான் உள்ளது, அதுதான் மனித ஜாதி.
ஒரே ஒரு மதம் தான் உள்ளது, அதுதான் அன்பு மதம்.
ஒரே ஒரு மொழி தான் உள்ளது, அதுதான் இதய மொழி.
ஒரே ஒரு கடவுள் தான் உண்டு, அவர்தான் எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள்.

– என்ற சாய்பாபாவின் பொன்மொழிகளை நினைவு கூர்ந்து, தன் உரையை நிறைவு செய்தார் ஐஸ்வர்யா ராய்.

ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக அமைந்த அவரது பேச்சு நாடு முழுவதும் பேசுபொருளானது.

– வாணி. எஸ்