திரைத் தெறிப்புகள் – 92 :
*
பிரபலமான ஆங்கிலக் கவிதையின் தாக்கம் இந்தப் பாடலில் உள்ளது என்று சொல்லப்பட்டாலும், சங்கப் பாடலோ, ஆங்கிலப் பாடலோ, அதன் சாரத்தை, மயக்கும் தமிழில் கொண்டு வந்திருக்கிறார் கவியரசர் கண்ணதாசன்.
1962-ல் வெளிவந்த ‘ஆலயமணி’ திரைப்படத்தில் எஸ்.ஜானகி பாடியிருக்கும் இந்தப் பாடலைக் கேட்பவர்கள் எவரையும் மெல்லக் கிறங்க வைக்கும்.
இத்திரைப்படத்தில் இந்தப் பாடல் காட்சியில், விஜயகுமாரி – எஸ்.எஸ். ராஜேந்திரனுக்கு முன்னால் பாடுவதாக அமைந்திருக்கும் இந்தப் பாடலில், சரோஜா தேவியும் இடையிடையே கனவைப் போல வந்து போவார்.
“தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே.
அமைதி உன் நெஞ்சினில் நிலவட்டுமே.
அந்தத் தூக்கமும் அமைதியும் நானானால்,
உன்னைத் தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்…”
என்று ஜானகி, பாடலைப் பாடியிருக்கும் விதமே அற்புதம்.
அமைதியாக நகரும் இந்தப் பாடலை எழுதியிருப்பவர் கவிஞர் கண்ணதாசன்.
அடுத்து வரும் எளிமையான, அதே சமயம் மென்மையான பாடல் வரிகளைப் பாருங்கள்.
“காலையில் நானோர் கனவு கண்டேன் –
அதைக் கண்களில் இங்கே எடுத்து வந்தேன்.
எடுத்ததிலேதும் குறைந்து விடாமல்
கொடுத்து விட்டேன் உந்தன் கண்களிலே.”
காதல் உணர்வை, இதைவிட வலுவாகச் சொற்களில் கடத்திவிட முடியாது.
இப்படிப்பட்ட மிருதுவான பாடலுக்கு இசையமைத்தவர்கள் இசை இரட்டையர்களான எம்.எஸ். விஸ்வநாதனும் டி.கே. ராமமூர்த்தியும்.
“மனமெனும் மாளிகை திறந்திருக்க,
மையிட்ட கண்கள் சிவந்திருக்க,
இருகரம் நீட்டி, திருமுகம் காட்டி
தவழ்ந்து வந்தேன் நான் உன்னிடமே….”
என்று ஜானகியின் கனிவான குரலில், இந்தப் பாடல் நிறைவடையும்போது, நம் கண்களை ஒரு பிஞ்சுக் கரம் வந்து தொடுவதைப் போன்ற உணர்வைத் தரும்.
அந்த உணர்வுதான், இப்பாடலை நினைவில் மதிப்புடன் ஒன்ற வைத்திருக்கிறது.
– மணா