ஊடகவியலாளரான த.செ. ஞானவேல், ஏற்கனவே ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தை இயக்கி இருந்தாலும், அவருக்கு நிரந்தர முகவரியை அளித்த படம் ‘ஜெய்பீம்’.
சூர்யா நாயகனாக நடித்திருந்த இந்தப் படம், ஞானவேலுவை, அடுத்த உயரத்துக்கு ஏற்றி வைத்தது.
அதன் தொடர்ச்சியாக, ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தை வைத்து ‘வேட்டையன்’ படத்தை இயக்கினார். இந்த படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் சாதனை நிகழ்த்தி வருகிறது.
‘வேட்டையன்’ திரைப்படம், ஞானவேலுவை, பட்டித் தொட்டி எல்லாம் கொண்டுபோய் சேர்த்துள்ளது. கோடம்பாக்கத்தின் ‘மோஸ்ட் வாண்டட்’ இயக்குநர்கள் பட்டியலில் ஞானவேலுவும் சேர்ந்து விட்டார்.
அவரது, அடுத்த படம் என்ன என்பது குறித்து ஆளாளுக்கு ஹேஸ்யங்கள் பகிர்ந்து கொண்டிருக்க, அவர, “நான் சூர்யாவை வைத்து அடுத்த படம் இயக்கப் போகிறேன்” என அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் பல சுவாரஸ்ய தகவல்கள் உள்ளன.
“சூர்யாவை வைத்து நான் இயக்கும் புதிய படம், எனது முந்தைய படங்களான ஜெய்பீம், வேட்டையன் படங்களில் இருந்து மாறுபட்டு இருக்கும். நான், ஊடகத்தில் பணியாற்றியபோது எழுதிய கட்டுரைதான் புதிய படத்தின் கதைக்கரு” என்று கூறியுள்ள ஞானவேல், தொடர்ந்து சொன்ன விஷயங்கள் தான் இன்னும் சுவாரஸ்யமானவை.
“புதிய படத்தின் கதையை ஏற்கனவே எழுதி முடித்து விட்டேன் – சூர்யாவுக்கு கதை தெரியும் –வேட்டையன் முடிந்ததும் மீண்டும் சந்திக்கலாம் என சூர்யா சொன்னார்.
அடுத்த மாதம் முதல் வாரத்தில் அவரை சந்தித்து பேச உள்ளேன் – தயாரிப்பு வேலைகள் ஜரூராக நடந்து கொண்டிருக்கிறது – இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் படப்பிடிப்புக்கு கிளம்பி விடுவோம்” என மனம் திறந்துள்ளார் ஞானவேல்.
ரஜினியை கலாய்க்கும் ஃபகத் பாசில்:
இதனிடையே ‘வேட்டையன்’ திரைப்படத்தில் நீக்கப்பட்ட காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது.
ரஜினி – ஃபகத் பாசில் இடையிலான உரையாடலாக அந்தக்காட்சி நீள்கிறது. ஓரிடத்தில் ரஜினி, “பேட்ரிக்! நீங்க ரொம்ப நல்லா நடிக்கிறீங்க” என ஃபகத் பாசிலிடம் சொல்கிறார்.
அதற்கு ஃபகத் பாசில், “உங்கள விடவா சார்?” என வியப்பாகக் கேட்கிறார்.
30 நொடிகள் இடம்பெறும் ஜாலியான இந்த உரையாடல் காட்சி படத்தில் இடம்பெறவில்லை. எனினும் லைகா நிறுவனம் இந்த வீடியோவை தனது அதிகாரபூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
– பாப்பாங்குளம் பாரதி