படப்பிடிப்புக்கு அதிக காலம் எடுத்துக் கொண்டாலும், கடைசியில் பேசப்படும் படத்தைத் தருபவர் வெற்றிமாறன். அதே போல படத்தை முடிக்க ரொம்ப காலம் எடுத்துக் கொண்டாலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் படத்தை கொடுப்பவர் சிலம்பரசன்.
இருவரும் முதன்முறையாக இணைந்து இருக்கும் படம் ‘அரசன்’. சிப்பாய் என்றால் சீக்கிரம் வருவார். இவர் அரசன்.
ஆனாலும் அரசன் அவ்வளவு தாமதம் ஆக வாய்ப்பு இல்லை. வேலை வேகமாக நடக்கிறது என்கிறார்கள். தயாரிப்பு கலைப்புலி தாணு. இசை அனிருத். அனிருத்தும் வெற்றி மாறனும் இணையும் முதல் படம் இது.
வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை படம் பெரிதாக பேசப்பட்டது. வடசென்னை பின்னணியில் வேறு சில கதைகளும் இருக்கு என்றார் வெற்றிமாறன். இதுவும் வட சென்னை பின்னணியில் உருவாகும் கேங்ஸ்டர் படம்தான்.
1990-களின் காலகட்டத்தில் நடக்கும் கதை. வடசென்னையில் அதிகார மோதல்கள் மக்களின் வாழ்க்கை நிலை இவற்றை அடிப்படையாக வைத்து வரும் ஆக்ஷன் கிரைம் திரில்லர் படம் இது.
ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர் என்று நட்சத்திரப் பட்டியல் மின்னுகிறது.
மாநாடு படத்துக்குப் பிறகு கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படம் நல்ல பெயரை வாங்கியது.
பத்து தலை சுமாராகப் போனது. கமல் மணிரத்னம் என்று பெரிய பட்டாளத்தோடு இணைந்து சிம்பு நடித்த தக் லைஃப் பெரும் தோல்விக்கும் கிண்டலுக்கும் ஆளானது.
கமல் மட்டுமல்ல, சிம்பு கூட இப்படி ஒரு படத்தில் நடிக்கலாமா என்று ரசிகர்கள் கடித்துக் குதறினார்கள்.
இப்படியாக, மாநாடு படத்துக்குப் பிறகு கூட்டமே பார்க்காமல் இருக்கும் சிம்புவுக்கு இந்த அரசன் மாஸ் கம்பேக் படமாக இருக்கும் என்கிறார்கள்.
உண்மையில் இது தனுஷுக்காக வெற்றிமாறன் எழுதிய கதை. ஏதோ ரூட்டில் டேக் டைவர்சன் எடுத்து சிம்புவுக்கு வந்து விட்டது.
இதே சில வருடங்களுக்கு முன்பு நடந்திருந்தால் ரசிகர்கள் மத்தியில் இது ஒரு கவுரவ விஷயமாக மாறி இருக்கும். இப்போது இல்லை.
தனுஷ் சிம்பு ரசிகர்கள் மேலும் பக்குவத்துக்கு வந்திருக்கிறார்கள் (பின்னே? அவங்களுக்கும் வயசு ஆகுதுல்ல?)
அதேபோல விஜய் சேதுபதி இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. இப்போது அதுவும் கேன்சல்.
உண்மையில் வெற்றிமாறனின் முதல் படமான பொல்லாதவன் படத்தை அடுத்தே வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், நடக்கவில்லை.
உண்மையில் வட சென்னை படத்தில் சிம்பு நடிப்பதாக இருந்தது. அதுவும் சிம்பு கால்ஷீட் கொடுக்க முடியாததால் நடக்கவில்லை.
சென்னையில் வசித்த சிவா என்ற ரவுடியின் கதை இது என்று ஒரு பக்கம் சொல்கிறார்கள். சம்மந்தப்பட்டவர்களிடமே இந்தக் கதையை வெற்றிமாறன் டிஸ்கஸ் செய்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
படத்தில் சிம்புவின் லுக்குக்கும் அந்த சிவாவின் தோற்றத்துக்கும் ஆறு வித்தியாசம் கூட இல்லை என்கிறார் ஒரு சிம்பு ரசிகர் (அவர் சிவாவின் ரசிகராகவும் இருக்கலாம். யார் கண்டது?)
படத்தில் நாயகன் மதுரையில் இருந்து பின்னர் சென்னை வருவதாக மாற்றி இருக்கிறார் வெற்றிமாறன் என்கிறார்கள் (கற்பனை! கற்பனை!) தவிர கபடி வீரராகவும் வருகிறாராம் சிம்பு.
சென்ற வருடம் அக்டோபர் மாதம் வெளியான விளம்பர வீடியோவே ரகளையாக இருந்தது.
கோர்ட் வாசலில் தாடியுடன் நிற்கும் சிலம்பரசனிடம், வீடியோ செய்தியாளராக இருக்கும் இயக்குனர் நெல்சன் பேட்டி எடுக்க,
“நான் சொல்லப் போறது எல்லாம் உண்மை. ஆனா, நீங்க படமா எடுத்தா அதை அப்படியே உண்மைக் கதைன்னு போட்றாதீங்க.
அப்புறம் விஷயம் வெளிய வந்தா சில அரசியல்வாதிகள், அதிகாரிகள், வக்கீல்கள் ஏன் சில நீதிபதிகளே கூட மாட்டிக்குவாங்க.
வேண்ணா எல்லா படத்திலும் போடற மாதிரி ‘படத்தில் வரும் சம்பவங்கள் எல்லாம் கற்பனையே’ ன்னு போட்டுக்குங்க. தனுஷை என் கேரக்டர்ல நடிக்க வைங்க. சூப்பரா நடிப்பாரு” என்று சொல்லும் சிம்பு,
அப்படியே கோர்ட்டுக்குள் போய் ”நான் கொலையே செய்யல” என்று நீதிபதியிடம் சொல்கிறார்.
தொடர்ந்து அவர் கையில் ரத்தம் வழியும் கத்தி, கோபம் கொப்பளிக்கும் முகம், வெறி கொண்ட கண்கள் இவற்றோடு நடந்து வரும் காட்சிகள் வர, அந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன் வெளியீட்டுக்கு சிம்பு வருவதாக இருந்தது. ஆனால், வரவில்லை. டி.ராஜேந்தர், இயக்குனர் மிஷ்கின் ஆகியோர் வந்தனர்.
புரோமோ பற்றி பேசிய மிஷ்கின், “புரோமோ மிக அற்புதம். வெற்றிமாறன் பட உருவாக்கமே அருமையாக இருக்கும். நாங்களும் அதை எல்லாம் பார்த்து முயன்று கொண்டே இருப்போம்.
இந்த புரோமோவும் வியக்க வைக்கிறது. இந்த புரோமோவில் வெற்றிமாறன் உழைப்பு தெரிகிறது.
இதுவரை சிம்புவை இப்படிப் பார்த்தது இல்லை. இந்தப் படம் சிம்புவை வேறு ஒரு களத்துக்கு கொண்டு செல்லும்.
இந்தியாவின் மிகப்பெரும் நடிகராக சிம்பு வருவதற்கான அனைத்து சாத்தியங்களும் இதில் இருக்கின்றன.
சிம்புவுடன் இணைந்து படம் எடுக்கத் தயாராக இருக்கிறேன். கதையெல்லாம் பேசி ஓகே ஆகிவிட்டது. தயாரிப்பாளரைத் தேடிக் கொண்டிருக்கிறோம். வெற்றிமாறனின் படத்தில் டீ கொடுக்கும் காட்சிக்கு அழைத்தால் கூட நான் நடிப்பேன்” என்றார்.
உண்மையில் அந்த விளம்பர வீடியோவில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் உண்டு.
வீடியோவின் ஆரம்பக் காட்சிகள் நிகழ்காலத்தில் நடக்கின்றன. அடுத்து 1991 ஆண்டு கால காட்சிகள் வருகின்றன. கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தைப் பார்க்க நண்பர்களுடன் சென்றதாக சொல்கிறார்.
ஏப்.14, 1991 அன்று வெளியான படம் கேப்டன் பிரபாகரன்.
இங்கே ஒரு சுவாரஸ்யம். வடசென்னை படத்தில் இளவயது அன்பு (தனுஷ்) அறிமுகமாவது ராஜீவ் காந்தியின் படுகொலை நாளான மே. 21, 1991.
அதற்கு ஏற்ப அரசன் புரோமோவில் சிம்பு நடந்துவரும்போது ஒரு வீட்டின் சுவரில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் போஸ்டரில், சிவராசன் மற்றும் தனுவின் புகைப்படம் இருக்கிறது.
வெற்றி மாறனின் நேர்த்திக்கு இது ஒரு உதாரணம்.
இந்தப் படத்தில் நடிகர் கவினும் மணிகண்டனும் கிரியேட்டிவ் டீமில் இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. (நீங்க நடிக்க ஒரு நல்ல கதையை கிரியேட் பண்ணுங்க கவின்).
படம் பற்றி கவின், “அரசன் படம் பற்றி, அதன் கதை பற்றி எனக்கு எல்லாமே தெரியும். ஆனால், அதை நான் வெளியே சொல்ல முடியாது. படம் தரமாக இருக்கும். வெற்றிமாறன், சிம்பு, அனிருத் இவர்களின் காம்பினேஷன் இந்தப் படத்தின் பெரிய பிளஸ்” என்று சொல்லி இருந்தார்.
கிச்சா சுதீப் அல்லது உபேந்திரா ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள் என்றும் தகவல்.
அரசன் படப்பிடிப்பு வடசென்னைப் பகுதியை அப்படியே செட் போட்டு படப்பிடிப்பு துவங்கும் என்று முதலில் சொன்னார்கள். பிறகு மதுரைப் பகுதியை முடித்துவிட்டு வர முடிவு எடுத்தார்கள்.
முதல் கட்டப் படப்பிடிப்பு டிசம்பரில் கோவில்பட்டியில் துவங்கி பதினெட்டு நாட்கள் நடந்தது.
படப்பிடிப்பில் கிளீன் ஷேவ் லுக்கில் சிம்பு கலந்து கொண்டதன் புகைப்படங்கள் அப்பவே வைரல். அது பிளாஷ்பேக் காட்சிகள் என்று கூறப்பட்டது. படத்தில் தாடி, மீசை கெட்டப்பும் உண்டு. இளமை, முதுமை என்று கெட்டப்பில் வருகிறார் சிம்பு.
முதல் கட்டப் படப்பிடிப்பிலேயே சிம்புவின் நடிப்பில் வெற்றிமாறனுக்கு ரொம்ப திருப்தி; வெற்றிமாறனின் நீளமான ஷாட்களில் ஒரே டேக்கில் சிம்பு நடித்து அசத்தினார் என்பது செய்தி.
தவிர படப்பிடிப்பு முடிந்தவுடன் அடுத்த நாள் காட்சிகள் பற்றி டிஸ்கஸ் செய்து சிம்பு காட்டிய ஆர்வம் வெற்றிமாறனுக்கு ரொம்ப சந்தோசம் கொடுத்தது என்கிறார்கள்.
படத்தின் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
படம் தெலுங்கிலும் வருகிறது.
தேர்தல் முடிந்த உடன் படம் வெளிவரும் என்கிறார்கள். ஆக, தமிழ்நாட்டின் அடுத்த ஜனநாயக அரசன் யார் என்று முடிவான உடன் வெற்றிமாறன் சிம்புவின் அரசன் வெளிவரும்.
– சு.செந்தில்குமரன்