தமிழ் சினிமா மறக்க முடியாத டிரெண்ட் செட்டர் படங்களில் ஒன்றான ‘ஒரு தலை ராகம்’ மூலம், 1980 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பிரம்மிப்பான படைப்பாளி டி.ராஜேந்தர். ஆனால், அந்தப் படத்தில் அவருக்கான அங்கீகாரம் மறுக்கப்பட்டது.
அடுத்து அவர் எழுதி, இயக்கி, இசையமைத்து, ஒரு கதாபாத்திரத்தில் நடித்த ‘வசந்த அழைப்புகள்’ படம்தான் அஃபிஷியலாக அவரது முதல் படம். ஆனால், அந்தப் படம் பெரிதாகப் போகவில்லை.
அடுத்த படத்தில் வெற்றியை ருசித்தார் டி.ராஜேந்தர். அவரது இசை, எழுத்து, இயக்கத்தில் வந்த ‘ரயில் பயணங்களில்’ படம் 175 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
இன்றும் மறக்க முடியாத பாடல் வரிகள், இசை ஆகியவற்றால் உச்சம் தொட்ட படம் இது. “நூலும் இல்லை, வானும் இல்லை…” பாட்டு எல்லாம் ஒரு தனி இலக்கியம்.
இந்தப் படத்தில் அவர் நடிக்கவில்லை. ‘வசந்தம் பாடி வர…’ பாடலின்போது ஒரு ரயில் பயணியாக உள்ளே உட்கார்ந்து இருப்பார். அவ்வளவுதான்.
மீண்டும் ‘நெஞ்சில் ஒரு ராகம்’ படத்தில் சரிவு.
அடுத்து வந்த ‘ராகம் தேடும் பல்லவி’யில் மீண்டும் பாடல்கள் ஹிட். ஆனாலும், படம் பெரிய வெற்றியும் இல்லை தோல்வியும் இல்லை.
இதெல்லாம் மூன்றே வருடத்துக்குள்.
அடுத்து வந்த படம் தான் அவர் அடித்த முதல் இமாலய சிக்ஸர்.
ராஜேந்தர் எழுதி, இசையமைத்து, தயாரித்து, இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘உயிருள்ளவரை உஷா’ படம் தமிழ் சினிமாவையே அதிர வைத்தது.
காதல் கதை, எதுகை மோனை வசனங்கள், தேன் இசை, தனி இலக்கியமாக விரிந்த ராட்சஷத் தமிழ் பாடல்கள், கமர்ஷியல் கவர்ச்சியும் கலந்த திரைக்கதை, படமாக்கல், இயக்கம், சொந்தத் தயாரிப்பு என்று – பெயர், புகழ், அந்தஸ்து, பணம் என்று எல்லா வகையிலும் ராஜேந்தரை உச்சத்துக்குக் கொண்டுபோன முதல் படம் ‘உயிருள்ளவரை உஷா’.
அடுத்து ‘தங்கைக்கோர் கீதம்’ (இந்தப் படத்திலிருந்து ஒளிப்பதிவும் இவரே), உறவைக் காத்த கிளி, மைதிலி என்னை காதலி, ஒரு தாயின் சபதம், என் தங்கை கல்யாணி என்று வியப்பூட்டும் விஸ்வரூபம் எடுத்தார் டி. ராஜேந்தர்.
அதுவரை தியாகராஜ பாகவதர் – பி.யு.சின்னப்பா, எம்.ஜி.ஆர் – சிவாஜி, கமல் – ரஜினி என்று நாயகர்களே எதிரெதிர் துருவங்களாக புகழ்பெற்ற நிலையில், அந்த இடத்துக்கு இரண்டு இயக்குநர்கள் வந்தார்கள். சகலகலா வல்லவன் டி. ராஜேந்தரும் திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜும்.
ராஜேந்தருக்கு அப்படி ஓர் அடித்தளம் போட்ட ‘உயிருள்ளவரை உஷா’ திரைப்படம் 1983 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நான்காம் தேதி திரைக்கு வந்த நிலையில்,
இப்போது, நா…ற்…ப…த்…து… மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரைக்கு வருகிறது.
இதையொட்டி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது.
டி.ராஜேந்தர், படத்தின் நாயகி நளினி, வில்லன் ராதாரவி, இவர்களோடு இயக்குநர் விக்ரமன், ஆர்.கே. செல்வமணி மற்றும் கலைப்புலி எஸ்.தாணு இவர்கள் மட்டுமே கலந்து கொண்ட அந்த விழா, சுமார் மூன்று மணி நேரம் நடந்தும், துளிகூட போரடிக்காமல் இருந்தது.
நிகழ்ச்சியில் பேசிய கலைப்புலி எஸ்.தாணு, “ராஜேந்தரின் திரை உலகச் சாதனைகள் மிகவும் பிரம்மாண்டமானவை.
அதுவும் திரைப்படத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றிக் கொண்டு படத்தைத் தரமாகவும் இலக்கியமாகவும் வியாபார ரீதியாகவும் அவர் எடுத்தார். அதுதான் சிறப்பு. அதைப் பற்றி எல்லாம் நான் சொல்லித்தான் தெரியவேண்டும் என்று இல்லை.
‘கூலிக்காரன்’ படம் எடுத்தபோது, “படத்துக்கு ராஜேந்தர் இசை அமைச்சு பாடல் எழுதணும். எப்படியாவது அவரை ஒப்பந்தம் செய்ங்க” என்று என்னிடம் கேப்டன் விஜயகாந்த் சொன்னார்.
ராஜேந்தரும் சிறப்பாக செய்து கொடுத்தார். அதில் ‘வச்ச குறி தப்பாது; இந்தப் புலி தோற்காது’ என்று பாடல் வரிகள் மூலம் என்னை வாழ்த்தி எழுதினார்.
வாழ்த்துப் பலித்தது, எனது தயாரிப்பு நிறுவனமான கலைப்புலி இன்டர்நேஷனல் இன்றும் வெற்றிகரமாக இயங்குகிறது.
இன்று அவரது மகன் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தை அதே கலைப்புலி இன்டர்நேஷனல் தயாரிக்கிறது என்பது எனக்கு பெருமை” என்றார்.
இயக்குநர் விக்ரமன் பேசும்போது, “நான் சினிமாவுக்கு வந்த புதுசு. ராஜேந்தரின் ‘உயிருள்ளவரை உஷா’ படத்தைப் பார்த்து வியந்தேன்.
எங்கள் ஓர் டிஸ்ட்ரிபியூட்டர் ஒருவரிடம் ‘படத்தை வாங்குங்க’ என்றேன். அவர் ‘அதெல்லாம் ஓடாது’ என்று வாங்கவில்லை. இன்னொருவர் வாங்கினார். போட்ட காசைவிட பத்து மடங்கு லாபம் எடுத்தார்.
அவரது படங்களின் பாடல் வரிகள் மிக சிறப்பானவை.
“காதலில் வாழ்ந்த கன்னி மனம், காவலில் வாடையில் கன்னி விடும்” என்று கன்னி என்ற வார்த்தையை இருவேறு பொருளில் அவர் பயன்படுத்தியது எல்லாம் அபாரம்.
என்னைப் பொறுத்தவரை அவர் செய்த எல்லாவற்றிலும் அவரது பாடல் வரிகளே உயர்வானது. அவரது பாடல் வரிகளின் மாபெரும் ரசிகன் நான்.
ஒரு முறை எனது படங்களுக்கு அவர் ரசிகர் என்று அவர் சொன்னதைக் கேட்டபோது மிகவும் மகிழ்ந்தேன்.
ரிலீஸ் ஆகும் ‘உயிருள்ளவரை உஷா’ படத்தை பெரிய திரையில் பார்க்க நானும் ஆவலாக உள்ளேன்” என்றார்.
ஆர்.கே.செல்வமணி தன் பேச்சில், “ஒரு சூழலில், மணிவண்ணன் சார் இயக்கத்தில் நான் உதவியாளராகப் பணியாற்றிய ஒரு படத்திலும் ராஜேந்தர் இயக்கும் படம் ஒன்றிலும் ஒரே நேரத்தில் நடித்துக் கொண்டிருந்தார் ஸ்ரீவித்யா.
ராஜேந்தர் படத்துக்கான ஒரு நாள் கால்ஷீட்டில் எங்களுக்கு இரண்டு மணி நேரம் தேவைப்பட்டது. ஸ்ரீவித்யாவிடம் கேட்டோம். “அய்யயோ என்னால கேட்க முடியாது சார். அவர் கோபப்படுவார்” என்றார் ஸ்ரீவித்யா.
மணிவண்ணன் என்னிடம், “நீ போய் ராஜேந்தரைப் பார்த்து விஷயத்தை சொல்லி கேளு” என்றார். நானும் ராஜேந்தரின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போனேன்.
அந்த நேரம் பார்த்து, ஷாட் ரெடி என்று ஒரு நடிகரை உதவி இயக்குநர் அழைக்க, அவர் அலட்சியமாக ஏதோ சொல்ல, ஒரு எரிமலை வெடித்தது. ராஜேந்தர் போட்ட சத்தத்தில் அந்த நடிகர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த யூனிட்டுமே நடுங்கி நின்றது.
இதைப் பார்த்த நான் தயங்கி மெதுவாக அவரிடம் போய் தகவல் சொன்னேன். உடனே எனக்கு ஒரு சேர் போடச் சொன்னார்.
மணிவண்ணன் சார் விரும்பியபடி ஸ்ரீவித்யாவை எங்கள் படப்பிடிப்புக்கு அனுப்பினார். சக இயக்குநர் மேல் அவருக்கு அவ்வளவு மரியாதை.
என் மனைவி ரோஜாவின் திரையுலகச் சாதனைகளைப் பாராட்டி ஒரு விழா எடுத்தோம். பல ஹீரோக்களை அழைத்தோம். ஒருவரும் வரவில்லை. ராஜேந்தரின் ஒரே படத்தில் தான் ரோஜா நடித்து இருந்தார். அவர் வந்து அரைமணி நேரம் ரோஜாவைப் பாராட்டி வாழ்த்தினார். நாங்கள் நெகிழ்ந்து விட்டோம்.
இப்போது இந்த விழாவுக்கு வருவது பற்றி நான் ரோஜாவிடம் சொன்னபோது, ”கட்டாயம் போய்ட்டு வாங்க”ன்னு ரோஜா சொன்னார்” என்றார் செல்வமணி.
ராதாரவி இதற்குமுன் இப்படிப் பேசியதே இல்லை.
“சில படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்திருந்த என்னை வில்லனாக அறிமுகம் செய்தவர் ராஜேந்தர்தான். இந்த ‘உயிருள்ளவரை உஷா’ படத்தில் தான்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் சிங்கம் மாதிரிதான். இப்ப இந்த விழாவுக்கு வந்திருக்கும்போது கூட எனக்கு பயமா இருக்குன்னா நீங்க அதைப் புரிஞ்சுக்கலாம். நான் மட்டுமல்ல, எல்லாருமே அப்படித்தான்.
‘உயிருள்ளவரை உஷா’ படத்தின் ஒரு காட்சியில் நகைச்சுவை நடிகர் உசிலைமணி கதவைத் தட்ட வேண்டும். உள்ளே இருந்து கதவைத் திறந்து கொண்டு ராஜேந்தர் வர வேண்டும்.
உசிலைமணி கதவைத் தட்ட, ராஜேந்தர் திறந்த வேகத்தில் பயந்துபோன உசிலைமணி திரும்பி ஓட ஆரம்பித்து விட்டார்.
இவர் திட்டுகிற திட்டில் ஹீரோயின் நளினி பலமுறை அழுதுகொண்டு போய்விடும். நடிக்க வரமாட்டேன் என்று சொல்லும்.
நான்தான் நளினியிடம் ‘சினிமான்னா ஆரம்பத்துல அப்படித்தான்மா இருக்கும். ஜெயிச்சுட்டா எங்கயோ போவோம்’ன்னு சொல்லி சமாதானப்படுத்துவேன்.
இன்னொரு பக்கம் ராஜேந்தருடைய கிரியேட்டிவிட்டியும் அபாரமானது.
ஒரு காட்சியில் வீட்டுக்குள் ஒரு ஷாட் எடுத்துக் கொண்டிருக்கும்போது யாரோ ஒருவர் குறுக்கே வந்து விட்டார். எல்லோரும் கோபத்தில் கத்திய பிறகு, இன்னொரு டேக் போகலாமா என்று யூனிட்டில் ஒருவர் கேட்க,
ராஜேந்தர் சொன்னார், “வேணாம். அவன் இந்த வீட்டு வேலைக்காரன். வேலைக்காரன்னா குறுக்க மறுக்க போகத்தான் செய்வான்” என்று சொன்னதும். எல்லாரும் அசந்துட்டாங்க” என்றார்.
நளினி பேசும்போது, “என் குரு, குலசாமி எல்லாமே எங்க டைரக்டர்தான். அவரு மட்டும் இல்லன்னா எனக்கு இந்த வாழ்க்கையே இல்ல.
ராதாரவி அண்ணன் சொன்னது உண்மைதான். அப்போ விஷயம் புரியாம டைரக்டர் திட்டும்போது எல்லாம் கோவிச்சுக்குவேன். ஆனா ‘உயிருள்ளவரை உஷா’ படம் ஓடி என் வாழ்க்கையே மாறின அப்புறம்தான் எனக்கு அவரோட அருமை தெரிஞ்சது.
‘உயிருள்ளவரை உஷா’ வெற்றிக்குப் பிறகு, அடுத்த படமான ‘தங்கைக்கோர் கீதம்’ படத்துலயும் என்னை ஹீரோயினா போட்டார். அவரோட வேற எந்த ஹீரோயினுக்கும் கிடைக்காத வாய்ப்பு அது.
அதுமட்டுமில்ல ஒரு நிலையில் எனக்கு பட வாய்ப்புகள் குறைஞ்சு போனப்போ. மீண்டும் ‘காதல் அழிவதில்லை’ படத்தில் என்னை நடிக்க வைத்து ரீ-என்ட்ரி கொடுத்தார். அதனால்தான் இப்போ வரைக்கும் நடிச்சுட்டு இருக்கேன்.
என் தகப்பன் சாமி அவர்தான். நான் கும்புடுற எல்லா தெய்வங்களையும் மொத்தமா அவர் உருவத்தில் பாக்கறேன்” என்று கண்ணீர் விட்டார்.
இதற்கெல்லாம் பதில் சொன்ன டி. ராஜேந்தர், “விஜயகாந்தை எனக்கு ரொம்ப பிடிக்கும். மிக நல்ல மனிதர். அவரே என் இசை, பாடல் வேணும்னு கேட்டபோது சந்தோஷமா இசை அமைச்சுக் கொடுத்தேன்.
விக்ரமன் என் பாடல் வரிகளைச் சொல்லி பாராட்டினார். அவர் எனக்கு ரசிகர். நான் அவருக்கு ரசிகன். அந்த வரிகள் இடம்பெற்ற “வைகைக்கரை காற்றே நில்லு” பாடலை ஜேசுதாஸ் பாடிக் கொடுத்தார். அது எனது பாக்கியம்.
மற்ற மொழிகளை நான் அலட்சியமாக நினைக்கமாட்டேன். தமிழ் என் தாய் என்றால் தெலுங்கும் கன்னடமும் மலையாளமும் என் சித்திகள். ஆனா என் அம்மான்னா அது தமிழ்தான்.
ரோஜா நிகழ்ச்சிக்கு நான் சென்று அவரை மனமாரப் பாராட்டக் காரணம், அவர் என் படத்தின் கதாநாயகி. அவர் என் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்தவர்.
நளினி என் ‘உயிருள்ளவரை உஷா’ படத்தின் கதாநாயகி கேரக்டருக்கு உயிர் கொடுத்தவர்.
எனது உயிர் என் மனைவி உஷா. ‘உயிருள்ளவரை உஷா’ படத்தின் உயிர் நளினி.
அந்தப் படம் எடுக்க ஆரம்பித்தபோது நளினிதான் கதாநாயகி என்று முடிவு செய்து விட்டேன். படப்பிடிப்பும் நடந்தது. ஒரு நிலையில் நளினியை யாருக்கும் பிடிக்கவில்லை. அந்தப் படத்தை நான் பைனான்ஸ் வாங்கித்தான் தயாரித்தேன்.
நளினி நடித்த சில காட்சிகளைப் பார்த்த பைனான்சியர்கள் ‘இந்தப் பொண்ணு முகம் குதிரை மூஞ்சி மாதிரி இருக்கு. இது நடிச்சா சரி வராது ஹீரோயினை மாத்துங்க” என்கிறார்கள்.
நான் மறுத்தேன். நளினி தான் கதாநாயகி என்றேன். அவர்கள் ஏற்கவில்லை. ஒரு நிலையில் ‘அடுத்த வாரம் இன்னும் சில காட்சிகள் காட்டுகிறேன். வந்து பார்த்து விட்டு முடிவு செய்யுங்க’ என்றேன்.
நான் என் கைக்காசு போட்டு நான்காயிரம் அடி ஃ பிலிம் வாங்கினேன்.
நளினியை வரச் சொன்னேன். முடியை சீவி காட்டாமல் விரித்து விடச் சொன்னேன். நளினியை விதவிதமான உடைகளில் படம் பிடித்தேன். பைனான்சியர்களை வரச் சொன்னேன். இப்போது பாருங்கள் என்றேன்.
பார்த்து விட்டு அசந்து போனார்கள். இவரே கதாநாயகியாக தொடரட்டும் என்கிறார்கள். அப்படித்தான் நளினி இந்த ‘உயிருள்ளவரை உஷா’ படத்தின் நாயகியாக நிலைத்தார்.
உண்மையில் இந்தப் படத்தில் நான் நடித்த செயின் ஜெயபால் கேரக்டரில் நடிக்க வேண்டியவர் ரஜினி. அவரிடம் நான் கதை சொன்னேன். அவரும் நடிக்க சம்மதித்தார்.
ஆனால், ‘பெரிய புரடியூசர் தயாரித்தால்தான் நடிப்பேன்’ என்று சொன்னார். என்னால் அப்படி யாரையும் பிடிக்க முடியவில்லை. அப்புறம் வேறு வழியின்றி நானே நடித்தேன்.
ஆக, நான் நடிகராகவும் இந்த அளவுக்கு புகழ்பெற, அன்று ரஜினி நடிக்க மறுத்ததுதான் காரணம்.
ராதாரவி எனது கோபம் பற்றி சொன்னார். இப்போது கோபத்தைக் குறைத்து விட்டேன்.
மீண்டும் திரைக்கு வரும் ‘உயிருள்ளவரை உஷா’ இன்றைய இளைஞர்களையும் கவரும்.” என்றார்.
சாதனைகள் சாகசமானவை.
– சு. செந்தில் குமரன்