மலையாள நடிகை பார்வதி தமிழில் பூ படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் தனுஷுடன் மரியான் படத்தில் நடித்திருந்தார்.
நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகை பார்வதிக்கு டேக் ஆஃப் எனும் மலையாளப் படத்துக்கு தேசிய விருதும் கேரள அரசின் மாநில விருதும் வழங்கப்பட்டது.
மலையாளத்தில் நடிகை ஊர்வசியுடன் இணைந்து பார்வதி நடித்த உள்ளொழுக்கு திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பு கிடைத்தது.
தற்போது நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகர் விக்ரமுடன் தமிழில் தங்கலான் படத்தில் நடித்துள்ளார். பா. ரஞ்சித் இயக்கியுள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் தங்கலான் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய நடிகை பார்வதி, “பூ படத்தில்தான் நடிகையாக அறிமுகமானேன். அதன் தயாரிப்பாளர்தான் தங்கலான் படத்தையும் தயாரித்திருக்கிறார்.
பா. ரஞ்சித் படங்கள் எப்படி இருக்குமென தெரியும். மிகவும் எதார்த்தமாக எடுக்கக் கூடியவர். அதனால் படப்பிடிப்பில் சொகுசாக இருக்க முடியாது. நடிகர் விக்ரம் சிறப்பாக நடித்துள்ளார். ரசிகர்களின் அன்புதான் எங்களை இவ்வளவு உழைக்க வைக்கிறது.
ஒரு படத்தைப் பார்த்து ரசிகர்கள் ஆதரவு தெரிவிப்பதுதான் எல்லாவற்றை விடவும் பெரியது. எனவே தங்கலான் படம் பார்வையாளர்களை நிச்சயம் ஏமாற்றாது. அதற்கு நான் 100 சதவிகிதம் உத்தரவாதம் தருகிறேன்” என்று கூறியுள்ளார் நம்பிக்கையுடன்.