80-களில் புது டிரெண்ட்செட்டை உருவாக்கிய படம்!

கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள், இயக்கம் என்று களமிறங்கிய டி. ராஜேந்தரை தயாரிப்பாளராக மாற்றியதோடு ஒரு கமர்ஷியல் ஹீரோவாகவும் மாற்றிய படம் ‘உயிருள்ளவரை உஷா’.

எண்பதுகளின் கல்லூரி மாணவ, மாணவியரின் காதல் கல்வெட்டுத் திரைப்படமாக நிலைத்த படம் இது.

1983, மார்ச் மாதம் 4ம் தேதி வெளியான இந்தப் படத்திற்கு முதலில் வைத்த பெயர் ‘செயின் ஜெயபால்’ (படத்தில் ராஜேந்தரின் பெயர் அது).

ரஜினிக்கு என்று எழுதப்பட்ட இந்தக் கதை ரஜினிக்கு பிடித்து இருந்தும் ‘பெரிய தயாரிப்பாளர் இல்லாத படங்களில் நடிக்க நான் விரும்பவில்லை’ என்று ரஜினி சொன்னதால், ராஜேந்தரே நடித்தார்.

நளினி கதாநாயகியாக அறிமுகமான படம் இது. ராதாரவி வில்லனாக அறிமுகமான படம்.

சரித்திரம் படைத்த “இந்திர லோகத்து சுந்தரி…” பாடலும் கவர்ச்சியைக் கலந்து கட்டி அடித்த “மோகம் வந்து தாகம் வந்து” பாடலும் கற்பகம் ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது.

கன்னடத்தில் ‘பிரேமிகல சவால்’ என்ற பெயரிலும், இந்தியில் ‘ஆகி அவுர் ஷோலா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டதோடு தெலுங்கில் ‘பிரேமா சாகரம்’ என்ற பெயரில் இந்தப் படம் டப் செய்யப்பட்டது.

“இந்திரலோகத்து சுந்தரி” பாடலை FLYING LOTUS என்று அழைக்கப்பட்ட பிரபல அமெரிக்க பிலிம் மேக்கரும் பாடகரும் ரேப் மியூசிக் கலைஞருமான ஸ்டீவன் எல்லிசன், 2008 ஆம் ஆண்டு தனது லாஸ் ஏஞ்சல்ஸ் என்ற ஆல்பத்தின் GNG BNG என்ற பாடலுக்கு பயன்படுத்தினார்.

இதில் என்ன அழகு என்றால், ஸ்டீவன் எல்லிசன் பிறப்பதற்கு ஏழு மாசம் முன்பே ரிலீசான படம் இது.

அப்பேர்ப்பட்ட ‘உயிருள்ளவரை உஷா’ படத்தை சினிமாஸ்கோப்புக்கு மாற்றி, இசையில் சில கூடுதல் இணைப்புகள் தந்து வெளியிட்டு இருக்கிறார் டி. ராஜேந்தர்.

எப்படி இருக்கிறாள், இப்போது வந்துள்ள உயிருள்ளவரை உஷா?

காதலித்த பெண் தன்னையே மணக்க விரும்பியதால் அது பிடிக்காத பெண்ணின் தாய்மாமன் காதலனை வெட்டிக் கொல்ல முயல, அந்த வெட்டை, தான் வாங்கிக் கொண்டு செத்துப் போகிறாள் காதலி.

உயிர்க் காதலியை இழந்த காதலன் செயின் ஜெயபால் (டி.ராஜேந்தர்) ஊருக்கு உழைக்கும் மனிதனாக வாழ்கிறான்.

அவனுக்கு நேர்மாறாக அத்தனை அயோக்கியத்தனங்கள், பெண் பித்து எல்லாம் கொண்ட மைனர் ஒருவன் (ராதாரவி).

சாதி, சாஸ்திரம், நேரம் காலம் பார்த்து கல்யாணம் செய்து வைக்கப்பட்ட அவனது அக்கா (சரிதா) வாழாவெட்டியாக வீட்டில் இருக்கிறாள்.

அவளது தங்கை (நளினி) கல்லூரி மாணவி.

மைனர் வீட்டுக்கு பால் ஊற்றும் பெண்ணின் (காந்திமதி) மகனான சக கல்லூரி மாணவன் ஒருவன் (கங்கா) மைனரின் தங்கையைக் காதலிக்கிறான்.

அந்தஸ்து பார்க்கும் மைனர், தங்கையின் காதலனை கொல்ல முயல, அவனைக் காப்பாற்ற செயின் ஜெயபால் வர, என்ன நடந்தது என்பதே படம்.

அன்றைய ட்ரெண்டிங்கில், எடுத்த உடனே ”கட்டடிப்போம் கட்டடிப்போம் காலேஜுக்கு; காதலிப்போம் காதலிப்போம் மேரேஜுக்கு” என்று பாடலோடு ஆரம்பிக்கிறது படம்.

“அடி என்னாடி பந்தாடும் பாப்பாக்களே…” என்று மாணவிகளை மாணவர்கள் கிண்டல் செய்து பாடுகிறார்கள்.

விதவிஷமான கல்லூரி கலாட்டாக்களை மாணவர்களின் குரங்கு சேட்டைகள் அதீத எக்ஸ்பிரஷன்கள் இவற்றோடு படமாக்கி இருக்கிறார்கள்.

“காலேஜ் படிக்கும்போது ஜாலியா இருக்க முடியும். படிச்சு முடிச்ச உடனே வேலை தேடி அலையணும்” என்று ஆசிரியர் (வெண்ணிற ஆடை மூர்த்தி) சொல்லும் இடத்தில் தனது பெயருக்கான டைட்டில் கார்டு போட்டு பேலன்ஸ் செய்கிறார் டி. ராஜேந்தர்.

ஆரம்பப் படத்திலேயே அவர், தைரியமாக தனக்கு கொடுத்துக் கொள்ளும் பில்டப், அவரது தன்னம்பிக்கையின் உச்சமாக இப்போதும் வியக்க வைக்கிறது.

”ஏன்டா… பொண்ணா பெத்தவன் சம்மந்திக்கு பயப்படலாம்; இப்படி சம்மந்தா சம்மந்தம் இல்லாதவனுக்கு கூடவா பயப்படணும்?”

“நீ உஷா உஷான்னு சொல்ற. எனக்கு அவ அண்ணனை நினைச்சா உஷார் உஷார்னு கேட்குது”

– போன்ற வசனங்கள், ராஜேந்தரின் அடுக்கு மொழி வசனங்களுக்கும் அப்பாற்பட்டு இப்போதும் ஃபிரஷ் ஆக இருக்கிறது.

பாடலில் வரும் ‘ஜீனத் அமன நினைச்சு…’ என்ற வரி, வசனத்தில் வரும் ‘அவன் என்ன அமிதாப் பச்சனா…?’ என்ற கேள்வி, இதெல்லாம் அப்போது கல்லூரி மாணவர்களிடம் இருந்த இந்திப் பட ஆதிக்கத்தை உணர்த்துகிறது.

பாடல்கள் இன்னும் அற்புதமாக இனிக்கிறது. இந்திர லோகத்துக்கு சுந்தரி பாடலும், வைகைக் கரை காற்றே நில்லு பாடலும் இப்போதும் அதே உணர்வைத் தருகிறது.

நளினியும் சரிதாவும் எவ்வளவு அருமையாக நடித்துள்ளார்கள் என்பது இப்போது நன்றாகவே புரிகிறது.

சரிதாவின் கேரக்டர், அந்தக் காட்சிகள் எல்லாம் ஒரு அவலக் கவிதையாக இருக்கிறது. கவுண்டமணியின் காமெடியும் இருக்கிறது. காந்திமதியின் நடிப்பும் படம் வந்த காலத்தை நினைவுபடுத்துகிறது.

இந்திர லோகத்து சுந்தரி பாடலில் அசத்தி இருக்கிறார் நளினி.

35 MM இல் அந்தப் பாடல் சும்மா ஜொலிக்கும். ரவிகாந்த் நிகாய்ச் சின் கந்தர்வக் காட்சிகளோடு அந்தப் பாடல் நிஜமாகவே நம்ம இந்திர லோகத்தில் கொண்டு போய் நிறுத்தும்.

சினிமாஸ்கோப் ஆக மாற்றும்போது அந்த அழகும் ஜொலிப்பும் மங்கி இருப்பது பெரிய வருத்தம்.

அதே பாடல்களின் இசையை நவீனப்படுத்துகிறேன் என்று சேர்க்கப்பட்டு இருக்கும் கூடுதல் இசை, சில பாடல்களின் தரத்தைக் குறைத்து விட்டது.

நாற்பத்து மூன்று வருடங்களாக அப்படியே சிந்தைக்குள் இருக்கும் அந்தப் பாடல்களை ஒலியின் தரத்தை மட்டும், மேம்படுத்தி அப்படியே விட்டு இருக்கலாம்.

அற்புதமான ஒரு பாரம்பரிய மாளிகையை புதுப்பிக்கிறோம் என்றால், அது இருக்கும் நிலையில் அப்படியே தொடர வலுக் கூட்டுவதுதான் சரி.

சிமெண்ட் போட்டு பூசி மூடி, அழகான வேலைப்பாடுகளை மறைத்து அதன் மேல் சுண்ணாம்பு அடிப்பது அல்ல.

எண்பதுகளின் காலகட்டப் படங்கள் பலவற்றில் கதை என்பது இப்படி மெலிதான விஷயமாகவே இருக்கும்.

ஆனால், திரைக்கதையில் வேகம், காமெடி, ரசனையான வசனங்கள், கிளாமர், சென்டிமென்ட் ஆக்ஷன் எல்லாம் சேர்த்து ட்ரெண்டிங் ஆக அசத்தி தியேட்டரிகல் மொமெண்ட்டுகளை நிறைய உருவாக்கி தெறிக்க விடுவார்கள்.

அந்த உத்தியில் பெரு உயரம் தொட்ட படங்களில் ஒன்று ‘உயிருள்ளவரை உஷா’.

இன்றைய படைப்பாளிகளுக்கு மெலிதான கதை மட்டுமே வருகிறது. ஆனால், தியேட்டரிக்கலாக மக்கள் ரசிப்பது போல சொல்லத் தெரியாமல், படம் துவங்கிய பத்து நிமிடத்தில் கொட்டாவி விட வைக்கிறார்கள்.

அவர்கள் ராஜேந்தரிடம் இருந்து ‘உயிருள்ளவரை உஷா’ மூலம் கற்றுக்கொள்ள வேண்டும்.

‘உயிருள்ளவரை உஷா’ 2026… சற்றே தூசி படிந்தாலும் சிற்பம் சிற்பம்தான்.

– சு. செந்தில் குமரன்

Comments (0)
Add Comment