Take a fresh look at your lifestyle.

ரசிகர்களின் கவனத்தைக் கடத்துவானா ‘தாவூத்’?

15

லிங்கா, அறிமுகக் கதாநாயகி சாரா ஆச்சர், திலீபன், ராதாரவி, சாய் தீனா, சாரா, அபிஷேக், சரத் ரவி நடிப்பில், அறிமுக இயக்குநர் பிரசாந்த் ராமன் எழுதி இயக்கி இருக்கும் படம் ‘தாவூத்’. TURM புரொடக்ஷன் ஹவுஸ் சார்பில் உமா மகேஸ்வரி தயாரித்து உள்ளார்கள்.

மும்பை மாபியா டான் தாவூதுக்கு இந்தியா முழுக்கக் கடத்தலுக்கான வலைப் பின்னல் இருக்கிறது.

சென்னைக்கு வரும் தாவூதின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளை எப்போதும் பத்திரமாக சேர வேண்டிய இடங்களுக்கு அனுப்பி பணம் பெற்று தாவூதுக்கு அனுப்பி அதற்கான பங்குத் தொகையையும் பெறுபவன் மூர்த்தி (சாய் தீனா).

மூர்த்தியை வீழ்த்தி தாவூதுவின் ஆளாக ஆக ஆசைப்படுகிறான் விசாகம் (அபிஷேக்).

விசாகத்தின் நம்பிக்கையான கையாள் ஜானி (சரத் ரவி), ஜானியின் காமத் தோழி டேனி (சாரா ஆச்சர்),

கடனுக்கு கார் வாங்கி கேப் கார் ஓட்டிக்கொண்டு, வட்டி கட்ட முடியாமல் கடன் கொடுத்தவனிடம் (சேரன் ராஜ்) அடிக்கடி அடி வாங்கும் கேப் ஓட்டுநர் தம்பிதுரை (லிங்கா) என கதாப்பாத்திரங்கள் நீள்கிறது.

ஒரு முறை தம்பிதுரையின் காரில் டேனி ஏற, பேச்சு நீள, தம்பிதுரை தனது கடன் பிரச்னையைச் சொல்ல, ஜானியிடம் சொல்லி பண உதவி செய்வதாக சொல்கிறாள் டேனி. அவள் ஜானியிடம் சொல்ல, அவன் கோபப்படுகிறான்.

அதன்பிறகு தம்பிதுரை அப்பாவி என்பதை ஜானி உணர்கிறான்.

தாவூதின் சரக்கை யார் கைப்பற்றிக் கடத்தி, விற்று தாவூத்திடம் நல்ல பெயர் வாங்குவது என்பதில் மூர்த்திக்கும் விசாகத்துக்கும் போட்டித் தீவிரம் அடைகிறது.

நம்பிக்கையான ஒரு புது ஆளை ஜானியிடம் தேடச் சொல்கிறான் விசாகம்.

தம்பிதுரையையே நம்பகமான ஆள் என்று விசாகத்திடம் சொல்கிறான்.

விசாகம், தம்பிதுரையிடம், “சும்மா காரில் கொண்டு போய்க் கொடுத்து விட்டு வருவது சுலபம் என்று நினைக்காதே,

மூர்த்தி ஆட்கள் மூலமோ, வேறு ஆட்கள் மூலமோ சரக்கு மிஸ் ஆனால், நம் யாரையும் தாவூது உயிரோடுவிட மாட்டான்” என்கிறான்.

தம்பிதுரை சரக்கைக் கொண்டு போய்க் கொடுத்தானா? அந்தப் பையில் போதைப் பொருள்தான் இருந்ததா? தம்பிதுரை விசாகத்துக்கும் ஜானிக்கும் உண்மையாக இருந்தானா? மூர்த்தி விளையாடிய ஆட்டம் என்ன? என்பதே படம்.

மீண்டும் ஒரு போதை மாபியா கதை.

கஷ்டமான சூழ்நிலையிலும் ஏழைகளுக்கு உதவும் (?) நல்ல கேப் டிரைவர் கேரக்டரில் லிங்கா கச்சிதம். பொருத்தமான நடிப்பு.

சீனியர் தாதாவாக சாய் தீனா பிரம்மாதமான நடிப்பு. 

கேப் டிரைவர்களுக்கு பயணிகளால் வரும் பிரச்சனைகளைக் காமெடி தூவி சொல்லி இருப்பது பிரம்மாதம்.

சரத் வளையாபதி மற்றும் பிரேண்டன் சுஷாந்த் ஆகியோரின் ஒளிப்பதிவு, ராகேஷ் அம்பிகாபதியின் இசை, ஆர்.கே.ஸ்ரீகாந்த் படத் தொகுப்பு ஆகியவை வழக்கமான ஒன்றாகவே இருக்கிறது.

முதல் பாதி தெளிவாகப் போகிறது. இரண்டாம் பகுதியில் திரைக்கதை பிரேக் இல்லாத கார் போல ஓடுகிறது.

முன்னரே யூகிக்க முடிந்த கிளைமாக்சையும் அரைகுறையாக சொல்கிறார்கள்.

வழக்கமான கதை, நேர்த்தி இல்லாத திரைக்கதை இவற்றால் சரக்கு இல்லாத படமாகிறது தாவூது.

– சு. செந்தில் குமரன்