நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், கடைசியாக எச். வினோத் இயக்கத்தில் தனது 69-வது படத்தில் நடிப்பதாக அறிவித்தார்.
கேவிஎன் புரொடெக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, டிஜே மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இது விஜய்க்கு கடைசிப் படம் என்பதாலும் அரசியல் கதைக்களத்தில் உருவாகி வருவதாக கூறப்படுவதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குடியரசு தினமான நேற்று (ஜனவரி-27) காலை வெளியாகி படத்திற்கு ‘ஜனநாயகன்’ என பெயர் வைக்கப்பட்டதாகப் படக்குழு அறிவித்தது.
தொடர்ந்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தரும் வகையில் ‘ஜனநாயகன்’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடபோவதாக படக்குழு அறிவித்தது.
அந்த வகையில் தற்போது எம்.ஜி.ஆர்., ஸ்டைலில் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில், விஜய் சாட்டையைச் சுழற்றியவது போன்ற படம் இடம்பெற்றுள்ளது.
அதோடு, “நான் ஆணையிட்டால்…” என்ற எம்.ஜி.ஆரின் பாடல் வரியும் இடம்பெற்றுள்ளது. எனவே இந்தப் படத்தின் போஸ்டர் இன்னும் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.
இதனிடையே, விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர், படத் தலைப்பை வைத்து ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
அதில், செய்தித்தாளின் முதல் பக்கத்தைப் போல இருக்கும் இந்தப் போஸ்டர் விஜய் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.