பொதுவாக கமர்ஷியல் படங்கள், கலைப்படைப்புகள் என்று இரு வகையாகத் திரையுலகில் திரைப்படங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இரண்டுக்குமான இடைவெளி ஒருகாலத்தில் அதிகமாக இருந்தது. மெதுமெதுவாக அந்த வெளி குறைந்து, இப்போது ‘அது எங்கே’ என்று கேட்கிற நிலைமை உருவாகியிருக்கிறது.
இடைப்பட்ட காலகட்டத்தில் இரண்டுக்குமான நல்ல அம்சங்களைச் சேர்த்து சில படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவை வணிகரீதியாகவும் விமர்சனரீதியாகவும் வெற்றிகளைச் சுவைத்திருக்கின்றன.
மிகச்சில படங்கள் இரண்டு வகைகளிலும் உள்ள மோசமான அம்சங்களை உள்வாங்கிக்கொண்டு, ரசிகர்களைப் படாத பாடு படுத்தியிருக்கின்றன. அவற்றுக்கும் நிறையவே தமிழ் சினிமாவில் உதாரணங்கள் உண்டு.
அந்த உதாரணங்களைக் கண்டு ரசித்தவர்கள், பொருமியவர்களால் சிறப்பான காட்சியாக்கத்தைத் தந்த இயக்குனர்களைப் பட்டியலிட முடியும். அந்த வரிசையில் தனித்துவமான இடத்தைப் பெறுபவர் இயக்குனர் வசந்த்.
பாலசந்தரிடம் ‘பாடம்!
இயக்குனர் சிகரம் என்று போற்றப்படுகிற கே.பாலசந்தரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் வசந்த்.
சிந்து பைரவி, புன்னகை மன்னன், உன்னால் முடியும் தம்பி என்று சுமார் 18 படங்களில் வேலை பார்த்த அனுபவம் இவருக்குண்டு.
ஆரம்ப காலத்தில் ‘நாடக பாணி’ ஸ்கிரிப்ட்களை திரையாக்கம் செய்த பாலசந்தர் உலகப் படங்களின் தாக்கத்தினால், சக இயக்குனர்கள் உடனான போட்டியினால் வித்தியாசமான கதைக்களங்கள், கதாபாத்திரங்களைத் தந்து வந்த காலமது.
அந்தக் காலகட்டத்தில் பணியாற்றியதால், கிட்டத்தட்ட அதே போன்ற கதை சொல்லல் ரசனை பிற்காலத்தில் வசந்திடம் இருந்தும் வெளிப்பட்டது.
பாலசந்தரிடம் உதவி கதை வசனகர்த்தாவாக இருந்த அனந்து எழுதிய மூலக்கதையைக் கொண்டு ‘கேளடி கண்மணி’ தந்தார் வசந்த்.
அப்படத்தின் உள்ளடக்கம் பாலசந்தரின் கதை சொல்லலைப் பிரதியெடுத்திருந்தாலும், அதன் காட்சியாக்கம் வேறுமாதிரியான தாக்கத்தை ரசிகர்களிடத்தில் ஏற்படுத்தியது.
பிறகு ‘நீ பாதி நான் பாதி’ வெளியானது. அதில் வந்த ‘நிவேதா’ பாடல் வசந்தின் சிறப்பம்சங்களில் தலையாயது என்ன என்று காண்பித்தது. அது, பாடல் காட்சிகளைப் படமாக்குவதில் அவர் காட்டுகிற சிரத்தை மற்றும் ரசனை.

ஆம், வசந்தின் படங்களில் பெரும்பாலான பாடல்கள் திரையில் ஜொலித்தன. மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்க வைத்தன.
‘ஆசை’ படத்தில் வந்த ‘மீனம்மா’, ‘ஷாக்கடிக்குது சோனா’, ‘கொஞ்சநாள் பொறு தலைவா’, ‘புல்வெளி புல்வெளி’, ‘திலோத்தமா’ என்று அனைத்துப் பாடல்களும் ‘ரிப்பீட்’ மோடில் கண்டுகளிக்க வைத்தன.
தியேட்டரில் ‘ஒன்ஸ்மோர்’ கேட்கத்தக்க வகையில் வசந்த் இயக்கிய படங்களின் பாடல்கள் இருந்தன என்பதே உண்மை.
‘நேருக்கு நேர்’, ‘ரிதம்’, ‘அப்பு’, ‘ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே’ என்று அவரது அனைத்து படங்களிலும் இதனை உணர முடியும்.
பட்ஜெட் குறைவாக அமைந்த படங்களிலும் கூட, திரையில் அழகியல் அம்சங்களைப் புகுத்துவதை வசந்த் கைவிடவே இல்லை. ‘சத்தம் போடாதே’, ‘மூன்று பேர் மூன்று காதல்’ படங்கள் அதற்கான உதாரணங்கள்.
போலவே, பாடல்களை இசையமைப்பாளர்களிடம் கேட்டுப் பெறுவதென்பதிலும் வசந்த் வித்தகராக இருந்தார்.
அதனாலேயே, அவரால் இளையராஜா தொடங்கி கீரவாணி, தேவா, யுவன் சங்கர் ராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என்று வெவ்வேறுபட்ட இசையமைப்பாளர்களோடு பணியாற்ற முடிந்தது. அவர்களது சிறப்பான ஆல்பங்களாகவும் அப்படங்கள் அமைந்தன.

வசந்த் இயக்குனராகப் பணியாற்றாத படத்திலும் கூட, அவரது ‘டச்’ இருந்திருக்கிறது.
அதற்கொரு உதாரணம், கவிதாலயாவின் ‘அண்ணாமலை’.
அந்தப் படத்தின் திரைக்கதை, பாடல்கள் ஆக்கப் பணிகள் நடக்கும் வரை அதன் இயக்குனராக வசந்த் இருந்தார்.
படப்பிடிப்புக்கு முன்னதாக, ஏதோ சில காரணங்களால் அவர் வெளியேறினார்.
பாலசந்தரிடம் ஒருகாலத்தில் உதவியாளராக இருந்த சுரேஷ் கிருஷ்ணா அதன் இயக்குனர் ஆனார். பின்னர் வீரா, பாட்ஷா, பாபா படங்களைத் தந்தார் என்பது பழங்கதை.
‘அண்ணாமலை’யில் வரும் ‘அண்ணாமலை.. அண்ணாமலை..’, ‘ஒரு பெண்புறா’, ‘றெக்கை கட்டி பறக்குதடி’, ‘வெற்றி நிச்சயம்’ பாடல்கள் உருவானதில் வசந்தின் பங்கு என்னவென்பதை இசையமைப்பாளர் தேவா சொன்னால்தான் நமக்குத் தெரியும்.
ஒரு வார காலத்தில் அந்தப் படத்தின் காட்சிகளை மாற்றி சுரேஷ் கிருஷ்ணா படப்பிடிப்பு நடத்தியதாகப் பின்னர் சொல்லப்பட்டது. அதிலிருந்தே பாடல்கள் ஆக்கத்தில் வசந்தின் பங்களிப்பை நம்மால் யூகிக்க முடியும்.
ஆனால், இன்றுவரை அது பற்றி வசந்த் பொதுவெளியில் எந்தக் கருத்தையும் பகிர்ந்ததில்லை.
வித்தியாசமான ‘கதை சொல்லல்’!
வசந்தின் படங்களில் ஒவ்வொரு காட்சியும் ஷாட்டும் ‘அழகியலை’ நிறைத்ததாக இருக்கும். விளம்பரப் படங்கள் எடுப்பதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தது அதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்.
‘ஆசை’ சிறப்பானதொரு ‘கமர்ஷியல்’ படமாக மிளிர்ந்த பிறகு, அதே பாணியிலான படங்களை அவர் உருவாக்கவில்லை.
அதே நேரத்தில் கமர்ஷியல் அம்சங்களுக்கும் கலையம்சமிக்க படைப்புகளுக்குமான இடைவெளியைக் குறைப்பதில் அவரது கதை சொல்லல் கவனம் செலுத்தியது.
அந்த உத்தி, இயக்குனர் வசந்தை கொண்டாடக்கூடிய ரசிகர் வட்டத்தை உருவாக்கியது. முக்கியமாக, எடுத்துக்கொண்ட கதைக்கு நேர்மையாக இருக்கக்கூடிய காட்சிகளை அடுக்குகிற திறமை அவர்களைச் சுண்டியிழுப்பதாக இருந்தது.
கேளடி கண்மணி முதல் அவர் இயக்கிய அனைத்துமே அதனைச் சாதித்திருக்கும்.
‘அப்பு’, ‘ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே’, ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ ஆகியன ரசிகர்களை ஈர்ப்பதில் சிறிது குறை வைத்தன. கால தாமதமாக வந்த ‘ரிதம்’ அந்தக் குறையைச் சரி செய்திருந்தது.
‘ஏ கிளாஸ் ரசிகர்களை ஈர்ப்பதாகவே வசந்தின் படங்கள் இருந்தன’ என்றொரு குற்றச்சாட்டும் அவரது படைப்பாக்கம் மீது வைக்கப்பட்டதுண்டு.

கடந்த இருபதாண்டுகளாகத் திரையுலகில் ஏ,பி,சி செண்டர்கள் குறித்தான பேச்சு முற்றிலுமாக இல்லாமல் போயிருப்பது, அது போன்ற வாதங்களை வினோதமாக நோக்கச் செய்யும்.
‘தக்கையின் மீது நான்கு கண்கள்’, நவரசாவில் ‘பாயாசம்’ என்று தான் ரசித்த சிறுகதைகளைக் காட்சியாக்கம் செய்கிற வல்லமையும் அவரிடத்தில் உண்டு.
அப்படைப்புகள் குறிப்பிட்ட சிறுகதைகளை வாசித்தவர்களையும் திருப்திப்படுத்தின என்பதுதான் ஆச்சர்யம்.
ஒரு வகுப்பறையில் இருக்கிற மாணவ மாணவியர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமானவர்கள் என்று உணர்கிற ஆசிரியர், ஒரு ஆண்டில் குறிப்பிட்ட நாட்களில் ஒவ்வொருவரும் தம்மைக் கொண்டாடக்கூடிய தருணங்களை உருவாக்குவார்.
தமிழ் சினிமா ரசிகர்களும் அப்படித்தான் பல இயக்குநர்களை, இதர தொழில்நுட்பக் கலைஞர்களை, நடிப்புக் கலைஞர்களைக் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில், வசந்த் தன்னைக் குறித்து பெருமிதப்படும்படியான வெற்றிகளை அவருக்கு அளித்திருக்கின்றனர்.
நிச்சயமாக, அவரது படைப்புகள் குறித்து, அதன் பின்னிருக்கிற அனுபவங்கள் குறித்து, சினிமாவை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் அனைவரும் விவாதிக்கும்படியான,
அவரிடத்தில் இருந்து விளக்கங்களைக் கேட்டுப் பெறுகிற விதமான வெற்றிகளாக அவை உள்ளன.
இயக்குநர் வசந்தின் ரசிகர்களுக்கு அதுவே போதும்..!
– மாபா