‘சர்தார் 2’ படத்தில் இணைந்த 3 நடிகைகள்!

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் உருவான ‘சர்தார்’ படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானது.  தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்தப் படம் வசூலில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்தது.

இந்தப் படத்தில் லைலா, ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா, யூடியூப் பிரபலம் ரித்விக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.

தேசத் துரோகி என்று முத்திரை குத்தப்பட்ட உளவாளி, உண்மையில் தேசநலனுக்காக எத்தகைய தியாகங்களைச் செய்கிறார் என்பதே இத்திரைப்படத்தின் கதை. இதில் அப்பா – மகன் என இரட்டை வேடத்தில் கார்த்தி நடித்திருந்தார்.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, ‘சர்தார் 2’ திரைப்படத்தின் பணிகள் கடந்த 12ம் தேதி பூஜையுடன் தொடங்கியது.

‘சர்தார் 2’ திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதில் கார்த்தியுடன் எஸ்.ஜே. சூர்யா இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்தப் படத்தில் நடிகைகள் பிரியங்கா மோகன், மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் நாயகிகளாக நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments (0)
Add Comment