என்னைச் சுற்றியிருந்த கேள்விகளுக்கு பதிலாக அமைந்த ‘மகாராஜா’!

- நடிகர் விஜய் சேதுபதி

‘மகாராஜா’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் ‘தி ரூட்’ கைக்கோத்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மகாராஜா’. நடிகர் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமாக வெளியாகி இருக்கும் இந்தப் படத்தை ‘குரங்கு பொம்மை’ புகழ் நித்திலன் சாமிநாதன் எழுதி இயக்கியுள்ளார்.

இப்படம் கடந்த ஜூன் 14, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதற்காக, நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில்  நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய நடிகர் மணிகண்டன்: “இந்தப் படத்தில் என்னுடைய ரோல் பற்றி மட்டுமே எனக்குத் தெரியும். ஆனால், இப்போது படம் பார்த்தப் பிறகுதான் கதையே எனக்குத் தெரிகிறது. எனக்கு நிறையப் பாராட்டுகள் வந்து கொண்டு இருக்கிறது. ‘மகாராஜா’ படத்தில் நானும் இருப்பது மகிழ்ச்சி” என்றார்.

இயக்குநர் நித்திலன்: “என்னையும் படத்தையும் பாராட்டி கடந்த சில நாட்களாக ஆயிரம் கால் வந்திருக்கும். அத்தனை பேருக்கும் நன்றி. படத்தில் சிலருக்கு சில மாற்றுக் கருத்து இருக்கிறது. அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

சேது அண்ணன், சிங்கம்புலி அண்ணன், மணிகண்டன், சாக்‌ஷனா என நடிகர்களுக்கும் தொழில்நுட்பக் குழுவினருக்கும் நன்றி. சேது அண்ணா சிறப்பான நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.

சிங்கம்புலி அண்ணாவை இந்தக் கதாபாத்திரத்திற்கு எப்படி தேர்ந்தெடுத்தேன் எனப் பலரும் கேட்கிறார்கள். ஒரு பிரஸ்மீட்டில் தான் இயக்கியுள்ள படம் பற்றித் தொகுப்பாளருக்கு கோவமாக எடுத்துச் சொன்னார் சிங்கம்புலி. அதில் அவரின் ஆட்டிடியூட் வைத்துதான் இந்தக் கதைக்கு அவர் வில்லன் எனத் தேர்ந்தெடுத்தேன்.” என்றார்.

நடிகர் விஜய்சேதுபதி: “இந்தக் கதை கேட்கும்போது பெரிய நம்பிக்கை இருந்தது. ஆனால், எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வி இருந்தது. தயாரிப்பாளருக்கு போட்ட பணத்தை எடுத்துக் கொடுத்துவிட வேண்டும் என்று நினைத்தோம். இதற்கு முன்பு என்னுடைய சில படங்கள் சரியாக போகாததால், இந்தப் படத்திற்கு பேனர் கட்டும்போது கூட சிலர், “விஜய்சேதுபதிக்கு இனிமேல் பேனர் ஏத்தினால் கூட்டமா வரப்போகிறது” என்று சொல்லி இருக்கிறார்கள்.

இதைப் போன்ற பல கேள்விகள் என்னைச் சுற்றி இருந்தது. அந்தக் கேள்விகளுக்காக நான் இந்தப் படம் செய்யவில்லை. ஆனால், ‘மகாராஜா’ அதற்கான பதிலாக அமைந்துவிட்டது” என்றார்.

Comments (0)
Add Comment