செந்தமிழ்த் தேன் மொழியாள்!

திரைத் தெறிப்புகள் – 46:

*

1958-ம் ஆண்டில் கவியரசர் கண்ணதாசன் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் சார்பாக எடுத்த திரைப்படம் ‘மாலையிட்ட மங்கை’.

பாகவதர் காலத்திலிருந்தே புகழின் உச்சிக்குப் போய், பிறகு சட்டென்று சரிந்து, திரை உலகை விட்டே ஒதுங்கிவிட்ட டி.ஆர்.மகாலிங்கத்தை கதாநாயகனாக ஆக்கி, அந்தப் படத்திற்காக அற்புதமான பல பாடல்களையும் எழுதியிருக்கிறார் கண்ணதாசன்.

ஜி.ஆர். நாதன் இயக்கிய இந்தப் படத்திற்காக, எம்.எஸ். விஸ்வநாதன் – டி.கே. ராமமூர்த்தி இசையமைத்த பாடல்கள் அனைத்துமே பெரும் ‘ஹிட்’, படமும் மகத்தான ‘ஹிட்’.

தன்னுடைய இனிமையான வசீகரக் குரலால் படம் முழுக்க வியாபித்திருந்தார் டி.ஆர். மகாலிங்கம்.

“நானன்றி யார் வருவார்” போன்ற பல பிரபலமான பாடல்கள் அதே படத்தில் இருந்தாலும், பெரும் கவனம் பெற்றது “சில்லென்று பூத்த” என்று துவங்கும் பாடல்.

“சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே..
நின்றது போல் நின்றாள், நெடுந்தூரம் பறந்தாள்.
நிற்குமோ ஆவி, நிலைக்குமோ நெஞ்சம்.
மனம் பெறுமோ வாழ்வே…”

– என்று இந்தப் பாடலைக் கணீர்க் குரலோடு ஆரம்பித்திருப்பார் டி.ஆர். மகாலிங்கம்.

இத்திரைப்படத்தில் அவரே பாடி நடிக்கும்போது அதற்குகேற்றபடி அழகான நடன அசைவுகளோடு ஆடியிருப்பார் பண்டரிபாயின் தங்கையான மைனாவதி.

“செந்தமிழ்த் தேன் மொழியாள் – நிலாவென
சிரிக்கும் மலர்க்கொடியாள்.

பைங்கனி இதழில் பழரசம் தருவாள்.
பருகிடத் தலை குனிவாள்.

காற்றினில் பிறந்தவளோ – புதிதாய்க்
கற்பனை வடித்தவளோ!
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ.
செவ்வந்திப் பூச்சரமோ…”

கருப்பு வெள்ளைக் காட்சியாக நகரும் இந்தப் பாடலைக் கேட்கும்போது, இதில் இடம்பெற்றிருக்கும் பாடல் வரிகள் உண்மையாகவே தேன் மொழியைப் போல் இருக்கும்.

“கண்களில் நீலம் விளைத்தவளோ.
அதை கடலினில் கொண்டு கரைத்தவளோ.
பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ!”

என்று நிறைவு பெறும் இந்தப் பாடலில் கண்ணதாசன் கையாண்டிருக்கும், 

“பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ…”

என்கின்ற வரி இன்றும் அதன் தனித்துவ அழகிற்காகப் போற்றப்படுகிறது.

வீணை நாதம் போன்ற தன்னுடைய குரலால் மகாலிங்கம் மிளிர வைத்த இந்தப் பாடலை, இப்போதும் தனியார் தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிகளில் கேட்க முடிகிறது.

ஆனால், அவருடைய குரலை நகல் எடுக்க முயற்சிக்கிறவர்கள் யாரும் டி.ஆர். மகாலிங்கத்தின் ஆற்றுப்படுத்தும் சில்லென்ற குரலை நகல் எடுக்க முடிவதில்லை என்பது தான் யதார்த்தம்.

*

– மணா.

Comments (0)
Add Comment