பிரமாண்டமாக பெரும் பொருட்செலவில் ரஜினி, கமல் படங்கள் உருவாகி வெற்றிபெற்ற கால கட்டத்தில், குறைந்த முதலீட்டில் படங்கள் தயாரித்து, இயக்கி வெற்றி கண்டவர் ராம. நாராயணன்.
அரசியலிலும் இருந்தார். கலைஞர் கருணாநிதியின் அன்புக்கு பாத்திரமானவர். எம்.எல்.ஏ-வாக ஒரு முறை பதவி வகித்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒடியா, மராத்தி, பெங்காலி ஆகிய மொழிகளிலும் சினிமாக்களை இயக்கிய ஒரே இயக்குநர் இவராகத்தான் இருப்பார். 125 திரைப்படங்களை இயக்கி உள்ளார்.
ராம.நாராயணன் இயக்கத்தில் கடந்த 1990 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம், ‘ஆடிவெள்ளி’. சீதா, நிழல்கள் ரவி, வாகை சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அவரது ஆஸ்தான நட்சத்திரங்களான யானைக்கும், பாம்புக்கும் முக்கிய கேரக்டர் அளித்திருந்தார்.
இந்த படத்தில் யானையின் பெயர் ‘வெள்ளிக்கிழமை ராமசாமி’ . சங்கர்-கணேஷ் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் ஹிட் மிகப்பெரிய வெற்றிபெற்ற இந்தப் படம் ஆன்மீகத்தை மைய இழையாக கொண்டிருந்தது. ‘ஆடிவெள்ளி’ பான் இந்தியா படமாக மீண்டும் தயாராகிறது.

இராம.நாராயணனின் மகனும், தயாரிப்பாளருமான முரளி என்.ராமசாமியின் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது. ‘பர்மா’, ‘ஜாக்சன் துரை’, ‘ராஜா ரங்குஸ்கி’, ‘ரேஞ்சர்’ ஆகிய படங்களின் இயக்குனர் பி.வி.தரணிதரன் எழுதி இயக்குகிறார்.
இந்தப் படத்தில் சீதா வேடத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பான் இந்தியா படம் என்பதால், அவர் அதிக சம்பளம் கேட்டுள்ளார். அதிர்ந்து போன தேனாண்டாள் பிலிம்ஸ் நயன்தாராவுக்கு பதிலாக திரிஷாவை ஒப்பந்தம் செய்து விட்டது.
– பாப்பாங்குளம் பாரதி