பழைய தோல்விக் கதை: புதுத் தலைப்பில் மாபெரும் வெற்றி!

தமிழில் ஏற்கனவே பிளாப் ஆன தனது பழைய படக் கதையைப் பட்டி, டிங்கரிங் செய்து மீண்டும் உருவாக்கி வெற்றி கண்டார் தயாரிப்பாளர் எம்.சரவணன். அந்தப் படம் தான் மனோரமா நடிப்பில் வெளிவந்த ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’. 

பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற இந்தப் படத்தில் இடம்பிடித்த, ‘சூப்பர்’ கார் காட்சி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

ஏவிஎம் நிறுவனம் தயாரித்த சிறந்த காமெடி படங்களில் ஒன்றாக இருக்கிறது ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’. சித்ராலையா கோபு எழுத்தில், ராஜசேகர் இயக்கிய இந்தப் படத்தில் பாண்டியராஜன், ஊர்வசி ஆகியோர் ஜோடியாக நடித்திருப்பார்கள்.

படத்தின் முக்கியக் கேரக்டரில், டைட்டிலைக் குறிக்கும் விதமாக அமைந்திருக்கும் பாட்டி வேடத்தில் நடித்திருப்பார் மனோரமா.

சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி, கோவை சரளா, எஸ்எஸ் சந்திரன், ஒய்ஜி மகேந்திரன், செந்தில், ஆனந்தராஜ், வெண்ணிற ஆடை மூர்த்தி உள்பட பலரும் படத்தில் நடித்திருப்பார்கள்.

பாட்டி – பேரன் பாசம்:

பணக்காரப் பாட்டியாக வரும் மனோரமா, பேரன் பாண்டியராஜன் மீது அளவு கடந்த பாசத்தை வைத்திருப்பார்.

எதிர்பாராத சந்தரப்ப சூழ்நிலையால் ஊர்வசியை சந்திக்கும் பாண்டியராஜன் அவரை திருமணம் செய்துகொள்ள நேர்கிறது.

தனது திருமணத்தை மறைக்க பாண்டியராஜன் செய்யும் வேலைகளும், அவர் சந்திக்கும் பிரச்னைகளும், அதிலிருந்து மீள, பாட்டியாக வரும் மனோரமா எப்படி உதவுகிறார் என்பதை நகைச்சுவை எமோஷனல் கலந்த கதையாகக் கூறியிருப்பார்கள்,

பிரதான கதாபாத்திரத்தில் தோன்றும் மனோராமா நடிப்பு ராட்சசியாக படத்தில் தனது முத்திரை பதித்திருப்பார். அவரது கணவராக எஸ்எஸ் சந்திரன் காமெடியில் கலக்கியிருப்பார்.

சில்க் ஸ்மிதா அப்பாவி போல் தோன்றி வில்லத்தனத்தை வெளிப்படுத்தும் கேரக்டரில் நடித்திருப்பார்.

ரசிகர்களைக் கவர்ந்த ‘சூப்பர்’ கார்:

பாண்டியராஜன் சினிமா கேரியரில் திருப்புமுனை ஏற்படுத்திய படங்களில் ஒன்றாக ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ படம் அமைந்தது. இந்தப் படம் வெளியான 1988 ஆண்டு பாண்டியராஜனுக்கு பிளாக் பஸ்டர் ஆண்டாகவே அமைந்தது.

‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ படத்துக்கு முன் வெளியான ஊரை தெரிஞ்சுகிட்டேன், கதாநாயகன் படங்கள் சூப்பர் ஹிட்டாக, இந்த படம் வெற்றி பெற்று அவருக்கு ஹாட்ரிக் ஹிட் கொடுத்தது.

அதேபோல் மனோரமாவுக்கு போட்டியாக நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கும் ஊர்வசிக்கும் முக்கிய படமாக இது அமைந்தது.

இந்தப் படத்தின் க்ளைமாக்ஸில் வரும் சண்டை, சேஸிங் காட்சியில் இடம்பெறும் சூப்பர் கார் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து.

அப்போது பிரபலமாக இருந்த வோக்ஸ்வாகன் பீட்டில் மாடல் காரை வைத்து இந்த காட்சியை உருவாக்கியிருப்பார்கள்.

இதை சூப்பர் கார் என கூறி காமெடியாக நிகழ்த்திய சில சாகசங்கள், மேஜிக்குகள் படத்தை மீண்டும் பார்க்க திரையரங்குகளுக்கு வரும் விதமாக ரசிகர்களை தூண்டின

சந்திரபோஸ் இசை:

படத்துக்கு வைரமுத்து பாடல் வரிகள் எழுத, சந்திரபோஸ் இசையில் பாடல்கள் அனைத்து சூப்பர் ஹிட்டாகின. டெல்லிக்கு ராஜானாலும் ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ என்ற பாடல் படத்தின் ஐகானிக் பாடலாக அமைந்தது. இந்தப் பாடலை மனோரமாவே பாடியிருப்பார்.

சில்வர் ஜூப்ளி:

‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ கதையை மூலக் கதையாகக் கொண்டு 1959-ல் வெளிவந்த படம் மாமியாரை மெச்சின மருமகள். இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.

ஆனால், கதை மீது மிகுந்த நம்பிக்கைக் கொண்டு அதில் சில மாற்றங்களை செய்து ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ என்ற பெயரில் உருவாக்கி வெற்றி கண்டார் படத்தின் தயாரிப்பாளர் ஏவிஎம், எம். சரவணன்.

225 நாள்கள் வரை ஓடிய இந்தப் படம் சில்வர் ஜூப்ளி படமாக மாறியது. தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு, வெற்றியைக் கண்டது. 1980களில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த காமெடி படமாக ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ அமைந்திருக்கும்.

– நன்றி: முகநூல் பதிவு.

Comments (0)
Add Comment