வெஞ்சன்ஸ் – அரசியல் புரிந்தவர்களுக்கான படம்!

அபர்ணதி, இளவரசு, ஜான் விஜய், காளி வெங்கட், லிவிங்ஸ்டன், நடிப்பில் ராகுல் அசோக் எழுதி, இயக்கி இருக்கும் படம் ‘வெஞ்சன்ஸ்’.

ஏழை வீட்டில் பிறந்த சிறுமி வேணிக்கு, படித்து பெரிய ஆளாக வர வேண்டும் என்று ஆசை.

ஆனால், அப்பாவால் (காளி வெங்கட்) அது மிகவும் சிரமமாக இருக்க, போராடி பல அவமானங்களை சந்தித்து கலெக்டர் ஆகிறாள் வேணி (அபர்ணதி)

அந்த போராட்ட வாழ்க்கை தந்த அனுபவங்கள் அவளை ஒரு அப் நார்மல் நபராக ஆக்குகிறது. அது அவளது பணியிலும் எதிரொலிக்கிறது.

அனாதை இல்லம் ஒன்றில் அடிக்கடி நேரம் செலவிடுகிறாள். அங்கு இருக்கும் ஒரு சிறுமி மீது அதீத பாசம் செலுத்துகிறாள். அதற்கு காரணம் இருக்கிறது.

சில சமயங்களில் நியாயத்தின் பக்கம் நிற்கிறாள். சில சமயம் தவறான நபர்களுக்கு உதவுவது போலவும் இருக்கிறது.

உதவியாளராகவும் நெருங்கிய தோழியாகவும் உள்ள செல்வி (சைதன்யா) மீதே சந்தேகப்படுகிறாள்.

ஒரு பக்கம் மதுக் கடைகளுக்கு எதிராகப் போராடுகிறாள். இன்னொரு பக்கம் பள்ளியில் உடன் படித்த நண்பனுக்கு பார் லைசன்ஸ் கிடைக்க உதவுகிறாள்.

அந்த பாரை மூட, மதக் கலவரம் நடக்கவும் காரணம் ஆகிறாள்.

ஏன் இப்படி எல்லாம் செய்கிறாள் என்பதோடு, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ஆகியவை கலெக்டரை எப்படி பயன்படுத்திக் கொள்கின்றன,

அந்தக் கட்சிகளை மத்திய அரசு எப்படி டீல் செய்கிறது, அதில் கலெக்டரின் வேணியின் பங்கு என்ன? இப்படிப்பட்ட அரசியல் விளையாட்டுக்கு பின்னால் நடந்தது என்ன என்பதே ‘வெஞ்சன்ஸ்’.

உங்களுக்கு எந்த அளவுக்கு அரசியல் தெரிகிறதோ அந்த அளவுக்கு இந்தப் படம் பல விஷயங்களை நினைவுபடுத்தும்.

ஆனால், எவ்வளவுக்கு அதிகமாக அரசியல் தெரிகிறதோ, அந்த அளவுக்கு இது யாருடைய கதை என்பது புரியாமல், இவரது கதையோ அல்லது அவரது கதையோ என்று சிந்தனை ஓடும். அப்படி ஒரு கதை திரைக்கதை.

சோனியா காந்தி, மன்மோகன் சிங், நிர்மலா சீதாராமன், ஜெயலலிதா, ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரகலா, எலெக்ஷன் ஸ்ட்ராடஜிஸ்ட் பிரஷாந்த் கிஷோர், சவுக்கு சங்கர், கலைஞர், துரைமுருகன், எடப்பாடி பழனிசாமி இப்படி ஒவ்வொருவரும் ஞாபகம் வந்து கொண்டே இருப்பார்கள்.

சட்டமன்றத்தில் புடவை உருவப்பட்டதாக சொல்லப்பட்ட விஷயங்களை எல்லாம் படத்தில் கலெக்டருக்கு வைத்துள்ளார்கள்.

யாருடைய கதை என்று தெளிவாகத் தெரிந்தால் சென்சார் விடாதே. அதுக்குத்தான் இப்படி.

இது மட்டுமல்ல.

இந்தியாவுக்கு இனிக்கியா, தமிழ்நாட்டுக்கு தாய்நாடு, புதுடெல்லிக்கு பாகவல்லி, மேட்டூர் மாவட்டம் இப்படி வேறு வேறு பேர் வேறு வைத்துள்ளார்கள்.

ஆனால், கலெக்டர் அலுவலக அறையின் பின்னணியில் தமிழ்நாடு அரசு என்று கொட்டை எழுத்தில் தெளிவாக இருக்கிறது.

அப்னார்மல் கலெக்டராக அபர்ணதி கவனிக்க வைக்கிறார். கலெக்டராக பாய்ந்து பாய்ந்து சண்டை போடுகிறார். சில சமயம் சண்டையில் தோற்கவும் செய்கிறார்.

எம்.எல்.ஏ, அமைச்சர், முதல்வர் இவர்களோடு கலெக்டருக்கு வரும் முரண்பாடுகள், அவமானங்கள், அப்படி பாதிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி சரியான சமயத்தில் மத்திய அரசு அதிகாரியாக வந்து மாநில அரசியலுக்கு குடைச்சல் கொடுப்பது,

அது பேக் ஃபயர் ஆகும்போது நடக்கும் சம்பவங்கள் என்று சில ஆழமான விசயங்கள் படத்தில் இருக்கிறது.

இவ்வளவு கதைகளையும் ஒரே படத்துக்குள் திணித்து விழி பிதுங்க வைப்பதற்குப் பதில், ஒரு சில விஷயங்களை மட்டும் எடுத்து ஒழுங்காக திரைக்கதை அமைத்து இருந்தால் ‘வெஞ்சன்ஸ்’ ஒரு நல்ல அரசியல் படமாக இருந்திருக்கும்.

காரணம் கலெக்டரை சுற்றிச் சுழலும் அரசியல் என்ற கரு நன்றாக இருக்கிறது.

அப்படி செய்யாமல் நுனிப்புல் மேய்ந்த காரணத்தால், ‘வெஞ்சன்ஸ்’ ரசிக்க ஒன்றும் இல்லாமல் பஞ்சர் ஆகி விட்டது.

– செந்தில் குமரன்.

Comments (0)
Add Comment