Take a fresh look at your lifestyle.

‘பாகுபலி தி எபிக்’ மகாபலியா?

80

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, நாசர், சத்யராஜ், தமன்னா, ரோகிணி நடிப்பில் கே.கே. செந்தில்குமார் ஒளிப்பதிவில், மரகதமணி (கீரவாணி) இசையில் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்க,

அர்க்கா மீடியா ஒர்க்ஸ் சார்பில் ஷோபு எர்லகட்டா, பிரசாத் தேவிநேனி ஆகியோர் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் ‘புதிய’ படம் – ‘பாகுபலி The Epic’.

பாகுபலி இரண்டு பாகத்தின் கால அளவு ஐந்தரை மணி நேரம். இந்த இரண்டு பாகத்தையும் ஒன்று சேர்த்து மூன்று மணி நேரம் 45 நிமிடப் படமாகக் கொடுத்தால் அதுதான் பாகுபலி The Epic.

அப்பா கொல்லப்படக் காரணமாக இருந்த பெரியப்பனைக் கொன்று அம்மாவை மீட்பதே மொத்த பாகுபலியின் கதை.

எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் எம்.ஜி.ஆர். தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, ஆர்.எம்.வீரப்பன், வித்வான் லக்ஷ்மணன், எஸ்.கே.டி சாமி ஆகியோர் கதை எழுத,

கே.சங்கர் இயக்கிய ‘அடிமைப் பெண்’ படத்தில் இந்த பாகுபலி மொத்தப் படமும் முதல் இரண்டு மூன்று காட்சிகளுக்குள் முடிந்து விடும்.

அம்மாவின் அடிமை விலங்கை நாயகன் உடைக்கப் போக, “என் விலங்கை உடைத்தால் போதுமா?

கொடுங்கோல் அரசிடம் சிக்கி காலில் அடிமை விலங்கு பூட்டப்பட்டு சித்திரவதைகளை அனுபவிக்கும் எல்லா பெண்களையும் விடுதலை செய்துவிட்டு அப்புறம் என் அடிமை விலங்கை உடை என்று அம்மா சொல்ல,

அதை நாயகன் எம்.ஜி.ஆர். செய்வதும்தான் சுமார் இரண்டு மணி நேரம் ஐம்பது நிமிடம் ஓடும் (படத்தின் மொத்த நீளம் மூன்று மணி நேரம்) அடிமைப் பெண் படத்தின் கதை.

இன்று பிரம்மாண்டம் என்ற பெயரில் மார்தட்டும் பாகுபலியைவிட சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் சினிமா எவ்வளவு முன்னேற்றமான சிந்தனையோடு இருந்திருக்கிறது என்பதற்கு அடிமைப் பெண் ஒரு சரித்திர உதாரணம்.

ஒரு காட்சியில் மகிழ்மதி நாட்டின் எல்லைகளைக் கூறும்போது, ”மேற்கே மலபார் சமுத்திரத்தாலும் கிழக்கே உதயகிரி மலைகளாலும் வடக்கே குந்தள நதிகளாலும் தெற்கே காளகேய கிராதிகளாலும் சூழப்பட்ட மகிழ்மதி தேசம்”

அதாவது மேற்கே அரபிக்கடல், கேரளா, கர்நாடகா, கிழக்கே ஒரிசா வடக்கே இமயமலை வரை இருந்ததாம் மகிழ்மதி தேசம்.

ஆனால் தெற்கே காளகேயர்கள் என்று சொல்கிறார்களே அது யாரைத் தெரியுமா? தமிழர்களைத்தான்.

முதலில் பேச ஆரம்பித்த இனம், உலக மொழிகள் பலவற்றுக்கும் வார்த்தைகளை வாரி வழங்கிய இனம், சங்க காலத்திலேயே பெண்களுக்கு அரசாங்க செயல்பாடுகளிலும் கவிதை உலகிலும் சொத்துரிமையிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த இனத்தைதான் காளகேயர்கள் என்கிறார் ராஜமவுலி.

இந்த வசனத்தை அப்படியே தமிழில் அப்படியே எழுதியவர் தமிழால் பல நூறு கோடிகளைச் சம்பாதித்து இருக்கும் தமிழ்க் ‘கவிப்பேரரசு’ வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி என்பது இன்னொரு கொடுமை.

முதல்பாக பாகுபலி வந்தபோது, மறைந்த இயக்குனர் நடிகர் விசு, “அப்படியானால் நானும் ஒரு காலகேயன் என்பதில் பெருமைப்படுகிறேன்” என்று கூறி இருந்தார்.

இந்த பாகுபலி The Epic படத்தில் அந்த வசனத்தை நீக்கி இருக்கலாம் ராஜமவுலி.

இந்தியாவை வெள்ளையர்கள் ஆண்ட காலத்தில் இங்கிலாந்தின் பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளரான சர் ஆர்தர் காட்டன் கல்லணையைப் பார்த்தபோது வியப்பில் வாய் பிளந்து நின்றார்.

பின்னாளில் அந்த அணையை பலப்படுத்தியபோது, இதனால் எனக்கு ஒன்றும் பெரிய பெருமை இல்லை.

அந்த அணையை கட்டிய கரிகால் சோழனின் புகழுக்கு எந்த மறைப்பும் செய்யக் கூடாது என்று பிரிட்டன் அரசிடம் கோரிக்கை வைத்தவர்.

”இந்தியாவிலேயேயே இதைவிடப் பல பெரிய அணைகள் இருக்கும்போது இந்த அணைக்கு ஏன் கிராண்ட் அணைகட் என்று பெயர் வைத்தீர்கள்? என்று கேட்கப்பட்டபோது அவர் சொன்னார் “GRAND NOT BY SIZE. BUT BY TECHNICAL.”.

அப்படிப்பட்ட கரிகாலனின் பெயரில் கரிகால கட்டப்பா என்று கேரக்டரை வைத்து அவரின் முன்னோர்கள் மகிழ்மதி தேசத்துக்கு பரம்பரை பரம்பரையாக அடிமையாக இருக்க ஒத்துக் கொண்டவர்கள் என்று காட்சி வைத்திருக்கிறார்கள்.

வீரேந்திர பாகுபலி, அமரேந்திர பாகுபலி, மகேந்திர பாகுபலி என்று பெயர்கள் இருக்கிறதே அதில் இருக்கும் இந்திரன் என்பதே தமிழர்கள் சொன்ன ஐவகை நிலங்களில் ஒன்றான மருத நிலத்தின் ஆதிக் கடவுள்.

ரம்யா கிருஷ்ணன் ஆற்றில் மூழ்க, கைகளை மட்டும் மேலே உயர்த்தி குழந்தை மகேந்திர பாகுபலியைக் காப்பாற்றுவதும் படத்தில் சொல்லப்படும் குடும்ப சண்டையும் கல்கியின் பொன்னியின் செல்வன் வரலாற்று நாவலில் வரும் பகுதிகள்.

(பொன்னியின் செல்வன் என்ற பெயரோடு குழந்தையை ராஜமாதா காப்பாற்றும் காட்சியை யோசித்துப் பார்த்தால் புரியும்).

பனை மரத்தை வைத்து நெருப்புப் பந்துகள், பெரிய கற்கள் ஆகியவற்றை வீசுவது சோழர்கள் பற்றிய செப்பேடுகளில் இருப்பவை. இதை வைத்து காந்தளூர்ச் சாலை என்ற வரலாற்று நாவல் வந்திருக்கிறது.

ராஜராஜ சோழனுக்கு காந்தளூர்ச் சாலை கலமறுத்து அருளியவன் என்ற பட்டமும் இருக்கிறது.

ஆனால் அதே பாணியில் மாடுகளின் உடலில் தீ வைத்து எதிரிகள் பக்கம் அனுப்புவது என்பது நிஜமான காளகேயர்களின் உத்தியாக இருக்கக் கூடும். அது தமிழ் அரசர்கள் வரலாற்றில் இல்லை.

பதவியைக் காதலுக்காக விட்டுக் கொடுப்பது சேரர் வரலாற்றில் நிகழ்ந்து. அதன் அடிப்படையில் கண்ணதாசன் எழுதிய ‘சேரமான் காதலி’ என்ற நாவலில் இருந்து எடுக்கப்பட்டது.

தேவசேனையின் குந்தாளூர் ஊரின் அமைப்பில் சாண்டில்யனின் யவன ராணி, (யவனா யவனா என்று ஒரு பாட்டும் படத்தில் உண்டு) இருக்கிறது. கப்பல் மேகம் போல பாயும் விவரிப்பில் அவரது ‘கடல் புறா’ நாவல் இருக்கிறது.

ராஜமாதா, சிவகாமி கதாபாத்திரத்தில் சங்ககால தமிழ் இலக்கியங்கள் கூறும் பெண்களின் அதிகாரம் முக்கியத்துவம் மரியாதை எல்லாம் வெளிப்படுகிறது.

மகிழ்மதி அரண்மனை செட்டுக்கு மாடலே, நம்ம ராஜேந்திர சோழனின் கங்கை கொண்ட சோழபுரம் அரண்மனைதான்.

இப்படித் தமிழரின் வரலாற்றில், சரித்திர நாவல்களில் இருக்கும் விசயங்களை எல்லாம் யாருக்கும் தெரியாமல் ஒரு நன்றி கார்டு கூடப் போடாமல்,

திருடி, தனது கற்பனையான தெலுங்கு அரசர்களுக்கு வைத்துவிட்டு, தங்கள் வரலாற்றைத் தமிழர்கள் மேல் சாட்டி அவர்களைக் காளகேயர்கள் என்று சொல்வதுதான் பாகுபலி.

படமாக பாகுபலி The Epic எப்படி இருக்கிறது என்று பார்த்தால், பதவி ஏற்பு விழா போன்ற காட்சிகளின் அதீத பில்டப்புகள் குறைக்கப்பட்டுள்ளன.

அனுஷ்கா, தமன்னா போன்றோர் சம்மந்தப்பட்ட சில பாடல்கள், குறைக்கவோ நீக்கவோ செய்யப்பட்டுள்ளன.

நீளம் குறைந்த காரணத்தால் சில இடங்களில் பின்னணிக் குரல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஒரு சில காட்சித் துண்டுகள் புதிதாக இருக்கின்றன.

தொழில்நுட்பத் தரம் மொத்தமாகவே மேம்படுத்தப்பட்டுள்ளது. சிறப்பு. பாராட்டுகள்.

இதுபோன்ற கற்பனைக் கதைகளில் லாஜிக் பார்க்கக் கூடாது என்றாலும், ஆரம்பகாலப் பிரம்மிப்பு நீங்கி இப்போது ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ரசிகர்கள் காதில் பூ வைத்தால் கூடப் பரவாயில்லை. ஆனால் ஒரு பூ மலையையே தூக்கி வைத்து இருப்பது தெரிகிறது.

ஒரு படத்தை அதுவும் பலமுறை பார்த்த படத்தை மீண்டும் ஒரே அடியாக மூன்று மணி நேரம் முப்பத்தைந்து நிமிடம் பார்ப்பது அலுப்பாக இருக்கிறது.

ஒருவேளை பாகுபலி முதல் இரண்டு பாகங்களைப் பார்க்காதவர்களும் வரலாறு குறித்த சதிகள் அறியாதவர்களும் தமிழ் சரித்திர நாவல்கள்,

தகவல் களஞ்சியம் பற்றித் தெரியாதவர்களும் இந்த பாகுபலி The Epic பார்த்தால் அது அவர்களுக்கு ஒரு பிரம்மாத அனுபவமாக இருக்கும். கொண்டாடித் தீர்ப்பார்கள்.

– சு.செந்தில் குமரன்