கேஜிஎஃப் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகம் வந்த பிறகு, அவை போன்றே ‘கிளாசிக்’ லுக்கில் அமைந்த ‘ஆக்ஷன் எண்டர்டெயினர்’களை தர வேண்டுமென்ற பல இயக்குனர்களை, தயாரிப்பாளர்களைத் தொற்றியது.
அந்த வகையில் தயாரானவற்றில் சில மண்ணைக் கவ்வியிருக்கின்றன. அப்படங்கள் வகுத்த எல்லைகளைத் தாண்ட சிலர் முயற்சி மேற்கொண்டிருக்கின்றனர். அவற்றில் எந்த வகையில் சேரும் என்ற ஐயத்தை ஏற்படுத்தியது ‘தே கால் ஹிம் ஓஜி’ தெலுங்கு பட ட்ரெய்லர்.
‘சாஹோ’ இயக்குனர் சுஜித் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், ரவி கே.சந்திரன் மற்றும் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இப்படத்தில் பவன் கல்யாண், பிரியங்கா மோகன், பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி உட்படப் பலர் நடித்துள்ளனர்.
தெலுங்கில் தயாரானாலும் தமிழ், இந்தி மொழிகளிலும் இப்படம் ‘டப்’ செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் பதிப்பு பணிகளில் வசனங்களை சபரிநாதன் என்பவர் எழுதியிருக்கிறார்.
சரி, ‘தே கால் ஹிம் ஓஜி’ படம் தருகிற திரையனுபவம் எப்படிப்பட்டது?
யார் இந்த ‘ஓஜி’!
எழுபதுகளில் ஜப்பானில் இருந்து தங்கக்கட்டிகளை கப்பலில் சத்யநாராயணாவும் அவரது நண்பராக இருந்த வர்தமான் மிராஜ்கரும் (தேஜ் சப்ரு) எடுத்துவரும்போது சில திருடர்கள் அதனைக் கொள்ளையடிக்க முயற்சிக்கின்றனர். அவர்கள் பணயக்கைதியாகப் பிடித்தவர்களில் சிறுவனாக இருந்த ஓஜியும் ஒருவர்.
அப்போது, அவர்களது உயிரைக் காப்பாற்றத் தனது தங்கத்தை இழக்கத் தயாராகச் சத்யநாராயணன் இருந்ததே அதற்குப் பின்னிருக்கும் காரணம்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு, வர்தமான் அந்தத் துறைமுகத்தை தனக்கு மட்டுமே சொந்தமானதாக ஆக்க முயற்சிக்கும்போது சத்யநாராயணாவுக்குத்துணையாக நிற்கிறார்.
அப்படிப்பட்ட ஓஜி, ஒருநாள் சத்யநாராயணாவின் மூத்த மகன் மரணத்திற்குக் காரணமானதாகச் சொல்கின்றனர் அப்பகுதி மக்கள். அந்த சம்பவத்திற்குப் பிறகு, துறைமுகத்தை விட்டு ஓஜி சென்றுவிடுகிறார்.
வெகுகாலம் கழித்து, மீண்டும் வர்தமான் மகன்கள் ஓமி (இம்ரான் ஹாஸ்மி) மற்றும் ஜிம்மி (சுதேவ்) மூலமாக மீண்டும் சத்யநாராயணாவின் குடும்பத்தினர் பாதிப்புக்குள்ளாகின்றனர். அவரது துறைமுகத்தைப் பிடிக்க முயற்சிகள் நடக்கின்றன.
தங்களுக்குச் சொந்தமான கப்பலும் அதிலிருக்கும் குறிப்பிட்ட கண்டெய்னரும் கடற்படை வசம் பிடிபடாமல் இருக்க, அதனைச் சத்யநாராயணாவின் துறைமுகத்திற்கு அனுப்பச் சொல்கிறார் ஜிம்மி.
அங்கிருந்து அந்த கண்டெய்னரை வெளியே எடுக்க விடாமல் தடுக்கிறார் சத்யநாராயணாவின் இளைய மகன். அதில் என்ன இருக்கிறது என்று சோதித்தபின்னரே தர முடியும் என்று அவர் சொல்ல, அவரைச் சுட்டுக் கொல்கிறார் ஜிம்மி.
அந்த பிரச்சினைக்குப் பிறகு, கண்டெய்னரை மறைத்து வைக்கின்றனர் சத்யநாராயணாவின் ஆட்கள்.
அதையடுத்து, சத்யநாராயணாவைத் துப்பாக்கி முனையில் பிடித்து வர ஆட்களை அனுப்புகிறார் ஜிம்மி. இன்னொருபுறம், அந்த கண்டெய்னரை வெளிநாட்டில் இருந்து அனுப்பிய ஓமி இந்தியாவுக்கு வருகிறார்.
அபாயகரமான இருவரது பிடியில் இருந்தும் எப்படித் தப்பிப்பது என்று யோசிக்கும் சத்யநாராயணா நேராக நாசிக் செல்கிறார். அங்குதான் பல ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்துவரும் ஓஜி தனது மனைவி, மகளுடன் வாழ்ந்து வருகிறார்.
சத்யநாராயணாவின் வரவு அவரது வாழ்வை எப்படி மாற்றியது? ஓமி, ஜிம்மியின் வெறியாட்டத்தை ஓஜி தடுத்தாரா என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
படம் முழுக்க ‘ஓஜி யாருன்னு தெரியுமா’ என்று பல பாத்திரங்கள் கேட்கின்றன. இப்போது பல ‘ஹீரோயிச’ படங்களில் இந்த ‘ஜால்ரா’ தவறாமல் ஒலிக்கிறது.
அதற்குப் பதிலளிக்கும்விதமாக, ஜப்பானில் சாமுராய் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் கொல்லப்படுகிற காட்சி காட்டப்படுகிறது. அவர்களில் ஒருவராக இருக்கும் சிறுவன் ஓஜி அங்கிருந்து தப்பிக்கிறார். அவர்தான் கப்பலில் சத்யநாராயணாவைக் காப்பாற்றுகிறார்.
அது சரி, ஜப்பானுக்கு ஓஜி ஏன் சென்றார் என்று கதையில் சொல்ல வேண்டுமே? ‘அதை பொறவு பார்க்கலாம்’ என்று கிளைமேக்ஸில் சொல்கிறார் இயக்குனர் சுஜித்.
இதிலிருந்தே இப்படத்தின் இரண்டாம் பாதி திரைக்கதை எப்படியிருக்கும் என்று யூகித்துக் கொள்ளலாம்..!
நோ லாஜிக்..!
’லாஜிக் எல்லாம் பார்க்காம கேஜிஎஃப் படத்தை சக்சஸ் ஆக்குனீங்களே, அதே மாதிரி இதையும் பாருங்க’ என்றிருக்கிறது ‘தே கால் ஹிம் ஓஜி’ படக்குழு. இதன் திரைக்கதையிலும் லாஜிக் சார்ந்த கேள்விகளுக்குப் பதில்கள் கிடையாது.
‘நோ லாஜிக் ஒன்லி கமர்ஷியல் சினிமா மேஜிக்’ என்று களமிறங்கியிருக்கும் இப்படத்தில் ஏகப்பட்ட வன்முறை காட்சிகள், ஷாட்கள் உண்டு.
அதனால்தான் இதற்கு ‘ஏ’ சான்றிதழ் தரப்பட்டிருக்கிறது. இது போக, பத்து நிமிட காட்சிகளுக்கு ‘கட்’ கொடுக்கப்பட்டதாக ஒரு தகவல்.
ரத்தம் சொட்டுகிற மற்றும் கொடூரமான தாக்குதலை மனதில் கற்பனை செய்ய வைக்கிற இப்படத்தின் காட்சிகள், ஷாட்களை பார்க்கத் தைரியம் இருப்பவர்களுக்கு மட்டுமே இது ஏற்றது. அது இல்லாவிட்டால், இப்படத்தின் டீசர், ட்ரெய்லர் பார்ப்பது கூட மனதை ரணமாக்கிவிடும்.
அதேநேரத்தில், அது போன்ற படங்களை ரசிப்பவர்கள் கொண்டாடுகிற வகையில் இதன் காட்சியாக்கம் இருப்பதைக் குறிப்பிட்டுதான் தீர வேண்டும்.
ரவி கே.சந்திரன் மற்றும் மனோஜ் கே பரமஹம்சாவின் ஒளிப்பதிவு, ஏ.எஸ்.பிரகாஷின் தயாரிப்பு வடிவமைப்பு, நவீன் நூலியின் படத்தொகுப்பு ஆகியன இப்படத்தைத் தாங்கிப் பிடித்திருக்கின்றன.
இப்படத்தில் கிட்டத்தட்ட 8 சண்டைப்பயிற்சியாளர்கள் பணியாற்றியிருக்கின்றனர். ஒவ்வொன்றும் ஒரு குறும்படம் போல உருவாக்கப்பட்டுள்ளது.
ஆக்ஷன் காட்சிகள் மற்றும் அதற்கான பில்டப்பை ரசிகர்கள் கொண்டாடுகிற வகையில் பின்னணி இசையை அமைத்திருக்கிறார் எஸ்.எஸ்.தமன். இப்படத்தின் பட்ஜெட்டில் அவருக்குக் குறிப்பிட்ட சதவிகிதத்தை ஒதுக்கும் அளவுக்கு உள்ளது அந்த பங்களிப்பு.
நடிப்பைப் பொறுத்தவரை, இதற்கு முன் வந்த படங்களை விடப் பத்தில் ஒரு பங்கைத்தான் இதில் தந்திருக்கிறார் பவன் கல்யாண். ஆனால், தனது திரையிருப்பை ரசிகர்கள் எந்த இடங்களில் எல்லாம் கொண்டாடுவார்கள் என்ற புரிதலுடன் தோன்றியிருக்கிறார்.
மற்றபடி, இதர பாத்திரங்கள் எல்லாம் பவன் கல்யாண் புகழ் பாடுகின்றன.
அதையும் மீறி பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி, சுபலேக சுதாகர், தேஜ் சப்ரு, சுதேவ், இம்ரான் ஹாஸ்மி எனப் பலரது நடிப்பு சட்டென்று ஈர்ப்பைத் தருகிறது.
மூத்த நடிகர்களுடன் தோன்றுகையில் இளம் நாயகிகள் துருத்தலாகத் தெரிவது சமீபகாலமாக நிகழ்ந்து வருகிறது. ஆனால், சில காட்சிகளில் வந்தாலும் ‘ஜோடிப்பொருத்தம் உவ்வே’ என்று சொல்லாத அளவுக்குப் பவன் கல்யாண் உடன் பாந்தமாகத் தோன்றியிருக்கிறார் பிரியங்கா மோகன்.
இந்தப் படத்தில் அர்ஜுன் தாஸ் வில்லத்தனம் காட்டியிருக்கிறார். அவரது பாத்திர வார்ப்பு ஏற்கனவே சில படங்களில் நாம் பார்த்த ஒன்றுதான்.
இது போக வெங்கட், ஷாம், அஜய் கோஷ், மொட்டை ராஜேந்திரன், ராகுல் ரவீந்திரன், ஹரிஷ் உத்தமன், ஜாக்கி ஷெராஃப், லால் என்று பலர் இதில் தலைகாட்டியிருக்கின்றனர்.
ஒரு கேங்க்ஸ்டர் படமாக, ஆக்ஷன் ட்ராமா வகைமையில் அமைந்த படைப்பாக, வன்முறை காட்சிகளுக்கு நியாயம் கற்பிக்கிற சித்தரிப்பைக் கொண்டதாக ‘தே கால் ஹிம் ஓஜி’ அமைந்திருப்பதில் நமக்கு கருத்து பேதம் இல்லை.
அதேநேரத்தில், பொறுப்புமிக்க அரசியல்வாதியாக, ஆந்திர மாநிலத்தின் துணை முதலமைச்சராகத் திகழ்கிற பவன் கல்யாண் என்பவரிடம் இருந்து வன்முறை நிறைந்த திரைப்படம் வருவதைத்தான் நம்மால் ஏற்க முடிவதில்லை.
இப்படிப்பட்ட படைப்புகளைத் தந்துவிட்டு, யதார்த்தத்தில் அசம்பாவிதமான நிகழ்வுகள் நேர்கையில் எப்படிக் கண்டிப்பை வெளிக்காட்ட முடியும்? இதையெல்லாம் இனியாவது சிந்திப்பாரா பவன் கல்யாண்?
சாதாரண ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு தனது படங்கள் இப்படித்தான் இருக்க வேண்டுமென்கிற தீர்மானத்திற்கு அவர் வருவாரா?
– உதயசங்கரன் பாடகலிங்கம்