துணை நடிகர்கள் அடிமைகளா?

திரைத்துறையைப் பொறுத்தவரை குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் பெரிய நட்சத்திரங்களாகவும் சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்களாகவும் இருப்பதால் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் கொடுமைகளை வெளியே சொல்ல முடியாமல் பல பெண் கலைஞர்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.

கேரள சினிமாத்துறையில் எழுந்த பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக, ஹேமா குழுவின் அறிக்கை நம்பிக்கையையும், துணிவையும் கொடுத்துள்ளது. முன்னணி பெண் திரைக்கலைஞர்கள் நிலையைவிட மிக மோசமானது பெண் துணை நடிகர்கள் மற்றும் சிகையலங்கார கலைஞர்களின் நிலைமை.

“துணை நடிகர்கள் அடிமைகளாகப் பயன்படுத்தப்படுகின்றனர். படப்பிடிப்புத் தளங்களில் அவர்களுக்கு கழிவறை வசதிகூடச் செய்து தரப்படுவதில்லை. காலை 9 மணியில் இருந்து மறுநாள் அதிகாலை 2 மணிவரைகூட அவர்கள் பணிபுரிய வைக்கப்படுவதாக” ஹேமா கமிட்டி அறிக்கை கூறியுள்ளது.

இந்த அறிக்கை வெளியான உடனே, கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு எந்தப் பெண்ணும் காவல் துறையில் புகார் அளித்தால், அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என அறிவித்தது.

அதன்படி புகாரின் பேரில் முன்னணி நட்சத்திரங்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹேமா கமிட்டி மூலம் புகார்களையும், குற்றச்சாட்டுகளையும் விசாரிக்க கேரள அரசு சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைத்துள்ளது.

பெண்கள் மீதான பாலியல் சுரண்டலைத் தடுக்க, குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கண்டறிந்து கேரள அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்.

இந்நிலையில் பாலின நீதிக்கான நடவடிக்கைக்கு ஆதரவாக இருப்பதற்கு பதிலாக பாதிக்கப்பட்டவர்களின் அதிர்ச்சியை அதிகரிக்கும் வகையில் கேரள எதிர்க்கட்சிகள், இப்பிரச்சனையில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பது அருவருப்பானது.

நன்றி: தீக்கதிர் நாளிதழ் தலையங்கம்  2024 ஆகஸ்ட் 31.

Comments (0)
Add Comment