ஐம்பதுகள் வரை மதராஸ் மாகாணத்து மக்களில் பெரும்பாலானோர் விவசாயத்தையே சார்ந்திருந்தனர்.
கூலி விவசாயிகள், சிறு விவசாயிகள், குத்தகைதாரர்கள், நிலப்பிரபுக்கள் போன்ற வரிசை அச்சமூகத்தில் நிலவி வந்தது.
விவசாயிகள் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக கிளர்ந்தெழுவதும், கூலியை தானியமாகவும் காசாகவும் தந்திடவும், நடப்புக்கு களையெடுக்க அறுக்க இப்படி விவசாயப் பணிகள் ஒவ்வொன்றுக்கும் பிரத்யேக கூலிகளை நிர்ணயம் செய்திடவும் சங்கம் அமைத்து கோரிக்கைகளை முன்வைப்பதும் அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருந்தது.
இத்தனைக்கும் மாகாணத்தின் பெரிய ஜில்லாக்களாக இருந்த திருச்சி, தஞ்சை, தென்னாற்காடு, கோவை போன்றவற்றில் விவசாயம் பிரதானமாக இருந்து வந்திருக்கிறது.
இதே காலத்தில் தொழிற்சாலைகள் என்பது பெரிய அளவில் இல்லையென்றாலும் இருக்கக் கூடியவற்றில் கணிசமானவை விவசாயத்தை சார்ந்தவையாகவே இருந்து வந்திருக்கிறது.
நெல் அரவை, சர்க்கரை ஆலைகள், ஜின்னிங், பஞ்சாலைகள், நெசவாலைகள், சுருட்டு, தோல் பதனிடுதல் போன்றவை இம்மட்டில்தான் இருந்து வந்திருக்கின்றன.
தமிழ் சினிமா முப்பதுகளில் பேசத் துவங்கிவிட்டது. புராண இதிகாசங்களையும் நாட்டார் கதைகளையும் பேசி வந்தது முடிவுற்று அடுத்த கட்டத்தில் அம்பாளா பேசினாள் என்று கேள்வி கேட்டதேயொழிய,
மாகாணத்தின் உற்பத்தியில் பிரதான பங்கினைக் கொண்டிருக்கும் விவசாயம், அதில் ஈடுபடுவோர், அவர்களின் நிலப்பசி, உழுபவனுக்கே நிலம் என்று முழக்கத்தின் எழுச்சி போன்றவற்றை திரையுலகு கையாளவில்லை.
இத்தனைக்கும் அவ்வப்போது நாங்கள் சேற்றில் கால் வைக்கா விட்டால் நீங்கள் சோற்றில் கை வைக்க முடியாது என்ற ஸ்டைலில் வசனங்களும், நிலப்பிரபுத்துவத்தின் பாலியல் வக்கிரங்களும் திரையில் அவ்வப்போது இடம் பெற்றும் வந்திருக்கின்றன.
ஏழை படும் பாடு, உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம், ஏழை உழவன், மக்களைப் பெற்ற மகராசி, நாலுவேலி நிலம், பொன் விளையும் பூமி, பாட்டாளியின் வெற்றி, பழனி, பிரசிடெண்ட் பஞ்சாட்சரம், பொன் வயல், விவசாயி, பட்டிக்காடா பட்டணமா, உழவன் மகன் இவையாவுமே கடந்த காலத் திரைப்படங்கள்தான்.
ஏழைகள், விவசாயிகள், விவசாய சமூகம் பற்றிய பேசக்கூடியவை என்ற கருத்தை இப்படத்தின் பெயர்கள் தோற்றுவிக்கின்றன.
இவற்றில் ஒரு சிலவற்றில் விவசாயப் பிரச்னையின் ஒரு பக்கம் எடுத்துக் கொள்ளப்பட்டாலும் பெரும்பாலானவை விவசாய சமூகத்தின் அடிப்படையை அறியாது மேம்போக்காக குடும்பப் பகைமையின் பேரில் தீர்வைக்கூறிச் செல்பவையாகவே இருந்து வந்திருக்கின்றன.
விவசாயச் சூழலில் உருவான தி.ஜானகிராமன் எழுதியதுதான் நாலு வேலி நிலம். இத்தனைக்கும் இவர் அச்சு அசலான டெல்டா ஜில்லாவில் உருவான படைப்பாளி.
நில உறவுகள் பற்றி இவர் அறிந்த அளவிற்கு மற்றொருவர் அறியும் வாய்ப்பு கிடையாது.
இருப்பினும் விவசாய சமூகம் எதிர்கொள்ளும் பிரச்னைகளை இவரது நாடகம் முன் வைக்கவில்லை.
பின்னால் இதைத் திரைப்படமாக இயக்கிய மற்றொரு நிலச்சுவான்தார் குடும்பத்து வி.சீனிவாசன் வழக்கமான குடும்பத்து மோதல்களைத்தான் கிராமத்து பின்னணியில்தான் படமாக்கியிருந்தார்.
இவர் ஏற்கனவே முதலாளி என்ற பெயரில் திரைப்படமொன்றை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
வழக்கமான குடும்பப் பகைமையை கிராமியப் பின்னணியில் கூறிய மற்றொரு படம்தான் மக்களைப் பெற்ற மகராசி.
இதில் இடம் பெற்ற “மணப்பாறை மாடு கட்டி, மாயவரம் ஏரு பூட்டி” என்ற பாடலுக்காக அப்படம் பெரிதும் பேசப்பட்டது.
இத்தனைக்கும் கூலியும், விவசாயப் பொருட்களுக்கு ஆதார விலையும் கிடைக்கவில்லை என்று போராடி வருகையில் அப்பாடலில் “சேர்த்த பணத்தை சிக்கனமா செலவு பண்ண பக்குவமா” என்று மருதகாசி அறிவுரையினையும் அளித்திருந்தார்.
“சின்னாளப்பட்டியிலே கண்டாங்கி எடுத்து தன் கையாலே கட்டி விடுவதைத்தான்” விவசாயிகளின் பிரச்சனையாக பட்டிக்காடா பட்டணமா எடுத்துரைத்தது.
இதற்கு விவசாயியே பரவாயில்லை என்றுதான் தோன்றுகிறது. ஏனெனில் “கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி”தான் விவசாயி என்பதையாவது அது கூறியது.
இந்த ரீதியில் வெளியான முன்னர் கூறிய படங்களிலிருந்து சற்றே மாறுபட்டது எனில் பீம்சிங் இயக்கத்தில் வெளியான பழனியைத்தான் குறிப்பிட்டாக வேண்டும். இதன் மூலக்கதை ஜீ.வி.அய்யர் எழுதியது.
வினோபா பாவேவின் பூமிதானப் பாதிப்பில் உருவான கன்னடப் படத்தையொட்டி உருவான தமிழ்ப்படமாகும் இது.
நிலப்பிரபுத்துவத்தின் கோரப்பற்களில் சிக்கிக் கொண்ட விவசாயக் குடும்பத்தின் கதையை கூற முயற்சித்தது.
நிலப்பசி கொண்ட விவசாயியின் நிலைமை மேலும் மேலும் மோசமடைந்து குடும்பமும் சின்னா பின்னமாகி சிதறிக் கொண்டிருக்கையில் “மனித ஜாதியில் துயரம் யாவுமே மனதினால் வந்த நோயடா” என்று நாயகன் பாடுகிறான்.
இருப்பினும் நிலப் பிரச்சனைகள், மக்கள் வாழும் பொருட்டு கிராமங்களை விட்டு வெளியேறுவது போன்றவற்றை இப்படம் மட்டுமே அன்றைய தினம் ஓரளவு பேசியது.
– ராமச்சந்திர வைத்தியநாத்