சினிமாப் பாட்டுப் புத்தகங்கள் தந்த பரவசம்!

1. தமிழில் முதல் பேசும் படம் 1931 இல் வெளிவந்த போதே சினிமாவில் பாட்டு வந்துவிட்டது. முதல் தமிழ் பேசும் படத்தை “டாக்கி” என்று தான் கல்கி தன் சினிமா விமர்சனத்தில் எழுதுகிறார்.

முதல் தமிழ் பேசும் படத்தில் தமிழ் பேச்சு கிடையாது. தெலுங்கு பாஷை தான். முன்னும் பின்னும் சில பாடல்கள் என்று கல்கி எழுதுகிறார். அப்போதே பாட்டுப் புத்தகம் வந்துவிட்டது.

பாட்டுப் புத்தகத்தின் அட்டைப் படத்தில் ஆங்கிலத்தில் தான் எழுதியிருந்தார்கள். அமெரிக்காவில் இதனை அப்போது Lyirics book என்று அழைத்தார்கள்.

2 1948இல் பாண்டிச்சேரியில் பிறந்த நான், என் தந்தை ஊரான சென்னையில் போயஸ் கார்டன் பகுதியில் வளர்ந்தேன். அதற்கு அருகாமையில் ஜெமினி ஸ்டுடியோ அருகில் சன் தியேட்டர் இருந்தது.

3 அம்மா என்னை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு டிக்கெட் வாங்குவதற்கு ஏதோ ஒரு குகை மாதிரி இருந்த பகுதிக்குள் கியூ வரிசையில் சென்று டிக்கெட் வாங்கிய பயம் கலந்த அனுபவம் இன்னமும் இருக்கிறது.

4 எனது அம்மா சன் தியேட்டரில் பாட்டுப் புத்தகம் வாங்குவார். சாணித் தாளில் மூணு நாலு பக்கத்தில் பாடல்கள் அச்சிடப்பட்டிருக்கும்.

பாட்டுப் புத்தகத்தின் அட்டையில் கருப்பு மை அடையாக சினிமா நட்சத்திரங்களின் படங்கள் இருக்கும்.

சிறுவயதில் தீப்பெட்டி படத்திலிருந்து, தபால் தலை படத்திலிருந்து படம் என்று ஒன்று இருந்தால் நான் அதை சேகரித்து வைத்தேன்.

எனவே பாட்டு புத்தகங்களும் என் சேகரிப்பில் இருந்தன.

5 எங்கள் கூட்டுக் குடும்பத்தில் ஏராளமானவர்கள் இருந்தார்கள். அவர்களில் பாட்டுப் புத்தகம் பார்த்துப் பாட்டுப் பாடும் பெண்களும் இருந்தார்கள்.

6 அப்போது சினிமா பாட்டு எழுதுவதில் மிகவும் பிரபலமான கண்ணதாசன், வைரமுத்து போல, கவிஞர் கம்பதாசனும் பிரபலமாக இருந்தார்.

ஓவியரான என் அப்பாவின் நண்பர் அவர். நேரம் கிடைக்கும்போதெல்லாம் என் வீட்டில் தான் இருப்பார்.

நான் பார்த்த கவிஞர்களிலேயே மிகமிக அழகான கவிஞர் கம்பதாசன்தான். அவர் எழுதிய பாடல்கள் அடங்கிய பாட்டுப் புத்தகங்கள் என்னிடம் இருந்தது எனக்குப் பெருமையாக இருக்கும்.

பாட்டுப் புத்தகம் வாங்குபவர்கள் மிகவும் நவீனமானவர்களாக எனக்குத் தெரிந்த ஒரு காலம் இருந்தது.

7 என் வீட்டில் இருந்த கிராம போனில் இசைத் தட்டுகளைப் போட்டு சினிமா பாட்டுகளைக் கேட்பார்கள்.

பாட்டுப் புத்தகத்தை வைத்துக்கொண்டு அதைப் பார்த்து கிராமபோன் பாட்டோடு சேர்ந்து பாடும் பெண்களும் எங்கள் வீட்டுப் பெரிய கூட்டுக் குடும்பத்தில் இருந்தார்கள்.

அது எல்லாமே எனக்குத் திரும்பவும் கிடைக்காமல் போய்விட்ட ஒரு கனாக்காலம்.

நன்றி: கலை விமர்சகர் முகநூல் பதிவு

Comments (0)
Add Comment