எம்.ஜி.ஆரை ஈர்த்த வசீகர ஆளுமை!

நாயகனைக் கவர்ந்த நாயகன்: தொடர்- 2

எம்.ஜி.ஆரைப் போலவே 1930-களின் மத்தியில் திரையுலகில் பிரவேசித்த எரோல் ஃப்ளின் அடுத்த சில ஆண்டுகளிலேயே உலகப் புகழ்பெற்ற ஆலிவுட் நாயகன் என்ற அந்தஸ்தை எட்டிப் பிடித்தார்.

1935ஆம் ஆண்டு, வார்னர்ஸ் பிரதர்ஸ் தயாரித்த “கேப்டன் ப்ளட்” என்ற படத்திற்கு பின்னர், எரோல் ஃப்ளின் ஆலிவுட்டின் அட்வெஞ்சர் நாயகனாக உருவெடுத்தார்.

கேப்டன் ப்ளட் படத்திற்கு லெட்ஸ்லி ஹவர்டு, ஜேம்ஸ் கேக்னி போன்ற மிகப்பெரிய நடிகர்களுடன் சேர்த்து எரோல் ஃப்ளினுக்கும் தேர்வு நடைபெற்றது.

ஆனால், எரோல் ஃப்ளின் மட்டுமே தேர்வு செய்யப்பட்டார். இந்தப் படத்தை ஆலிவுட்டின் அப்போதைய பிரபல இயக்குநர் மேக்கைல் கர்டிஸ் (Michael Curtiz) இயக்கினார்.

படம் அமோக வெற்றியைப் பெற்றது. எரோல் ஃப்ளின் குறிப்பிடத் தக்க ஆலிவுட் நாயகனாக உலகம் முழுவதும் அறியப்பட்டார்.

தொடர்ந்து “அந்தோனி அட்வெர்ஸ்”, “தி சார்ஜ் ஆப் த லைட் பிரிகேட்” என வார்னஸ்ஸ் நிறுவனத்தின் பல வெற்றிப் படங்களில் நடித்தார் ஃப்ளின்.

இதற்கிடையே, கப்பல் பயணத்தின் போது சந்தித்த லில்லி டமிட்டாவை திருமணம் செய்து கொள்கிறார். இவர்தான் ஃப்ளின் வாழ்க்கையில் துணையாக வந்த முதல் மனைவி. ஆனால், இருவரும் சில ஆண்டுகளிலேயே பிரிந்து விட்டனர்.

1938 ஆம் ஆண்டு வெளியான “தி அட்வெஞ்சர்ஸ் ஆப் ராபின் ஹூட்” படத்திற்குப் பிறகு எரோல் ஃப்ளின் புகழின் உச்சிக்கு செல்கிறார்.

மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்தப் படத்தின் மூலம், அட்வெஞ்சர் நாயகன் என்ற புகழுடன், புரட்சிகரமான சாயலும் எரோல் ஃப்ளினுக்கு வந்து வாய்க்கிறது.

வார்னர்ஸ் பிரதர்ஸ் நிறுவனம் அதுவரை தயாரித்திருந்த படங்களிலேயே அதிக பொருட்செலவைக் கொண்டது இப்படம். வார்னர்ஸ் நிறுவனத்தில் மட்டும் 18 ஆண்டுகளில் 35 திரைப்படங்கள் நடித்திருக்கிறார் ஃப்ளின்.

இந்த படத்தில் ஃப்ளினுக்கு ஜோடியாக நடித்தவர் ஒலிவியா டி ஹாவிலாண்ட். இவர் எரோல் ஃப்ளினின் இரண்டாவது மனைவி ஆனார்.

தொடர்ந்து பல படங்களில் அட்வெஞ்சர் நாயகனாகவே எரோல் ஃப்ளின் தொடர்ந்து நடித்து வந்தார். எரோல் ஃப்ளினின் இத்தகைய “போராட்ட நாயகன்” என்ற வசீகரமான ஆளுமையே எம்.ஜி.ஆரை ஈர்த்திருக்க வேண்டும்.

1950ல் வெளிவந்த மருதநாட்டு இளவரசிக்கு பின்னர் மர்மயோகி, சர்வாதிகாரி, மந்திரி குமாரி என மன்னராட்சிக்கும், சர்வாதிகாரப் போக்கிற்கும் எதிராக போராடும் வேடங்களிலேயே எம்.ஜி.ஆர். தொடர்ந்து நடித்து வந்தார்.

இதன் உச்சமாக 1958ல் வெளி வந்த ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தைச் சொல்லலாம். ஒரு கட்டத்தில் அட்வெஞ்சர் நாயகனாக புகழ் பெற்ற எரோல் ப்ளினை, நகைச்சுவை நாயகனாகவும் நடிக்க வைத்து அழகு பார்த்தது வார்னர்ஸ் நிறுவனம்.

இதே போல 1961ம் ஆண்டு புகழின் உச்சியில் இருக்கும் போது “சபாஷ் மாப்பிள்ளே” என்ற முழு நீள நகைச்சுவைத் திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். நடித்தது குறிப்பிடத் தக்கது.

அதே நேரத்தில் “என் தங்கை”, “பாசம்” போன்ற நெஞ்சைப் பிழியும் சோகப்படங்களிலும் எம்.ஜி.ஆர். நடித்திருக்கிறார்.

ஆனால், எம்.ஜி.ஆரால் ரசிக்கப்பட்ட எரோல் ஃப்ளின், அதுமாதிரியான சோகப்படங்களில் இறுதிவரை நடிக்கவில்லை.

எம்.ஜி.ஆரைப் பற்றிய சுவையான கதையாடல்கள் (அவற்றில் சில மிகையானதாகவும், பொய்யானதாகவும் இருப்பினும் கூட) தமிழ்ச் சூழலில் இன்றும் உலாவருவதைப் போல், எரோல் ஃப்ளின் குறித்த ரகசியங்கள் இன்றளவும் ஆலிவுட்டில் பேசப்பட்டு வருகின்றன.

அவற்றில் சில புத்தகங்களாகவும், ஆவணப்படங்களாகவும் கூட வெளி வந்து கொண்டே இருக்கின்றன. அவற்றில் ஒன்று நம்ப முடியாத சுவாரஸ்யம்.

லண்டனின் நார்தாம்டன் ஃப்லிம் ஸ்டுடியோவில் அவர் தங்கி நடித்து வந்த போது, அருகில் உள்ள துணிக்கடையின் வாடிக்கையாளராக இருந்துள்ளார்.

அப்போது அங்கு கடனாக வாங்கிய ஆடைக்கு தன்னால் பணம் கொடுக்க இயலாமைக்கு வருந்துவதாக அவர் எழுதிய கடிதம் கடந்த 2013ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

எரோல் ஃப்ளின் மறைந்து 50 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தக் கடிதம் வெளி வந்தது. இதுபோல எரோல் ஃப்ளின் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் ஆலிவுட் உலகில் இன்றளவும் வட்டமடித்துக் கொண்டே இருக்கின்றன.

அதுமட்டுமின்றி பின்னாளில் உலக வரலாற்றில் பேராளுமைகள் சிலரை, எரோல் ஃப்ளின் தன் சமகால வாழ்வில் சந்தித்தும், அளவளாவியும், உடன் பணியாற்றியும் கூட இருக்கிறார்.

1940ல் வெளி வந்த சந்தா ஃபே ட்ரெய்ல் (Santa Fe Trail) திரைப்படத்தில், பின்னாளில் அமெரிக்காவின் அதிபராக பதவியேற்ற ரொனால்ட் ரீகனுடன் எரோல் ஃப்ளின் நடித்துள்ளார்.

50-களின் இறுதியில், கியூபாவில் புரட்சி நடத்திக் கொண்டிருந்த ஃபிடல் காஸ்ட்ரோவை நேரில் சந்தித்த நிகழ்வு, எரோல் ஃப்ளினின் வாழ்க்கையை வரலாற்றின் முக்கிய சாட்சியாக காலக் கல்வெட்டில் பதிவாகி விட்டது.

(தொடரும்…)

– மனோலயன்

Comments (0)
Add Comment