கே. பாலசந்தரை அவரது நாடக நாட்களிலிருந்து எனக்குத் தெரியும். ராகினி ரிக்ரியேஷன்ஸுக்காக அவர் எழுதி டைரக்ட் செய்த ‘மெழுகுவர்த்தி’, ‘நீர்க்குமிழி’, ‘எதிர்நீச்சல்’ ஆகிய நாடகங்களில் நான் நடித்திருக்கிறேன்.
நாடக மேடையில் பல நவீன உத்திகளை அந்தக் காலத்திலேயே கையாண்டவர் அவர். அவரைப் போன்ற ஒரு திறமைசாளி தற்போது நாடக உலகத்தோடு தொடர்பே இல்லாமல் – வைத்துக் கொள்ளாமல் இருப்பது எனக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.
இப்போதும் கூட, அவர் நாடகங்களை எழுதித் தர ஒப்புக் கொள்ளலாம். இரண்டு நாள்கள் ஒத்திகைக்கு வந்திருந்து எங்களை Guide பண்ணினால் போதும், மற்றவற்றை நாங்கள் பார்த்துக் கொள்வோம்.
அவரது முதல் படமான ‘நீர்க்குமிழி’யை டைரக்ட் செய்தபோது அவர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டுக் காணப்பட்டார். ஏனெனில் அத்துறைக்கு அப்போது அவர் புதியவராக இருந்ததால் பலவிதக் குழப்பங்கள் அவரைச் சூழ்ந்திருந்தன.
நாகேஷ், ‘மேஜர்’ சுந்தரராஜன், நான் ஆகியோர் சம்பந்தப்பட்ட ஒரு காட்சியைத் தான் அவர் முதன் முதலாகப் படமாக்கினார்.
அவருக்கென்று தனியாக ஒரு பாணி உண்டு. தன் மனத்திற்குச் சரி எனப்பட்டதையே அவர் செய்வார். பிறருடைய யோசனைகளையும் கேட்பார். ஆனால், அவற்றால் எப்போதும் influence ஆக மட்டார்.
நான் அவருடைய ரசிகை. அவரது படங்கள் அனைத்தையும் பார்த்திருக்கிறேன். தவிர்க்க முடியாத காரணங்களால் ஓரிரு படங்களைப் பார்க்காமல் தவற விட்டிருக்கலாம், அவரது படங்கள் அனைத்திலுமே நல்ல தரம் இருக்கும்.
நல்ல நகைச்சுவை உணர்வும் அவற்றில் காணப்படும். அவரது ‘எதிர்நீச்சல்’, ‘பாமா விஜயம்’ போன்ற படங்களே அதற்குத்தக்க உதாரணங்கள்.
பாலசந்தரின் Duty Conscious-ஜக் கண்டு நான் பலமுறை வியந்ததுண்டு. எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவர். அதிகம் பேச மாட்டார். அவரால் எனது புகழ் பெருகியது என்றால் அது மிகையாகாது.
‘இரு கோடுகள்’ படத்தில் எனது கதாபாத்திரத்தை என் வாழ்நாள் முழுவதும் நினைத்திருப்பேன். அப்படத்தில் வரும் Life and File காட்சியை யாராலும் மறக்க முடியாது.
அந்தப் படத்தின் மூலம் எனக்குக் கிடைத்த பாராட்டுக்கள் ஏராளம் என்றால் அத்தனை பெருமையும் பாலசந்தரையே சாரும்.
****
நன்றி: மணிமேகலைப் பிரசுரம் வெளியிட்ட திரைக் கலைஞர்கள் வரிசை – ‘இயக்குநர் கே. பாலசந்தர்’ என்ற நூலிலிருந்து ஒரு பகுதி.