நிறைவுபெற்ற அஜித்தின் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு!

தமிழ்த் திரைப்பட தயாரிப்பில் முன்னணியில் உள்ள ‘லைகா’ நிறுவனம் உச்ச நட்சத்திரங்களை வைத்து மட்டுமே சினிமா எடுக்கும் நிறுவனம் ஆகும்.

கமல்ஹாசனை வைத்து இந்த நிறுவனம் உருவாக்கிய ‘இந்தியன்-2′ ரிலீஸ் ஆகி விட்டது. ரஜினி நடிக்கும் ‘வேட்டையன்’, அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி ‘ஆகிய இரு படங்களும் ‘லைகா‘ நிறுவனத்தின் தயாரிப்புகள் தான்.

இதில் ‘விடாமுயற்சி’ படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். அஜித்துடன் அர்ஜுன், ஆரவ், திரிஷா, பிரியா பவானி ஷங்கர், ரெஜினா கசாண்ட்ரா மற்றும் பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

அனிருத் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அஜர்பைஜானில் தொடங்கியது. அதிரடி சண்டைக் காட்சிகள், சஸ்பென்ஸ் த்ரில்லராக, படம் உருவாகி வருகிறது. விடாமுயற்சி படத்தின் பெரும்பாலான காட்சிகள் அஜர்பைஜானில் படமாக்கப்பட்டது. படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து முடிந்தது.

பொருளாதாரப் பிரச்சினைகளால் படம் பாதியில் நின்றதால், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ என்ற படத்தில் அஜித் இணைந்தார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத் நகரில் நடைபெற்றது.

இந்த நிலையில் கடந்த மாதம் அஜர்பைஜானில் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. கிளைமாக்ஸ் உட்பட முக்கியக் காட்சிகள் படமாகப்பட்டன.

சுமார் 30 நாட்களுக்கு மேலாக அங்கு படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் அஜர்பைஜான் ‘ஷெட்யூல்’ முழுமை அடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில் அஜித் உள்ளிட்ட படக்குழுவினர் இடம் பெற்றுள்ளனர்.

இனிமேல் ‘டப்பிங்’, ‘பின்னணி இசைக் கோர்ப்பு’ போன்ற பணிகள் நடைபெற வேண்டும். இதன் பின்னர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment