“வண்ணத் தமிழ்ப் பெண்ணொருத்தி என்னெதிரே வந்தாள்”!

திரைத் தெறிப்புகள் – 91 :

*

திரை இசையில் என்னென்ன அற்புதங்களையெல்லாம் நிகழ்த்தியிருக்கிறார் ‘திரையிசைத் திலகம்’ என்று போற்றப்பட்டவரான கே.வி. மகாதேவன்.

தென்னிந்திய திரைப்படங்களில் “கிளாசிக்”கலான பாடல்களை அதிகம் தந்தவர்களில் இவரும் ஒருவர்.

1960-ம் ஆண்டில் வெளிவந்த ‘பாவை விளக்கு’ திரைப்படத்தில் அவர் இசையமைத்த அருமையான பாடல் இது.

மெல்லிய வீணை இசைக்குப் பிறகு, “பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள், தமிழ்ப் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்” என்று சிவாஜி கம்பீரமாக இந்த வரிகளை உச்சரித்த பிறகு, இசைச் சித்தர் சி.எஸ். ஜெயராமனின் குரல்.

“பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்.
தமிழ்ப் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்.

வண்ணத் தமிழ்ப் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்.
கண்ணசைவில் கோடிக் கோடி கற்பனைகள் தந்தாள்.”

என்கின்ற வரிகளைப் பாடி முடிக்கும்போது, ஜெயராமனின் குரலோடு சிவாஜியின் குரலும் இணைந்து, ஒருசேர ஒலிக்க வைத்திருப்பது அந்தக் காலத்திய இசைப் புதுமை.

அழகான இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் மருதகாசி.

இந்தப் பாடலுக்கு இடையிடையே “ஹம்மிங்” கொடுத்திருப்பவர் எல்.ஆர்.ஈஸ்வரி.

அழகையெல்லாம் அவள் முகத்தில் கண்டேன்..
வெண்ணிலவின் அழகையெல்லாம் அவளிடத்தில் கண்டேன்.
விழி வீச்சின் மின்னலினால்  நிலை மாறி நின்றேன்.

என்று சிவாஜி பாடலுக்கு வாயசைக்கும்போது, அவரைச் சுற்றி அவ்வளவு நளினமாக ஆடியிருப்பவர் குமாரி கமலா.

சிவாஜியின் முதல் படமான ‘பராசக்தி’யில் “ஓ ரசிக்கும் சீமானே” என்ற பாடலுக்கு பல்வேறு அபிநயங்களுடன் ஆடி இருப்பாரே அதே கமலா தான்.

“அன்னம் கூட அவளிடத்தில் வந்து நடை பயிலும்.
ஆடல் கலை இலக்கணத்தை அறிய வரும் மயிலும்.
இன்னிசையைப் பாடம் கேட்க எண்ணி வரும் குயிலும்.
இயற்கையெல்லாம் அவள் குரலின் இனிமையிலே துயிலும்.”

என்று நகரும் இந்தப் பாடலில், பாடலாசிரியர் மருதகாசியின் மொழி வளம் புலப்படும்.

“கன்னல் மொழி பேசி வரும் கன்னியரின் திலகம்
கமலம் என் கமலம் செங்கமலம்.”

என்று முழுமை பெறும் இந்தப் பாடல்.

சென்னையில் சி.எஸ். ஜெயராமனுக்கு நடந்த நூற்றாண்டு விழாவில் இந்தப் பாடல் இசையுடன் ஒலித்த போது, அரங்கம் அதிரக் கேட்ட கைத்தட்டல்தான் இந்தப் பாடலுக்குக் காலம் கடந்தும் கிடைத்துக் கொண்டிருக்கும் அங்கீகாரம்.

– மணா.

 

#வண்ணத்_தமிழ்_பெண்ணொருத்தி #Vannathamizh_Pennoruthi_song_lyrics #பாவை_விளக்கு #Paavai_Vilakku  #கேவி_மகாதேவன் #KV_Mahadevan #சிஎஸ்_ஜெயராமன் #CS_Jayaraman   #கவிஞர்_மருதகாசி #Kavignar_marudakasi  #எல்ஆர்_ஈஸ்வரி #LR_Eswari #சிவாஜி_கணேசன் #Sivaji_Ganesan #குமாரி_கமலா #Kumari_kamala

Comments (0)
Add Comment