(சீதா) பயணத்தின் வழியே உணரப்படும் அன்பு!

ஸ்ரீராம் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் நடிகர் அர்ஜுன் கதை, திரைக்கதை எழுதித் தயாரித்து, இயக்க, ஐஸ்வர்யா அர்ஜுன், நிரஞ்சன், சத்யராஜ், பிரகாஷ் ராஜ், கோவை சரளா, இவர்களோடு அர்ஜுனும் தருவா சரோஜாவும் கவுரவத் தோற்றங்களில் நடிக்க தெலுங்கில் நேரடியாகவும் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டும் வந்திருக்கும் படம் ‘சீதா பயணம்’.

தாயுமானவனாகவும் இருக்கும் தந்தையின் (சத்யராஜ்) ஒரே மகளான சீதாவுக்கு சமையல் கலைஞராக ஆகவேண்டும் என்பதே லட்சியம்.

அதற்காக ஹைதராபாத்தில் நடக்கும் ஒரு பயிற்சி முகாமில் கலந்துகொள்ள காரில் போகிறாள்.

வரும் வழியில் அபி என்னும் இளைஞன் (நிரஞ்சன்) லிப்ட் கேட்க, ”போனில் என்ன பேசினாலும் ஸ்பீக்கர் போட்டுதான் பேசவேண்டும்” என்ற நிபந்தனையோடு ஏற்றிக் கொள்கிறாள்.

அவனுக்கு வரும் போன்கள் மூலம் அவனைப் பற்றி நல்ல விதமாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

ஒரு சாலையோர கடையை நடத்தும் பெண்ணின் (கோவை சரளா) மகன் – மருமகளுக்குள் சண்டை இருப்பது தெரிகிறது.

காசுக்கு அடிதடி செய்யும் ஒருவரை (அர்ஜுன்) சீதா கண்டிக்க, அவர் அவளை மிரட்டி அனுப்புகிறார்.

பழம் விற்கும் சிறுமியிடம் பழம் வாங்க, அவள் ஐநூறு ரூபாய்க்கு சில்லறை இல்லாமல் அங்கும் இங்கும் அலைந்தும் சில்லறை கிடைக்காமல் போக, சீதா அந்த சிறுமியிடம் ஐநூறு ரூபாயை வைத்துக் கொள்ளச் சொல்ல, அவள் பணத்தை வாங்காமல் பழத்தைக் கொடுத்து விட்டு “அப்புறமா வரும்போது தாங்க” என்று போய் விடுகிறாள்.

பசு மாட்டை குறுக்கே ஓட்டி வரும் சிறுவன் ஒருவனைக் கண்டிக்கிறாள்.

அபி தன் ஊர் வந்தவுடன், காரை விட்டு இறங்குவதற்கு முன்பு சீதாவிடம் தனது வீட்டுக்கு வந்து தனது தாத்தா, அப்பா, அம்மா ஆகியோர் அடங்கிய பெரிய குடும்பத்தைப் பார்த்து விட்டுப் போகச் சொல்கிறான். வற்புறுத்துகிறான். ஆனால் வரும்போது வருவதாகச் சொல்லி சீதா விடைபெறுகிறாள்.

சமையல்கலை பயிற்சி நிறுவனத்தின் வாசலை இவள் அடைய, ஒரு பெரிய தீ விபத்து காரணமாக மொத்தக் கட்டிடமும் எரிந்து, வெடித்துச் சிதறுகிறது.

ரெண்டு நிமிஷம் முன்னால் வந்திருந்தால் அவளும் விபத்தில் சிக்கியிருப்பாள். எனில் சீதாவைக் காப்பாற்றியது அந்த தாமதம்தான் என்பதால், அந்த இரண்டு நிமிடம் தாமதம் யார் கொடுத்தது என்று சொல்ல முடியாத காரணத்தால் அப்படி தன்னை தாமதப்படுத்திய எல்லோரையும் சந்தித்து நன்றி தெரிவிக்க வருகிறாள் சீதா.

அபி கேட்டுக்கொண்டபடி அவனது ஊருக்குப் போகிறாள். கூட்டுக் குடும்பத்தின் மகிமை, உறவுகளின் பாசம், கிராமக் கலாச்சாரம் இவற்றை அறிந்து கொள்கிறாள். அவன் மீண்டும் காரில் அவளுடன் ரிட்டர்ன் வருகிறான்.

பழம் விற்ற சிறுமியை சிலர் கடத்திக் கொண்டு போக, அபி மூலம் அவளைக் காப்பாற்றி விட்டு, தன்னை தாமதப்படுத்தியதற்காக அவளுக்கு நன்றி சொல்கிறாள் சீதா.

அடுத்து தன்னை மிரட்டியவரைப் பார்த்து அப்படி மிரட்டி தாமதப்படுத்தியதற்காக நன்றி சொல்கிறாள். அவர் நெகிழ்ந்து போகிறார்.

சிறுமியைக் கடத்தி அடிவாங்கிய கும்பலின் தலைவன், சீதாவையும் அபியையும் கொல்லும் வேலையை அவருக்கே கொடுக்கிறான். அவர் அவர்களைக் காப்பாற்ற முடிவு செய்கிறார்.

பசுவோடு போனவன் பசுவைத் தொலைத்து விட்டு அழ, அவர்களுக்கு உதவ, அங்கு வரும் ஒரு நபர் (துருவ் சர்ஜா) மாடுகளைக் கடத்தும் கும்பலை அடித்து நொறுக்கி லாரியில் மூச்சு கூட விட முடியாமல் பயணிக்கும் மாடுகளை விடுவிக்கிறார்.

அபியும் சீதாவும் சேர்ந்து தாங்கள் வாழும் கதை என்று ஒரு பொய்க் கதை சொல்லி, சாலையோர உணவுக் கடை நடத்தும் பெண்ணின் மகனையும் மருமகளையும் சேர்த்து வைக்கின்றனர்.

அபிக்கும் சீதாவுக்கு காதல் வருகிறது.

வீடு திரும்பும் சீதா அப்பாவை சந்திக்க… அப்போதுதான், அபி தன்னோடு வந்தது அவன் ஊருக்கு அழைத்தது இவை முன் கூட்டியே போடப்பட்ட திட்டம் என்று தெரிய வருகிறது.

ஏன் அது? சீதாவின் காதல் என்ன ஆனது என்பதே படம்.

இரண்டு நிமிட தாமதம் காரணமாக உயிர் பிழைக்கும் சீதா அதற்கு காரணமானவர்களை சந்தித்தது நன்றி சொல்கிறாள் என்ற அந்த ஒன லைன் அட்டகாசம். பாராட்டுகள் கதை ஆசிரியர் அர்ஜுனுக்கு.

மகள் இல்லாத காட்சி ஒன்று கூட இல்லாமல் இருக்கக் கூடாது என்று திட்டமிட்டு திரைக்கதை அமைத்து இருக்கிறார் அர்ஜுன்.

மனிதனின் நல்ல பண்புகளைச் சொல்கிற – கெட்டவர்களுக்குள் இருந்தும் நல்ல உணர்வை வெளிவரச் செய்கிற – பாங்கு அருமை.

கலர்புல்லான, காரமான தெலுங்கு நெடி பின்புலத்தோடு காட்சிகளை இயக்கி இருக்கிறார் அர்ஜுன். அவர் நடித்திருக்கும் கவுரவத் தோற்றம் அருமை.

அனுப் ரூபன் இசை உணர்வுக்கு குவியலுக்கு உதவுகிறது. பாலமுருகனின் ஒளிப்பதிவு ஆக்ஷன் காட்சிகளில் மாஸ் ஆகவும் செண்டிமெண்ட் காட்சிகளில் கிளாஸ் ஆகவும் இருக்கிறது.

நீளம் என்ற விஷயம் தவிர அயூப்கானின் படத்தொகுப்பும் நன்றாக இருக்கிறது.

ஐஸ்வர்யா அர்ஜுன் ஜஸ்ட் லைக் தட் சீதா கேரக்டரை அழகாக நடிக்கிறார். அபியாக வரும் நிரஞ்சன் பொருத்தம்.

சீதாவின் அப்பாவாக சத்யராஜும் அபியின் தாத்தாவாக பிரகாஷ்ராஜூம், சாலையோர டீக்கடை பெண்மணியாக கோவை சரளாவும் சிறப்பான பங்களிப்பு கொடுத்துள்ளனர்.

அடிப்படையில் காட்சிகள் நன்றாக இருந்தாலும் அவற்றின் விவரணை அரதப் பழசு.

பழம் விற்கும் சிறுமிக்கு வரும் கடத்தல் பிரச்னை உட்பட எல்லாம் இட்டுக்கட்டப்பட்ட பிரச்னைகளாகவே இருக்கின்றன. இன்னும் வேறு சிக்கல்கள் வேறு மாதிரியான உதவிகள் என்று போயிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அபியின் தாத்தா வீட்டில் நடக்கும் சம்பவங்களை எல்லாம் இதைவிட சிறப்பாக, இருபது ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் பார்த்து விட்டோம்.

ஏகத்துக்கும் நீளம் வேறு. செயற்கையாகவும் இருக்கிறது

ஒரு மழைக் காட்சியில் சில ஷாட்களில் மழை மிஸ்ஸிங்.

துருவ் ஷார்ஜா காட்சிகள் எல்லாம் திணிப்போ திணிப்பு.

உண்மையில் இந்தக் கதையை, சந்திப்புகள், தாமதம், வரும் வழியில் நன்றி கூறுதல் அதன் விளைவுகள் என்ற நிலையில் முடித்து இருந்தாலே படம் அட்டகாசமாக இருந்திருக்கும்.

சீதாவுடன் அபி வந்தது முன்கூட்டியே போடப்பட்ட திட்டம் என்பது எல்லாம் தேவையே இல்லாத எக்ஸ்ட்ரா வெயிட்.

விளைவு? அழகான சாலை (கதை), வசதியான வாகனம் (நல்ல நடிகர்கள்) இருந்தும், சீதாவின் ரிட்டர்ன் பயணமும் ரொம்ப தாமதமாகி, அலுப்பை ஏற்படுத்தி விட்டு, ஒரு வழியாக கார் பிரேக் டவுன் ஆவதற்கு சில நொடிகள் முன்பாக வந்து சேர்கிறது.

சீதா பயணம்… ராமாயண நீளம்!

– சு. செந்தில் குமரன்

Comments (0)
Add Comment