பொதுவாகவே சினிமா மொழியில் இன்றைய குழந்தை நட்சத்திரங்களை வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்கள் என்று கூறுவார்கள்.
காரணம், குழந்தை நட்சத்திரங்களாக நடித்து புகழ்பெற்ற பலர், எதிர்காலத்தில் மிகப்பெரிய நடிகர், நடிகைகளாக மாறியதால் தான்.
இதற்கு உதாரணமாக, நம் தமிழ் சினிமாவிலேயே நடிகர் கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவியின் திரைப்பயண வளர்ச்சியைக் கூறலாம்.
இருப்பினும் அவர்களில் சிலர் குழந்தை நட்சத்திரமாக இருக்கும்போது வாங்கிய பெயர் அளவுக்கு, வளர்ந்து வாய்ப்பு கிடைத்தும் பிரகாசிக்காமல் போனவர்களும் உண்டு.
இது ஒருபுறம் இருக்க, தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை குழந்தை நட்சத்திரங்களுக்கு கொடுக்கப்படும் வாய்ப்பு மற்றும் முக்கியத்துவம் என்பது அன்றைய கருப்பு வெள்ளைக் காலம் தொடங்கி இன்றைய டிஜிட்டல் யுகம் வரை எப்போதுமே சிறப்பானதாகவே இருந்து வருகிறது.
அதிலும் குறிப்பாக, பெண் குழந்தை நட்சத்திரங்கள் தமிழ் சினிமாவிற்கு பல வகையில் பெருமை தேடி தந்துள்ளதோடு, பலமுறை தேசிய விருதினையும் வென்று வந்து நமக்கு புகழையும் பெற்று தந்துள்ளனர்.
“இந்தியாவின் ஷர்லி டெம்பிள்” என்று அழைக்கப்பட்வர் பேபி சரோஜா (சரோஜா ராமாமிருதம்)
1930களின் பிற்பகுதியில் குழந்தை நட்சத்திரமாகப் புகழ் பெற்றவர்.
1937 ஆம் ஆண்டு இயக்குநர் கே.பாலசுப்ரமணியம் இயக்கிய பாலயோகினி’ திரைப்படம் அவரை மிகவும் பிரபலமாக்கியது.
மேலும் தியாகபூமி (1939), காமதேனு (1941) போன்ற படங்களில் நடித்துள்ளார்
பேபி சரோஜா சோப், சரோஜா பவுடர், சரோஜா கண் மை என வியாபாரப் பொருட்களிலும் இடம்பெற்றார் சரோஜா.
கைப்பைகள், நோட்டுப் புத்தகங்கள் உட்பட பல பொருட்களில் அவரின் புகைப்படம் அச்சிடப்பட்டது.
தமிழுக்கு பெருமை தந்த முதல் தேசிய விருது:
1950-60களில் மிகப்பிரபலமான குழந்தை நட்சத்திரமாக விளங்கியவர் ‘டெய்சி இராணி’.
1954 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த ‘பந்திஷ்’ என்கிற படத்தின் மூலம் இவர் பாலிவுட்டில் அறிமுகமாகி இருந்தாலும், தமிழில் ‘யார் பையன்’ போன்ற படங்களில் நடித்து மிகவும் திறமை வாய்ந்த சிறுமியாக அடையாளம் காணப்பட்டார்.
இவரது காலகட்டத்திலேயே அறிமுகமான மற்றும் ஒரு குழந்தை நட்சத்திரமான ‘பேபி ராணி’ இவரையே மிஞ்சும் வகையில்,
‘பேசும் தெய்வம்’, ‘குழந்தைக்காக’, ‘கண்ணே பாப்பா’, ‘கண்காட்சி’ போன்ற படங்களில் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து பலரின் உள்ளங்களையும் கொள்ளைக் கொண்டார்.
இதில் குறிப்பாக ‘கண்ணே பாப்பா’ திரைப்படத்தை அன்றைய ரசிகர்களால் அத்தனை எளிதில் மறக்க இயலாது.
அதேபோல் ‘குழந்தைக்காக’ படத்திற்காக இந்தியாவிலேயே முதல் முறையாக குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை வென்ற பேபி ராணி, இதன் மூலம் தமிழ் சினிமாவிற்கும் பெருமையை தேடித் தந்தார்.
இவர்கள் தவிர பேபி சாவித்ரி, பேபி ஷகிலா, ரோஜா ரமணி பேபி சுமதி போன்ற சிறுமிகளும் ‘கைதி கண்ணாயிரம்’, ‘பக்த பிரகலாதா’, ‘இருமலர்கள்’, ‘சித்தி’,
‘என் தம்பி’, ‘சாந்தி நிலையம்’ ‘அவன்தான் மனிதன்’ போன்ற பல படங்களில் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, பிரபலமான குழந்தை நட்சத்திரங்களாக அந்த சமயம் வலம் வந்தனர்.
இந்த நேரத்தில் தான், ‘அபலை அஞ்சுகம்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் பெற்ற குட்டி பத்மினி தன் அழகாலும், துறுதுறு நடிப்பாலும், வண்டு கண்களாலும் அனைவரது உள்ளங்களையும் கவர்ந்தார்.
அதிலும் குறிப்பாக, 1965 ஆம் ஆண்டு ஏ.வி.எம் தயாரிப்பில் வெளிவந்த ‘குழந்தையும் தெய்வமும்’ படத்தில் லல்லி, பப்பி எனும் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருந்த குட்டி பத்மினி அன்று பலரது பாராட்டையும் பெற்றார்.
இவர் நடித்து வந்த இதே காலகட்டத்தில் இவருக்கு தங்கையாக, தம்பியாக என பல படங்களில் நடித்திருந்த ஸ்ரீதேவியும், ‘கந்தன் கருணை’, ‘பாபு’, ‘நம் நாடு’ போன்ற பல படங்களில் தனித்துவமான குழந்தை நட்சத்திரமாக அடையாளம் பெற்றார்.
பிறகு பின்னாளில் இந்திய சினிமாவே பிரமிக்கும் படியான லேடி சூப்பர் ஸ்டாராகவும் மாறிப்போனார்.
80-களின் தொடக்கத்தில் முந்தைய கருப்பு வெள்ளை காலம் அளவுக்கு பெரிய அளவில் குழந்தை நட்சத்திரங்களை முன்னிறுத்திய படங்கள் கவனம் பெறாமல் இருந்தாலும்,
மகேந்திரன் போன்ற தனித்துவமான இயக்குநர்கள் குழந்தைகளின் சிரிப்பையும், அழுகையையுமே தனி திரை மொழியாக மாற்றி நம்மை கலங்க வைத்திருந்தனர்.
இதற்கு உதாரணமாக ‘உதிரிப் பூக்கள்’ அஞ்சு கதாபாத்திரத்தைச் சொல்லலாம்.
இந்தப் படத்தில் சிறுமி அஞ்சு சிரிக்கின்ற ஒவ்வொரு இடங்களிலும், அன்று திரையரங்கில் கண்ணீர் விடாத உள்ளங்களே இல்லை எனலாம்.
அந்த வகையில், இனி வரும் காலங்களிலும் தேசிய விருதினை கடந்த சாதனைகளை இத்தகைய பெண் குழந்தை நட்சத்திரங்கள் நிச்சயம் நிகழ்த்திக் காட்டுவார்கள் என நம்பலாம்.
நன்றி: முகநூல் பதிவு