ஹெ.வினோத் இயக்கத்தில் தவெக தலைவரும் நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் இன்று வெளியாவதாக இருந்தது. ரசிகர்கள் பெரும் ஆவலோடு இருந்தனர்.
ஆனால், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியம் மறுத்தது. அதோடு அந்தப் படத்தை மறுஆய்வுக் குழு பரிசீலனைக்கு அனுப்பி வைத்துள்ளது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்த திரைப்படத்தைத் தயாரித்துள்ள கே.வி.என். புரொடக்சன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். அப்போது, “பாதுகாப்புப் படை தொடர்பான சின்னங்கள் இடம் பெற்றுள்ளதால், அதுகுறித்து ஆய்வு செய்ய பாதுகாப்புத் துறை நிபுணர்களை நியமிக்க வேண்டியதுள்ளது.
தணிக்கை சான்று வழங்கும் வரை இதுபோல வழக்கு தொடர முடியாது” என்று தணிக்கை வாரியம் தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கு படத்தயாரிப்பு நிறுவனம் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
இதனிடையே இந்த வழக்கின் தீர்ப்பை இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி பிறப்பிக்க உள்ளதாக நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில், ‘ஜன நாயகன்’ படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்று வழங்க உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
இதனிடையே தணிக்கை வாரியம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஜன நாயகன் படம் திரைக்கு வருமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
இதற்கிடையே ஜனநாயகன் படம் திரைக்கு வரவேண்டும் என திரைத்துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் வலுவாகக் குரல் கொடுத்தனர்.
இதுவரை மவுனம் காத்து வந்த விஜய் தரப்பினர், இப்போதாவது மவுனம் கலைப்பார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.