பாரதிராஜா, ஷங்கர் ஆகியோரை அடுத்து, தொடர்ச்சியாக ஐந்து வெற்றிப்படங்களை கொடுத்தவர் என்ற பெருமை லோகேஷ் கனகராஜுக்கு ‘லியோ’படம் மூலம் கிடைத்துள்ளது.
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களைத் தொடர்ந்து லோகேஷ் இயக்கிய ‘லியோ’ படமும் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
விஜய் நடிப்பில் உருவான லியோ’ கடந்த மாதம் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் த்ரிஷா, கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
’லியோ’ கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் குறை ஏதும் வைக்கவில்லை.
முதல் நாளில் உலகம் முழுவதும் 148.5 கோடி ரூபாய் வசூலை ஈட்டியதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.
உலகம் முழுவதும் முதல் வாரத்தில் லியோ 470 கோடி ரூபாய் வசூலித்தது. அதன் பின் வசூல் வேகம் குறைந்தது. இரண்டாவது வாரத்தில் 80 கோடி ரூபாயும், மூன்றாவது வாரத்தில் 50 கோடி ரூபாயும் வசூலித்தது.
‘லியோ’ ரிலீஸுக்குப் பிறகு பெரிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இதனால் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் ஓரளவு கலெக்ஷன் அதிகரித்தது.
இதையடுத்து 21 நாட்களில் லியோ திரைப்படம் 600 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜயின் படங்களில் அதிக வசூலை குவித்த படம் என்ற பெருமையை ‘லியோ’ பெற்றுள்ளது. எனினும் அவர் ரஜினியை தொடவில்லை.
தமிழ் சினிமாவில், ரஜினிகாந்தின் ‘2.0’ திரைப்படம் 700 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை அள்ளி முதலிடத்திலும், ‘ஜெயிலர்’ 650 கோடி ரூபாய் வசூல் குவித்து இரண்டாம் இடத்திலும் உள்ளது.
தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த 3-வது படமாக ‘லியோ’ உள்ளது.
தீபாவளியை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) ‘ஜப்பான்’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளதால், ‘லியோ’ இனிமேல் பெரிய அளவில் வசூல் செய்ய வாய்ப்பில்லை என சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன.
லியோ திரைப்படம் வரும் 21 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாகவும், பிரபல நிறுவனம் இதனை பெரிய விலை கொடுத்து வாங்கியுள்ளதாகவும் தகவல்.
– பாப்பாங்குளம் பாரதி.