திரைத் தெறிப்புகள் – 75 :
*
ஆடலும், பாடலும் இணைந்த துள்ளல் ஆட்டமாக வெளிவந்து, ரசிகர்களின் மனதைக் கவர்ந்த பாடல்களின் பட்டியலில், பல தமிழ்த் திரையிசைப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
1958-ல் வெளியான ‘உத்தமபுத்திரன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற “யாரடி நீ மோகினி” என்று துவங்கும் பாடலும் அப்படிப்பட்ட துள்ளலான ரகம் தான்.
பழம்பெரும் இசையமைப்பாளரான ஜி. ராமநாதனின் இசையமைப்பில் டி.எம். சௌந்தரராஜன், ஏ.பி. கோமளா, ஜமுனா ராணி, ஜிக்கி என்று ஒரு இசைப் பட்டாளமே இந்தப் பாடலில் ஜாலவித்தைகள் காட்டியிருக்கிறது.
“யாரடி நீ மோகினி.
கூறடி என் கண்மணி.
ஆசையுள்ள ராணி,
அஞ்சிடாமலே நீ
ஆட ஓடிவா காமினி.
யாரடி நீ மோகினி…”
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இரட்டை வேடங்களில் நடித்து, தன்னுடைய முத்திரையைப் பதித்திருக்கும் இப்படத்தில், மன்னரான சிவாஜி, குழுவினர் சூழ, படு ஸ்டைலாகவும், படு ஸ்பீடாகவும் ஆடுவதைப் பார்ப்பதே கொண்டாட்டமாக இருக்கும்.
நடனத்தில், சிவாஜி இப்பாடலில் காட்டிய பாணியையே பின்னாளில் சில பிரபல நடிகர்களும் பின்பற்றி இருப்பதை இப்பாடல் காட்சியைப் பார்ப்பவர்கள் உணர முடியும்.
“விந்தையான வேந்தனே.
வீராவேசம் ஆகுமா?
பேயைப் போலே பாயணுமா?
விந்தையான வேந்தனே.
சந்தோஷமா கோபமா! சந்தோஷமா கோபமா.
நான் சொந்தம் கொண்டாடி ஆடிப் பாடி
கொஞ்சவே நெஞ்சமே அஞ்சுதே…”
ஜி. ராமநாதனின் விரைவான இசையமைப்புக்கு ஏற்றபடி பொருத்தமான பாடல் வரிகளை எழுதியிருப்பவர் கவிஞர் கு.மா. பாலசுப்ரமணியம்
“காதலி நீ தானடி
பேதமே ஆகாதடி
ரம்பைப் போல நீயே
ஆடுகின்ற மானே
மேலும் மேலும் நீ ஆடடி…”
என்று பாடல் நீளுகிறபோது, சட்டென்று இசைப் போக்கு மாறி இப்படி விரைவு பெறும்,
“நான் வேணுமா?
தேன் வேணுமா? நான் வேணுமா
தீரா காதல் மாறுமா!
தேவகானமே பாடி ஆசைத் தீரவே ஆடி
பேரின்பம்தான் காண்போம் வா! மன்னவா”
இந்தப் பாடலில் டி.எம்.எஸ்-ஸின் குரல் அவ்வளவு வசீகரத்துடனும், கம்பீரத்துடனும் ஒலித்திருக்கும்.
மற்ற பாடகிகளும் தனது பங்கிற்கு ஒரு கலக்குக் கலக்கியிருப்பார்கள்.
“மன்மதா நீ ஓடி வா!
அன்புடன் சீராடி வா!
மின்னல் போல உந்தன் நெஞ்சில் அள்ளி
இன்பவல்லி நான் ஆடவா…”
கர்நாடக இசையும், மேனாட்டு இசையும் ஒன்று கலந்த கலவையில் உருவான இந்தப் பாடல் காட்சியில் பெரும் நடனப் பட்டாளமே தோன்றி, விரைவான நடன அசைவுகளுடன் ஆடியிருப்பார்கள்.
இந்தப் பாடல் காட்சியில் உடம்பை விறைப்பாக வைத்தபடி விரைவாக சிவாஜி நடக்கும் காட்சியை இப்போது பார்த்தாலும் நவீனமாக இருக்கும்.
“ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு.
உன் மேல் ஆசை உண்டு.
ரெண்டும் மூணும் அஞ்சு.
என்னை நீயும் கொஞ்சு.
மன்னா தேன் உண்ணும் சின்னக்
கன்னி எந்தன் கன்னம்.
மயக்கும் மதுக் கிண்ணமே!
கண்ணா என்னைக் கண்டாலே
உந்தன் உள்ளம் துள்ளும்.
தன்னாலே போதை கொள்ளுமே….”
பாடல் நிறைவடையும்போது,
“அன்பே
என் அன்பே
என் அன்பே வா
என் அன்பே நீ வா
பண்பாடும் என் அன்பே நீ வா”
என்று பாடியபடி சிவாஜி ஸ்டைலாக கை தட்டும்போது, சுற்றி இருக்கும் நடனக் குழுவினரும், நம்பியாரும் ஓ.ஏ.கே. தேவரும் சேர்ந்து சிரித்தப்படி கைதட்ட, பெரும் கைதட்டலுடன் அந்தக் காட்சி முடிவடைந்திருக்கும்.
இப்படம் வெளியானபோதும் அப்போதைய ரசிகர்கள் லயித்துக் கைதட்டி இருப்பார்கள்!
*
– மணா