திரைத் தெறிப்புகள் – 81 :
*
அனைவரையும் வாழ வைக்கும் விவசாயிகளைப் பற்றிச் சில திரைப்படப் பாடல்களே வெளிவந்திருக்கின்றன.
அதிலும், தஞ்சை மாவட்ட வட்டார வழக்கோடு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதியிருக்கும் சில பாடல்கள் சத்தான விதை நெல் மாதிரி தனி ரகம்.
அப்படியொரு பாடல் தான், 1958-ல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தயாரித்து, இயக்கி, நடித்த ‘நாடோடி மன்னன்’ படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல்.
இத்திரைப்படத்தில் எம்.ஜி.ஆரும், பானுமதியும் மாட்டுவண்டி ஒன்றில் பயணப்படுகிறபோது, பானுமதி தனது இனிமையான குரலில் இப்படி ஆரம்பித்திருப்பார்.
“சும்மா கிடந்த நிலத்தைக் கொத்தி.
சோம்பல் இல்லாம
ஏர் நடத்தி.
கம்மா கரையை ஒசத்திக் கட்டி.
கரும்புக் கொல்லையில் வாய்க்கால் வெட்டி
சம்பா பயிரைக் பறிச்சு நட்டு,
தகுந்த முறையில் தண்ணீர் விட்டு,
நெல்லு விளஞ்சிருக்கு,
வரப்பும் உள்ள மறஞ்சிருக்கு.”
என்று பானுமதி பாடியபடி வரும்போது, அவர் முகத்தில் வெளிப்படுத்தும் பாவங்களைப் பார்க்க அருமையாக இருக்கும்.
உடனே, பானுமதியின் குரலுக்குப் பதில் சொல்வது மாதிரி அடுத்து வரும் டி.எம். சௌந்தரராஜனின் வளமான குரல்.
“காடு விளையட்டும் பொண்ணே!
நமக்கு காலமிருக்குது பின்னே,
காலமிருக்குது பின்னே…”
விவசாயத் தொழிலாளர்களை மட்டுமல்ல, சுரங்கம் தோண்டும் தொழிலாளர்களிலிருந்து, கட்டுமானத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் வரை, அவர்கள் படும் துயரங்களைப் பற்றியும் விளக்குகிறது இந்தப் பாடல்.
“மண்ணைப் பொளந்து சொரங்கம் வச்சு
பொன்னை எடுக்க கனிகள் வெட்டி
மதிலு வச்சு மாளிகை கட்டி
கடலில் மூழ்கி முத்தை எடுக்கும்
வழிகாட்டி மரமான தொழிலாளர் வாழ்க்கையிலே
பட்ட துயர் இனி மாறும் –
ரொம்பக் கிட்ட நெருங்குது நேரம்…”
எளிய நாட்டுப்புற மெட்டில் அமைந்த இந்தப் பாடலுக்கு இசையமைத்திருப்பவர் எஸ்.எம். சுப்பையா நாயுடு.
இந்தப் பாடலின் அடுத்த பகுதி, கேள்வி – பதில் பகுதியாகத் தொடர்ந்திருக்கும்.
பானுமதி கேள்வி கேட்க, எம்.ஜி.ஆர். பதில் சொல்கிற மாதிரி அமைந்திருக்கும் இந்தப் பாடல் வரிகள்.
மாடா உழைச்சவன் வாழ்க்கையிலே –
பசி வந்திடக் காரணம் என்ன மச்சான்?
அவன் தேடிய செல்வங்கள் வேறு இடத்திலே
சேர்வதினால் வரும் தொல்லையடி.
பஞ்சப் பரம்பரை வாழ்வதற்கே இனி
பண்ண வேண்டியது என்ன மச்சான்.?
தினம் கஞ்சிக் கஞ்சி என்றால் பானை நிறையாது,
சிந்திச்சு முன்னேற வேணுமடி.
வாடிக்கையாய் வரும் துன்பங்களை
இன்னும் நீடிக்கச் செய்வது மோசமன்றோ.
இருள் மூடிக் கிடந்த மனமும் வெளுத்தது
சேரிக்கும் இன்பம் திரும்புமடி…”
சாதாரண மக்களுக்கான மொழியில் பாடப்பட்ட இந்தப் பாடலுக்குப் பார்வையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்ததில் ஆச்சரியம் ஏதும் இல்லை.
தொடரும் இந்தக் கேள்விப் பதில்களைப் பாருங்கள்.
“நல்லவர் ஒன்றாய் இணைந்துவிட்டால்
மீதம் உள்ளவரின் நிலை என்ன மச்சான்?”
நாளை வருவதை எண்ணி எண்ணி
அவர் நாழிக்கு நாழி தெளிவார்”
என்று நீளும் பாடலை எதிர்கால நோக்கோடு இப்படி நிறைவு செய்திருப்பார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
“நானே போடப்போறேன் சட்டம்.
பொதுவில் நன்மைப்.. புரிந்திடும் திட்டம்.
நாடு நலம்பெறும் திட்டம்.
நன்மைப் புரிந்திடும் திட்டம்…”
என்று, விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் நம்பிக்கையூட்டும் விதமாக இந்தப் பாடல் நிறைவடையும்.
இந்தப் பாடலை எப்போதும் கேட்டாலும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்கிற மக்கள் கவிஞருக்குள் மேலோங்கி இருக்கும் பழைய தஞ்சை மாவட்ட விவசாயி தான் சட்டென்று நமக்கு நினைவுக்கு வருவார்.
*
-மணா.